வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 5 July 2018

சேனையூர் ஓர் அறிமுகம்

சேனையூர் ஓர் அறிமுகம்


இயற்றை தன் அருட்கொடைகளினால் அள்ளித் தெளித்திருக்கும் வண்ணக் கோலம் எங்கள் சேனையூர். முல்லை, மருதம், நெய்தலொடு குறிஞ்சியின் காடுகளுடன் விரியும் அழகு நிலம் மாவலியாறும் கடலும் ஒருசேர சங்கமித்து சிற்றாறாய் பெருகி எம்மூரை வட்டமிட்டு களியோடைகளாய் காட்சிப்படும் எங்கள் ஊர் கரையோரம் எங்கும் கண்ணா மரங்களின் கூடல் கண்ணாவும் களியோடையும் எங்கள் மண்ணின் அழகின் உச்சங்கள்.

Image may contain: tree, plant, outdoor, nature and water
சேனையூர் சிற்றாறு களி ஓடைகள் வழியே பயணித்து கமுகும் தென்னையும் கவினுறு சோலையாய் குடைவிரிக்க ஊத்தடிக் கரச்சையில் ஊற்றெடுத்து ஓடையாய் உருப்பெற்று சம்புக்குளத்தோடு இணையும் அழகு இணையிலா எழில் கூட்டும்.
ஆற்றோரம் எங்கும் அழகிய குடியிருப்புக்கள், குடியிருப்புக்கள் தோறும் சிறிய சிறிய துறைகள். துறைகளையண்டி சேம்பும் வெருகும் விளைந்து நிற்கும் புன்னைமரங்கள் பூப்பூத்து சொரியும். பறவைகள் தங்கள்
கும்பம் - பாலசுகுமார் 9
சரணாலயமாய் கூடுகட்டி குஞ்சுகளுடன் வாழும். மந்தியொடு சிறுவன் குரங்குகள் மகிழ்ந்து விளையாடும். பின்னர் சீறிக்கொண்டு சினந்து கீச்சிடும். வில்லாய் வளைந்த கண்ணா விழுதுகள் கால்களாய் நீண்டு காடாய் பெருகும். யுத்தகாலத்தில் எத்தனை உயிர்கள் இங்கு தப்பிப் பிழைத்தன. தஞ்சமளித்த தனிப்பெரும் சோலை.
வளவுகள் ஒவ்வொன்றும் வளத்தின் சாட்சி. தென்னையும் மாவும் தேனுறு பலாவும், புன்னையும் வாழையும் வானுறு கமுகும் என்னமாய் இருக்கும். எவ்வளவு அழகு வாயில்கள் தோறும் பவளமல்லியும், நந்தியவட்டையும் செவ்வரத்தையும், வாடாமல்லியும், அடுக்குமல்லியும், நித்திய கல்யாணியும் நித்திலமாய் பாய்விரிக்கும். சேனையூர் எங்கும் அழகின் ஆட்சி.
சேனையூர் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களில் ஒன்று. கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று ஆதாரங்களுடன் இன்றுவரை தொடர்கின்ற வரலாற்று பாரம்பரியம் மிக்க பழந்தமிழ் கிராமம்.
ஒரு பிரதேசத்தின் வரலாறு என்பது வெறுமனே எழுத்தாதாரங்களுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. வரலாறு பற்றிய நவீன ஆய்வுகள் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொண்மை வரைவியல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாயுள்ளவை. பழ மரபுக் கதைகள், நம்பிக்கைள், பாடல்கள், பழமொழிகள் என்பனவற்றின் கூட்டாக வரலாறு இன்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆபிரிக்க மக்களின் வரலாறு அண்மைக்காலங்களில் இந்த அணுகுமுறையிலேயே வரைவு செய்யப்படுகின்றன. சேனையூர் மக்களும் பல்லாயிர வருச வரலாற்றுக்கு சொந்தக்காரர்களே. இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள், தமிழர் மரபைப் பேணுகின்ற நடுகற்கள், கிறிஸ்து சகாப்தத்தோடு தொடர்புடைய புராதன குளங்கள், கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள், குன்றுகளை அண்டிக் காணப்படுகின்ற மனித நாகரிகத்தின் எச்சங்கள் என்பன சேனையூரின் பழைமையை பறைசாற்றி நிற்கின்றன.
