வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday, 1 May 2018

அஞ்சலி லெஸ்றர் ஜேம்ஸ் பீரிஸ் இலங்கை சினிமா மொழியின் மா கலைஞன்

அஞ்சலி
லெஸ்றர் ஜேம்ஸ் பீரிஸ்


இலங்கை சினிமா மொழியின் மா கலைஞன்

சினிமா என்ற கலையின் மூலம் சிங்கள மக்களின் கலாசாரம் வரலாறு பண்பாடு ஆகியவற்றை உலகறியச் செய்த மா கலைஞன்.
கிட்டத் தட்ட இருபது படங்களை இயக்கி பல சர்வதேச விருதுகளைப் பெற்று இலங்கை சினிமாவுக்கு சர்வதேச அங்கிகாரம் கிடைக்க வழி செய்தவர்.
நல்ல சினிமாவுக்கு மொழி ஒரு தடை அல்ல என்பதை அவரது படங்கள் நிருபித்தன.

கம்பரலிய மனதை வசீகரித்த திரைக் காவியம்.மடுல் டுவ நம் இளமைக் கால வாழ்வின் படப் பிடிப்பு.
கம்பரலிய
ஹொலு கதவத
நிதானய
The God King
மடுல் டுவ
வீர புரன் அப்பு
கலியுகய
யுகாந்தய
ஆகிய படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

நான் பார்த்த எல்லா படங்களுமே இப்போது நினைத்தாலும் அந்த திரை மொழி காட்சிகள் மனதில் பதிந்த ஒன்றாகவே நீள்கிறது.
உலக சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் என்பதை அவர் திரை மொழி எப்போதும் நிருபித்துக் கொண்டே இருக்கும்.

அவர் வாழ் நாள் வரை அவரை சிங்கள கலையுலகம் கொண்டாடிக் கொண்டே இருந்தது ஒரு யுகக் கலைஞனாய் தங்கள் மிகப் பெரிய சொத்து என கலைஞர்களும் அறிவார்ந்தவர்களும் அவர் நிழலில் பெருமை கொண்டனர்.

அந்த மா கலைஞனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது 2005ஆம் ஆண்டு என நினைக்கிறேன் கொழும்பில் நிகழ்த்து கலைகளுக்கான பல்கலைக் கழக ஆரம்ப நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீடாதிபதி என்ற வகையில் அழைக்கப் பட்டிருந்தேன் நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன் நான் சென்றிருந்தேன் முன் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார் எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் இருந்தது .அப்போது சனத் நந்த சிறி எனக்கு பல்கலைக்கழக மானியக் கூட்டங்களில் அறிமுகமாயிருந்தார் அவரிடம் என் விருப்பத்தை சொல்லி நான் லெஸ்ரரிடம் கதைக்க வேணும் என்று சொல்ல அவர் லெஸ்ரரிடம் என்னை அறிமுகப் படுத்த எனக்கு கை தந்து புன் முறுவலுடன் வாழ்த்துச் சொல்லி தலையில் தொட்டு ஆசிர்வதித்த அந்த தருணத்தை நினைத்துப் பார்க்கிறேன் .
என் இறுதி வணக்கம் அந்த மா கலைஞனுக்கு .


Monday, 30 April 2018

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

யாழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பி அவர் பார்த்து பார்த்து ஒரு சிற்பத்தை செதுக்குவது போல பல்கலைக் கழகத்தை அதன் கல்விசார் புலங்களை வடிவமைத்தவர் தீர்க்கதரிசனம் மிக்க செயல் பாடே1974 ஆம் ஆண்டு யாழ் பலகலைக் கழகத்தை உருவாக்கியது.