உலக நாகரிகங்கள் எல்லாமே நதிக்கரைகளிலும் ஆற்றோரங்களிலும் களிமுகங்களிலும் முகாமிட்டு வளர்ந்துள்ளன. சேனையூரின் நாகரிகமும்
ஊற்றடியில் ஊற்றிட்டு களியோடையில் காலூன்றிய நாகரிகமாகவே வளர்ந்துள்ளது. மாவலியாறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் ஆறு சேனையூருக்கு வளம் சேர்த்து வரலாற்;றை உறுதிப்படுத்தி நிற்கிறது.
வரலாறு என்பது, புனைவு அல்ல. அது மக்கள் வாழ்வை அடையாளங்களிலும் பண்பாட்டிலும் வெளிப்படுத்த வேண்டும். சாண்டில்யன் கதைகள் எல்லாம் வரலாறு அல்ல. அவை வரலாற்று புனைவுகள். கற்பனைகள். கற்பனைகள் ஒரு போதும் வரலாறாகிவிட முடியாது. அதுபோல் இட்டுக்கட்டுவதும் வரலாறாகிவிட முடியாது.
சேனையூர் வரலாறு எல்லாளன் வரலாற்றோடு தொடர்புபட்டு இருப்பதை புலவர் கா.வீரசிங்கம் தன் பாடலில் இப்படிக் கூறுவார்.
“பரிவாரமுடனே எல்லாளன் வந்து இறங்கினான் அன்று இலங்கை துறையில்
படைகளை நகர்த்தி வருகிற போது இடையில் கண்டான் எம்மூர்தன்னை
மருத மரங்களின் விரியுடை சேனையை பெரு மன்னன் கண்டு தாகம் தணிய தண்ணீர் அருந்தி களைப்பது நீங்கி பூத்துக்குலுங்கி பூமணம் வீசி மாங்குயில் பாடி மகிழ்ந்திடும் ஊரில்
ஆற்றம் கரையில் அழகிய மருதநிழலில் களைத்து கிளைத்து கருநடை நடந்து வந்த தன் சேனை குலைந்து போகாமல் கொண்டுவந்து மருத நிழலில் வைத்தான் அன்று
மருத நிழலில் சேனையை வைத்தால் மருதடிச்சேனை எனும் பெயராயிற்று
மருதடிச்சேனை என வழங்கிய அப்பெயர் குன்றிக் குறுகி சேனையூராகி சென்றது பலகாலம் நின்று நிலைத்தது அந்தப் பெயரே”
தொன் மங்களினூ டு இங்கு வரலாறு பயணிக்கிறது.
சேனையூர் பற்றிக் கவிஞர் நாகேஸ்வரன் இப்படிக் கூறுவார் “சேனையூர்
தௌ;ளு தமிழ் சொல் உச்சரிக்கும் போதே உவகை உச்சிவரை முட்டும் முன்னோர்கள்
எம் முன்னோர்க்கும் முன்னோர்கள்
வாழ்ந்து வந்த எங்கள் வளம் கொழிக்கும் கிராமம்
ஏழைகட்கு வாழ்வளிக்கும் வளத்தை வாரி தான் சுமந்து உப்பு நீர் கடலிருந்து உட்புகுந்து வளைந்து நெளிந்து
முப்புறமும் சூழ்ந்து எப்பொழுதும் அரணாக இயற்கை தந்த கொடை
பழந்தமிழ் மணம் வீச பண்பாடு சுமந்து
பண்போடு கலாசார பெருமைகாத்து முத்தமிழ் கலை வளர்த்து புத்தெழுச்சியோடு
உத்வேகம் கொண்ட உயிர்த்துடிப்புள்ள கிராமம்”
சேனையூரின் வரலாற்றையும் பண் பாட்டையும் பறைசாற்றி நிற்கிறது இக்கவிதை.
சேனையூர் வரலாறு குளக்கோட்டன் வரலாறோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. கோணேசர் கல்வெட்டு சொல்கின்ற மீகாமப் பரம்பரையினர் சேனையூர் மக்களே வெடியரசன் போர் சொல்கின்ற மீகாப் பரம்பரை கண்ணகி குளிர்த்தியில் சொல்லப்படுகின்ற
“மீகாமனுக்கு மிக்க வரம் கொடுத்து நாகமணி வாங்க நயந்தாய் அருள்தருவாய்”
வரிகள் மீகாமப் பரம்பரையினரின் இருப்பையும் வரலாற்றையும் உறுதிப்படுத்துகின்றன.
சோழப் பேரரசு இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய பொழுது, அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்டதாயிருந்தமையை பல சான்றுகள் நிரூபிக்கின்றன. வீரபத்திரன் கோயிலில் இன்று காணப்படுகின்ற கல் தூண்களோடு பொலநறுவை சிவாலயம் போன்ற அமைப்பு இருந்தது. அவை அகறப்பட்டு இன்று தூண்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. 1979ம் ஆண்டு இதனை ஆய்வுசெய்த பேராசிரியர் இந்திரபால இது சோழர்கால சிவன் கோயில் என்பதை உறுதிப்படுத்திச் சென்றார்.
தொடர்ந்து, போர்த்துக்கீசர் வருகை ஒல்லாந்தர் வருகை என்பனவற்றோடு சேனையூர் வரலாறு தொடர்புபடுகிறது. இவையெல்லாம் தனியனாகப் பார்க்க வேண்டிய விசயங்கள்.
ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சிசெய்த பொழுது அந்தந்தப் பிரதேசத்;தில் இருந்த நிர்வாக முறைகளை உள்வாங்கிக்கொண்டு ஆட்சி செய்தனர். கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்திலிருந்த ஏழூர் அடப்பன் பற்றிப் பேசுகிறது. அந்த ஏழூர்களில் சேனையூரும் ஒன்றாக இருந்திருக்கிறது. சேனையூரில் கடைசிவரை அடப்பன் முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. கடைசி அடப்பனாக திரு.குமாரவேலி அவர்கள் இருந்தார்கள். 1970களில் அவர் இறக்கும்வரை அடப்பன் என்றே அழைக்கப்பட்டார். உதாரணமாக விளக்கீடு நடைபெறும் நாளில் சம்பூர் பத்திரகாளி கோயிலிலிருந்து அம்மன் முகம் வீடுவீடாக காணிக்கைக்காக எடுத்துவரப்படும் போது பறை மேளத்தோடு இணைந்ததாக அந்த வரவு இருக்கும். முதலில் அடம்பனார் வீட்டுக்குச் சென்று பறையடித்துதான் காணிக்கையை தொடங்குவார்கள். இது ஒரு மரபின் தொடர்ச்சி.
பிரித்தானியர் இலங்கை வந்த பொழுது இலங்கையெங்கும் பாடசாலைகளை அமைத்தனர். மெதடிஸ்த மிசனரிமார் இந்த பணியினைச் செய்தனர். 19ம் நூற்றாண்டில் இப்பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்ட பாடசாலையே சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலை. (இன்றைய கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம்)
பிரித்தானியர் காலத்திலேயே பொலிஸ் விதான் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கொட்டியாரப் பிரதேசத்தின் பழமையான புராதன கிராமங்களிலேயே இம்முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்தவகையில் பொலிஸ் விதான் மருதடிச்சேனை என்ற முறைமை 1960களில் கிராமசேவையாளர் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கடைசி பொலிஸ் விதானையாராக இருந்த திருவாளர சிவபாக்கியம் அவர்கள் வீட்டில் “பொலிஸ்விதான் மருதடிச்சேனை” என்ற அறிவிப்பு பலகையை நான் பார்த்திருக்கிறேன்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் செப்பேடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. சேனையூர் வர்ணகுலப்பிள்ளையார் கோயில் வரலாற்றுப் பதிவை பொன்னாச்சியின் செப்பேடு உணர்த்தி நிற்கிறது. யுத்த சூழ்நிலையில் செப்பேடு காணாமல் போனாலும், இச்செப்பேடு பற்றி திருகோணமலை கோயில்களின் திருத்தல வரலாறு என்ற நூலில் பண்டிதர் வடிவேல் அவர்கள் இதனை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேனையூரின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தும் பண்பாட்டியல் அடையாளமாக சேனையூர் நாகதம்பிரான் ஆலயம், சேனையூர் வீரபத்திரன் ஆலயம், சேனையூர் சம்புக்களி பத்தினி அம்மன் ஊற்றடிப் பிள்ளையாரும் அதனோடிணைந்த புவனேஸ்வரி அம்மனும் வரலாற்றின் வழிவருவனவே.