பல்கலைக் கழகம் தொடங்கப் படுகிற போது பல எதிற்புகள் வந்தாலும் அரனை முறியடித்து வெற்றிகரமாக செயல்பட வைத்தவர்.
பேராசிரியரின் இலக்கிய முகம் பற்றியே எல்லோரும் பெரிதாக பேசுவது மரபு ஆனால் அவரது அரசியல் முகம் புரட்சிகர அரசியல் மயப் பட்டது கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட பேராசிரியர் எழுதிய அரசியல் கட்டுரைகள் முக்கியம் வாய்ந்தவை அவரது போராட்ட முகத்தை தொழிலாளர் சார்பை வெளிப்படுத்துபவை.சோசலிச கம்யூனிச கட்டுமானமே உலகத்துக்கு விடுதலை தரக் கூடியது என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர்.

நான் கம்யூனிச சித்தாந்தத்தை என் க.பொ த உயர்தர வகுப்பு காலங்களில் அறிந்தாலும் அதற்கான சரியான புரிதலை பேராசிரியரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் இன்று வரை அவர் பாச்சிய அறிவொளி அணையா நெருப்பாகவே உள்ளது.

எதையும் கேள்வி கேட்டு முன்னேறு என்பார்.
இன்று பத்திரிகைகள் ஊடகங்கள் டிஜிற்றல் மயமாகி சமூக மயப் பட்டு சாதிக்கா முடியாத் விடயங்களை அவர் தினகரன் ஆசிரியராக இருந்த போது சாதித்து காட்டினார்.அவர் நாடு முழுவதும் நிகழ்த்திய தினகரன் தமிழ் விழாக்கள் இன்றும் பலராலும் விதந்துரைக்கப் படுவதை பத்திரிகை வரலாறு நம் முன் ஆவணமாக உள்ளது எழுத்தை பரவலாக்கிய ஒரு பத்திரிகையாளனாகவும் அவரை நாம் இனங்காண முடியும்.
Image may contain: 1 person, sunglasses and outdoor எனக்கும் அவருக்குமான நேரடி நட்பு ஒரு ஐந்து வருசத்துக்கு உட் பட்டதுதான் ஆனாலும் என் ஆளுமை சார் அறிவின் நினைவொளியில் அவர் என் புலமைத்துவத்துக்கான அடிப்படைகளை ஆழமாக விதைத்தவர்.
அவரது விரிவுரைகளைத் தாண்டி அவருக்கும் எனக்குமான உறவு நீண்ட நேர உரையாடல்கள் அவரது வீட்டு நூலகத்தை நான் சுதந்திரமாக பயன் படுத்த அனுமதித்தமை ஒரு குடும்ப நட்பாக தொடர்ந்தமை அவரது பிள்ளைகள் பவித்திரா,சுமங்களா மனைவி ஆகியோரின் என் மீது மாறாத அன்பு என்பன இனிய நினைவுகளாய் எப்போதும்.


Mansoor A Cader
Mansoor A Cader அவரில் லயித்திருந்த ஒவ்வெரு கணமும் அற்புதமானது. அன்பும் ஆகர்ஷிப்பும் அலாதியானது. அவர் வீட்டில் சாப்பிடும் அளவுக்கு நம்மை நேசித்தார். இறுதியாண்டில் மெய்யியல பேராசிரியருடன் முரண்பட்டபோது சேதாரம் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தார். அவர் நம்மின் ஊட்டிய அறிவார்ந்த விளக்கஙகள் நன்றிக்கடனுக்குரிவை.

ஒருமுறை துவிசக்கர வண்டியில் வளாகம் வந்தபோது மகள் துவிச்சக்கர வண்டி இது. இன்று அவ காரில் போகிறா எனக்கூறி ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தையும் கூறினார். அவரின் ஆன்மா சாந்தி பெறுக.
Pena Manoharan
Pena Manoharan 2015 இல் பேரா.பா.ஆனந்தகுமாருடன் யாழ் ப.க. சென்றிருந்தபோது கைலாசபதி அரங்கம் முன்பாக அனுபூதி நிலையில் நின்ற கணங்கள் நினைவில்.வாசிப்பினால் மட்டுமே அறிவேன்.ஆனாலும் ஆசான் தான்.
Murugesu Natkunathayalan
Murugesu Natkunathayalan அவரோடு பழகிய நாட்கள் என் வாழ்வில் அற்புதமானவை.
Varathar Rajan Perumal
Varathar Rajan Perumal மாணவர்களுடன் ஆசிரியர்கள் எப்படி நல்ல நண்பர்களாகவும் இருப்பதற்கான பண்பாட்டுக்கு பேராசிரியரே உதாரணம்
Vijayaretthna Edwin
Vijayaretthna Edwin அவரிடம் பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் தமிழ் கற்றேன். பெரும் ஆளுமை எனினும் சுவாரஸ்யமாக விரிவுரையை கொண்டு செல்வார்...

பின்னால் கூட்டங்களிலும் நூல்களிலும் அவரது கருத்துக்களை அறிய முடிந்தது...


அவருடைய முக்கியமான கட்டுரைகள் இப்போது வெளிவரவேண்டியவை...

ஆனால் அவர் முன்வைக்கத் தொடங்கிய மாக்சிய அழகியல் பற்றி பின்னர் யாரும் கவனம் செலுத்தவில்லை...

அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களிற்கான பதில் அதில் உண்டு...
Saba Sabeshan
Saba Sabeshan பேராசிரியர் கைலாசபதி இலங்கையின் தமிழ் இலக்கிய உலகின் ஒரு சகாப்தம்..அவருடைய எழுத்தக்கள்..விமர்சன துறையில் அவர் ஆற்றிய பணி அநேகமான ஏகலைவர்களை உருவாக்கியுள்ளது....மார்க்சிச சித்தாந்தங்களின் நவீன சிற்பி

கஞ்சன் அம்மானை

கஞ்சன் அம்மானை

என் சின்ன வயதில் இருந்து கஞ்சன் அம்மானை என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது எங்கள் அய்யா அம்மாவின் அப்பா திருமிகு வீரகத்தி குமாரசாமி அவர்கள் தன் பரம்பரை சொத்தாக ஒரு ஏட்டை வைத்திருந்தார் அது கஞ்சன் அம்மானை ஏடு.அவர்கள் பரம்பரை பரம்பரையாக வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் வீட்டில் விளக்கு வைத்து ஏடு படித்து பத்தாம் நாள் பொங்கி மடை வைத்து கொண்டாடுவது ஒரு மரபாக இன்று வரை நீள்கிறது.

சாத்திரியார் புலவர் தாமோதரம் பிள்ளை அவர்கள் சேனையூருக்கு ஒவ்வோராண்டும் அந்த தினத்துக்கு வந்து எங்கள் அம்மா வீட்டில் பத்து நாளும் தங்கி ஏடு படிப்பது அவரே அவர் இறந்த பின் எங்கள் அம்மாவின் அப்பாவே படித்து வந்தார் அவரே எனக்கு ஏடு படிப்பது எப்படி என காட்டி தந்தார் நான் ஏடு வாசிக்க கற்றுக் கொண்டது அவரிடம்தான்.

நான் பல்கலைக் கழகம் சென்ற பின் பல்கலைக்கழக நூலகத்தில் கஞ்சன் அம்மானை என் கண்ணில் பட்டது அதை 1970ல் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் பதிப்பித்திருந்தார்.நான் ஏடாய் படித்த நூல் அச்சில் வெளி வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியயை தந்தது. பின்னர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களை சந்தித்து அந்த நூலின் பிரதி ஒன்றை பெற்றுக் கொண்டேன் .

ஏடு படித்து பொங்கும் இம் மரபு எங்கள் வீட்டில் மட்டும் அல்ல மட்டக்களப்பிலும் பல வீடுகளில் இந்த மரபு காணப்படுகிறது.
கஞ்சன் அம்மானை படிப்பு மட்டக்களப்பு கிருஸ்னன் கோயில்களில் ஆண்டு தோறும் திருவிழாக் காலங்களில் படித்து கிருஸ்னன் பிறப்பை நிகழ்த்திக் காட்டும் ஒரு இலக்கியம் நிகழ்த்துகையாக ஒரு பண்பாட்டு தொடர்ச்சி காணப்படுகிறது.