சேனையூரில் சிறப்பாக காணப்பட்ட வதனமார் வழிபாடு ஒரு முக்கியமான பண்பாட்டடையாளம். அதனோடு வீடுதோறும் கொடுக்கப்படும் சமையல் வேள்விகள் என்பனவும் நம் கலாசார மரபுகளே.
வயல் வாழ்வோடு, இணைந்து வரும் வன்னித்தெய்வ வழிபாடு, குளக்கட்டு பத்தினி வைரவர் பொங்கல் , குளத்துமேட்டு பொங்கல் என்பனவெல்லாம் ஒரு புராதன சமூகத்தின் சமூக குறியீடுகளாய் இன்றுவரை விளங்கிச்சென்றன.
இங்கு பாரம்பரியமாய் தொடர்கின்ற வைத்திய முறைகள் பல பரம்பரையினர் இன்றுவரை இத்துறையில் தொடருகின்ற பயணம் நம் தொன்மையின் அடையாளங்களே.
பொங்கல்
, தீபாவளி எனவரும் பண்டிகைகளும் பண்டிகைகளினுடு சிறப்புப்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கும்மி, கோலாட்டம், வசந்தன் என களி நடமிடும் கலைகள் என நீளும் நம் கலைமரபுகள்.
சேனையூர் கிராம முன்னேற்றச் சங்கம், சேனையூர் சிறிகணேசா சனசமூக நிலையம், சேனையூர் இந்து இளைஞர் மன்றம், சேனையூர் கூட்டுறவுச் சங்கம், சேனையூர் இலக்கிய வட்டம் என்பன சேனையூரின் நவீன வரலாற்றின் சுவடுகள். இவை புதிய வரலாறாய் இன்றுவரை தொடரும் பயணம். புதிய சேதிகளை சொல்லி நிற்கின்றன.
சேனையூர் மத்திய கல்லூரி 1957ல் ஆரம்பிக்கப்படுகிறது. சேனையூரின் கல்வி வரலாற்றில் புதிய புரட்சி கொட்டியாரப் பிரதேசம், கடந்து திருகோணமலை மாவட்டம் முழுவதுமிருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். அகில இலங்கை ரீதியில் பல சாதனைகள் நிகழ்த்திய கல்லூரி புதிய வரலாறாய் நம்முன்

Monday 2 July 2018

பல்கலை வித்தகர் சேனையூர் வில்லுப்பாட்டு வீரசிங்கம்

இன்றைய அரங்கம் பத்திரிகையில்
பல்கலை வித்தகர் சேனையூர் வில்லுப்பாட்டு வீரசிங்கம்
————————-————————————–
மந்திரம், வைத்தியத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு பல்துறைக் கலைஞர்



செந்தமிழ் செழிக்கும் சேனையூர் கிராமத்தில் 1939ஆம் ஆண்டு களியப்பு, தங்கம்மா தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்தவர். கற்பகம், விஜயசிங்கம், யோகாம்பிகை, பாலசிங்கம், கமலாம்பிகை, சிவலிங்கநாயகி ஆகியோர் இவரது உடன் பிறப்புகள்.
இளமையில் துடிப்பும் நடிப்பும் மிக்க சிறுவனாய் எதையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் எதையாவது செய்ய வேணும் என்ற ஆர்வத்துடன் ஈடுபட்டு குழப்படிகாரன் என்ற பெயர் பெற்றவர். இவருடைய தகப்பனார் விஜயசிங்கம் காளியப்பு ஒரு புலமைப் பாரம்பரியத்தின் வாரிசு; வைத்தியம் மந்திரம் ஆகியவற்றில் கை தேர்ந்த நிபுணர்.
சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் (இன்றைய கட்டைபறிச்சான் விபுலாநந்த வித்தியாலயம்)ஐந்தாம் வகுப்பு வரை படித்து தன் பாடசாலை கல்வியை இடைநிறுத்தினாலும் தன் தகப்பனாரிடமும் அண்ணன் விஜயசிங்கத்திடம் மரபு வழிக் கல்வியை முறையாக கற்றவர். இதனால் மந்திரம் வைத்தியம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். தன் நாப்பத்தைந்தாவது வயதில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்.
வைத்தியத்தில், முறிவு வைத்தியத்தில் இவருக்கு சிறப்பு தேர்ச்சியுண்டு. தன் சுய முயற்சியினாலேயே எல்லாவற்றையும் கற்று அவற்றில் தேர்ந்த கலைஞனாய் முதன்மை பெற்று, தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மா கலைஞன் இவர்.
சேனையூர் கும்பவிழாவுக்கு பேர் போன ஊர். சேனையூர்க் கும்பத்தின் பிதாமகராய் கருதப்படும் தகப்பனார் காளியப்புவிடம் மந்திரக் கலையை சிறப்புற கற்ற இவர், ஏனைய பூசாரிகளிடமிருந்து வேறுபட்டு மந்திரத்தை உச்சரிப்பதில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கியவர் எனலாம். வாலிப நாட்களில் இவரது மந்திரத்துக்கு கட்டுப்படாத கும்ப ஆட்டக்காரர்களே இல்லை எனலாம். மறிப்பு, கட்டு என்பவற்றை சுக்கு நூறாக்கும் தந்திரம் தெரிந்த மந்திரமொழி இவரது.
மருத நகரில் புவனேஸ்வரி புவன கணபதி ஆலையங்களையும் கும்ப நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்தி, சமயப் பண்பாட்டு புரட்சிக்கு வித்திட்டவர் என்று சொன்னால் மிகையில்லை.
இவர் போல் கோடியில் ஒருவர்தான் பிறக்க முடியும்.
பூசாரி, மந்திரன், வைத்தியர், ஓடாவி, சிற்பி, புலவர், மேசன்,நடிகன், நாடக எழுத்தாளன், ஆடல் வல்லான், மிகச் சிறந்த பாடகர், நாடக எழுத்தாளர், ஒப்பனையாளர், வில்லுப்பாட்டுக் கலைஞர், நாதஸ்வர வித்துவான், சாத்துப்படி கலைஞர்,இசையமைப்பாளன் என
ஒரு மனிதன் இத்தனை அவதாரங்கள் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலானது இவரது கலை வாழ்க்கை.
பாடசாலை நாட்களில் பாடி ஆசிரியர்களின் பாராட்டை பெற்று தன் இசையால் எல்லோரையு வசீகரிக்கும் ஆற்றல் பெற்றவர். இசை ஞானத்தை இயற்கையாகவே தன் பரம்பரை வழியாக பெற்றுக் கொண்ட இவர், திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இசையாற்றலால் அறியப்பட்டவர். சௌந்தரராஜனின் குரலை ஒத்ததாய் அமைந்த இவரை ஈழத்து சௌந்தரராஜன் என அழைப்பதுண்டு. முருகன் மீது கொண்ட பக்தியால் “குகா” என்ற பெயர் இவரது பட்டப்பெயரானது. சங்கீதத்தை முறையாக படிக்காவிட்டாலும் கர்நாடக சங்கீத பாடல்களை கடல்மடை திறந்தாற்போல் பாடும் வல்லமை பெற்றவர்.
கட்டைபறிச்சான் கலைவாணி இசைக் கழகத்தின் பிரதான பாடகராக பல மேடைகளில் தன் இசையால் நிறைத்தவர். பாடல் எழுதி இசையமைத்து பாடும் திறன் பெற்றவரும் கூட.
வில்லுப் பாட்டு மன்னன் மாஸ்ரர் சிவலிங்கத்தை தன் மானசீக குருவாக கொண்டு கொட்டியாரத்தில் இக்கலையை அறிமுகப் படுத்தியவர் இவரே. இலங்கை வானொலியில் இவரது வில்லுப்பாட்டு எழுபதுகளில் ஒலிபரப்பாகி அகில இலங்கையும் அறிந்த ஒரு கலைஞராக கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சியில் வலம் வந்தவர். இவர் பாடிய முதல் வில்லுப் பாட்டு ‘எங்கேயடா கம்பா சிலம்பு‘ என்ற இலக்கியநயம் மிக்க ஆக்கமாகும். இது பண்டிதர்களது பாராட்டுப் பெற்றதாகும். திருகோணமலை மாவட்டத்தின் இவர் வில்லுப்பாட்டு ஒலிக்காத இடம் இல்லை எனலாம். பல இடங்களுக்கு நானும் பக்கப்பாட்டு கலைஞனாய் சென்றமையயை பெருமையாகக் கருதுகிறேன்.
கவியரங்குகளில் தன் கவிதைகளால் பார்வையாளர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவர். எடுத்தவுடன் கவி சொல்லும் திறன் இவரது சிறப்புகளில் ஒன்று.
பல நூற்றுக் கணக்கான நாடகங்களில் நடித்திருக்கிறார் முதன் முதல் இவர் எழுதி தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம்‘தபோ பலம்‘ என்பதாகும். என்னை பொது மேடையில் நாடகத்தில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. எல்லா வகையான பாத்திரங்களும் இவருக்கு கை வந்த கலை. நடிப்பில் சிவாஜியின் மறு உருவாக்கம் என்று கூடச் சொல்லலாம். சிவனாக, எமனாக, அரிச்சந்திரனாக, கர்ணனாக,வீரபாண்டிய கட்டப் பொம்மனாக, விவசாயியாக, புலவராக ஏற்ற பாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தா.ஜெயவீரசிங்கம் ஆசிரியர் எழுதி தயாரித்து நெறிப்படுத்திய‘இவளும் ஒரு தாய்‘ கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதில் கர்ணனாக தோன்றி சிவாஜியின் நடிப்புக்கு சவால் விட்டவர் என்று சொல்லலாம். அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார் அதில். பார்த்தோர் எல்லாம் கண்கலங்கி அழுத அந்த காட்சிகள் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
மூதூரில் வேதனாயகம் வைத்தியரால் தயாரிக்கப்பட‘தென்றலும் புயலும்‘ நாடகத்தில் விசித்திரமான நகைச்சுவை பாத்திரம் ஏற்று கலக்கியவர் என்று சொல்லலாம். இரண்டரை மணித்தியாலம் கொண்ட முழு நீள நாடகம். அதுவே பின்னர்‘தென்றலும் புயலும்‘ எனும் திரப்படமாகியது. இவரே திரைப்படத்திலும் நடிப்பதாக பேசப் பட்டது, ஆனால் திரைப்படமாகும் போது இவர் கழற்றி விடப்பட்டார்.
புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் எந்த விடயத்தையும் மற்றவர்கள் பார்ப்பது போலப் பார்க்க மாட்டார். ஒரு மாறுபட்ட தர்க்க நியாயங்கள் உள்ளதாக, யாரும் எழிதில் நிராகரித்து சென்று விடாதபடி அவர் கருத்துக்கள் இருக்கும். மரபு வழிப்பட்ட கல்வியில் வந்திருந்தாலும் அந்த மரபையும் உடைத்துப் பார்க்கும் திறன் அவருக்கு இளமையிலேயே இருந்துள்ளது. பல விடயங்களில் தன் தகப்பனாருடனேயே கருத்துத் தர்க்கம் செய்து அவரது கோபத்துக்கு ஆளாகியதும் உண்டு.
சமூக அவலங்களையும் சமூக பிரச்சினைகளையும் தன் படைப்புகளில் வெளிக் கொணர்ந்தவர் அதோடு அகட விகடமாக பேசும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரம் இவர் பாடிய வெங்காயம் தேடி ஊரெல்லாம் போனேன் என்ற பாடல் கொட்டியாரப் பகுதியில் மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமானது.
சமூக விழிப்புணர்வு மிக்க பல அரங்க நிகழ்வுகளை கடந்த பல ஆண்டுகளில் தயாரித்து அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் செய்து காட்டியவர்.
கும்மி, கோலாட்டம்,கரகாட்டம், காவடியாட்டம் என கிராமிய ஆடல் வடிவங்களை பழக்கி, பல போட்டிகளில் பரிசுகளை வென்றவர் என்பதும் இவருக்கான சிறப்புக்களாகும். சேனையூர் மத்திய கல்லூரியின் அறுபது வருச வரலாற்றில் இவர் ஒரு ஆசிரியர் போலவே, பாடசாலையோடு இணைந்து செயற்பட்டு, பாடசாலையின் கலை நிகழ்வுகளில் முக்கிய பங்காளனாய் இருந்தவர்.
Image may contain: 4 people
மாணவர்களுக்கான நடிப்புப் பயிற்சி, இசைப் பயிற்சி, ஆடல் பயிற்சி, ஒப்பனை என எல்லாவற்றிலும் தடம் பத்தித்தவர்.
Image may contain: 1 personபல்கலை வித்தகர் என்ற சொல்லுக்கு இவரே உதாரணம். மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் கலாபூசணம் பட்டம் பெற்று சேனையூருக்கு பெருமை சேர்த்தவர். அத்தோடு கிழக்கு மாகாண அரசு 2008 ஆம் ஆண்டு கலை இலக்கியத்துக்கான விருதை வழங்கி மதிப்பளித்தது. பல விருதுகளையும் பெற்று கலை வாழ்வுக்கு பெருமை சேர்த்தவர்.
தன் இருபத்தியேழாவது வயதில் கமலாதேவியை மணந்து கலைச் செல்வி, ரஜானந்தி, கார்த்திகா, காயஸ்திரி ஆகிய நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகி அவர்களையும் தன் கலை வாரிசுகளாக உருவாக்கினார். பல கலை விழாக்களில் அவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையும் தன் அரங்கச் செயற்பாடுகளில் அவர்களையும் ஈடுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்வை கலைப் பணிக்காக அர்பணித்த இந்த மா கலைஞன் தன் எழுபத்தொன்பதாவது வயதில் சேனையூரில் வாழ்ந்து வருகிறார். இத்தகைய கலைஞர்களுக்கு மாதாந்த உதவித் தொகை வழங்கி கௌரவிக்க வேண்டியது அரசின் கடமையாகும். வயது முதிர்ந்த சிங்கள கலைஞர்களுக்கு அரசு மாதாந்த உதவி வழங்கி அவர்கள் கலை வாழ்வுக்கு மதிப்பளிப்பது போல, இவர் போன்ற தமிழ் கலைஞர்களையும் கௌரவிக்க வேண்டும். கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் இதை கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும். வாழும் போதே கலைஞர்களை போற்றுவோம்
பாலசுகுமார்
சேனையூர்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக்கழகம்


உலக புத்தக நாள் சித்திரை 23

உலக புத்தக நாள் சித்திரை 23
நான் அறிந்த முதல் புத்தகம் என் அம்மா திறக்க திறக்க புதிய புதிய விசயங்களை அறிய முதல் கருவும் உருவும் அவர்தான் .வாசிப்பின் மூச்சை அவரிடமிருந்துதான் நான் பெற்றேன் புத்தகத்தின் வாசம் அவர் தந்தது