இந்த மரபு பற்றியதான ஆய்வை காலம் சென்ற கல்வியாளர் கவிஞர் சுகந்தி.சுப்ரமணியம் செய்துளார் அது நூலாகவும் வெளி வந்துள்ளது.
கஞ்சன் என இந்த நூல் குறிப்பிடுவது கம்சன் என்ற புராணப் பெயர் கிராம வழக்காற்றில் கஞ்சனாக உரு மாறியிருக்கிறது.
கண்ணகி வழக்குரை போல் மட்டக்களப்பில் உருவான செவ்விலக்கியம் கஞ்சன் அம்மானை.
மரபுகள் தொடரட்டும்

உலக நாடக நாள் மார்ச் 27. 2018 -1

உலக நாடக நாள் மார்ச் 27. 2018 -1

நாடகர்க்கான உலகம் தழுவிய ஒரு நாள் கிழக்குப் பல்கலைக் நுண்கலைத் துறை இந்த நாளை முதன் முதலாக இலங்கையில் 1996ஆம் ஆண்டு கொண்டாடியது.இலங்கை அரச கலாசார அமைச்சு அதன் பின்பே அரச ரீதியாக கொண்டாட தொடங்கியது.
ஒவ்வோரு ஆண்டும் உலகத்தில் பிரபல்யமான நாடக ஆளுமைகளின் செய்தி பரிமாறப் படும் .

இந்த ஆண்டு உலகில் ஐந்து ஆளுமைகளின் செய்திகள் பரிமாறப் பட்டுள்ளன.

ஆசியா பசுபிக் பிராந்தியம் சார்பில் இந்தியாவின்
ராம் கோபால் பசாஜ்
அரபு நாடுகள் சார்பில் லெபனானை சேர்ந்த
மாயா சபிப்
ஐரோப்பிய பிராந்தியம் சார்பில் பிரித்தானியாவின்
சைமன் மக்பெணி
அமரிக்க பிராந்தியம் சார்பாக மெக்சிகோவின்
சபினா பெர்மன்
ஆபிரிக்க நாடுகள் சார்பில் ஐவரிகோஸ்ற் நாட்டின்
வெய வெய லிக்கிங்
அவர்களும் தந்து சிறப்புப் பெறுகின்றனர்.

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

1995ஆம் ஆண்டு ஒரு மாலைப் பொழுதில் மார்ச் 27ஆம் திகதி கவிஞர் ஆனந்தன் வீடு அவர் வீட்டில் ஒரு பன்னிரண்டு அங்குல கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி .அவர் வீடு அமைந்திருக்கும் அமிர்தகழி அங்கு அவர் தன் ரீவி அன்ரனாவை உயர்த்தி கட்டியிருந்தார் அதனால் அவர் வீட்டில் இந்திய தூரதர்சன் தெளிவாய் தெரியும் அன்றும் நாங்கள் மலையாள கவிதைகள் பற்றி பேசிக் கொண்டிருக்க கோகிலா ஒரு இஞ்சி தேத்தண்ணியை குடித்துக் கொண்டு உரையாடல் சுவாரஸ்சியமாக நகர்கிறது .

தொலைக் காட்சி உலக நாடக தினம் என்ற அறிவித்தலோடு பேராசிரியர் ஆறுமுகத்தின் "கருஞ்சுழி" நாடகத்தை ஒளி பரப்புகிறது.நானும் ஆனந்தனும் உசாரானோம் தேத்தண்ணி மேலும் சுவையயை தந்தது ஒரு வித்தியாசமான நாடக மொழி இதுவரை நான் பார்ற்ற நெறியாள்கை செய்த நாடகங்களிலிருந்து அது வேறு பட்டு நின்று உடல் மொழி சார்ந்து நாடக அனுபவத்தை தந்தது. ஆனந்தனும் பரவடப் பட்டு போனார் பின்னாளில் அதே கருன்சுழி நாடகத்தை மட்டக் களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களை க் கொண்டு வெற்றி கரமாக மேடையேற்றிய போது அதைக் காண ஆனந்தன் இருக்கவில்லை அந்த 1995 ஆம் ஆண்டிலையே புதுக்குடியிருப்பு கண்ணி வெடி சம்பவத்தின் பின் நடந்த இராணுவ துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன துயரம் .ஒவ்வொரு நாடக நாள் வரும் போதும் ஆனந்தன் நினைவும் என்னோடு பயணிக்கும்.
Image may contain: one or more people, people on stage and wedding
அடுத்த நாளே நான் பேராசிரியர் மெளனகுரு அவர்களிடம் பகிர்ந்து கொள்ள உலக நாடக நாள் தொடர்பாக நாங்கள் செயால் பட 1996ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை உலக நாடக நாளை கொண்டாடுகிறது.மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கு அரங்க நிகழுவுகள் என நாடக விழா புதிய அனுபவத்தை தருகிறது

Bharatha Kalalaya
Bharatha Kalalaya அந்த நாடகம் நடக்கும்போது நான் இந்துக்கல்லுாியில் இருக்கிறேன் அருமையான நாடகம்
Karunchuzhi Arumugham
Karunchuzhi Arumugham நன்றி கருஞ்சுழி நினைவை பகிர்ந்தமைக்கு. நாளை உலக நாடக தினம் .கடந்த மாதம் பெங்களுருவில் 8 Theatre Olympics India 2018 நடிகர்களுக்கு அனுமதி இல்லை நாடகம் நிகழ்த்தி வந்த களைப்பு தீரவில்லை அதனால் நாளை ஓய்வு
Maunaguru Sinniah
Maunaguru Sinniah முதன் முதலில் மட்டக்களப்பு இந்துக்கலூரியில் பாட்சாலை மாணாக்கரை வைத்து தயாரித்த கருஞ்சுழி நாடகம் பாலசுகுமாரின் திறமைகளைக் காட்டிய ஒரு நாடகம்.அது பின்னர் கிழக்குப்பல்கலைக்க்ழகம், பேராதனைப்பல்கலைக்க்ழகம் முதலான இடங்களில் எல்லாம் மேடையேறியது. இதனால் இதனை எழுதிய ஆறுமுகமும் பரவலாக அறிமுகமானார். பாலசுகுமார் அர்ப்பணிப்புமிக்க ஒர்ர் நாடகக் கலைஞன்.உலக நாடக தினவிழாவுக்கான ஆலோசனைகளை எனக்கு வழங்கி அதனை 1994 இலில்ருந்து தொடர்சியாக கிழக்குப்பல்கலைக்க்ழகத்தில் நடத்த எனக்கு வலக்கரமாக விளங்கியர்.அவரும் அவர் மனைவி பிரேமிளாவும் இரவுபகலாக நின்று உதவுவார்கள்.பானைகளுக்கு வற்ணம் தீட்டி ஒழுங்கமைப்பதில் பிரமிளாவின் பங்கு அளப்பரியது.அந்தக்கூட்டு ஒத்துழைப்புகள் இல்லாவிடில் நாம் சிறப்பாக அவற்றை நடத்தியிருக்க முடியாது.உலக நாடக தினத்தில் நான் அந்த நாடகத் தம்பதியினரை நினைவுகூருகின்றேன்.சுகுமாரின் திறமைகள் வெளிப்பட லண்டன் உகந்த இடம் அல்ல.எனினும் அனைவரும் காலத்தின்,இடத்தின் சூழ் நிலையின் கைதிகளே.நல்லனவற்றை நினைத்து இன்புறுவோம்

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி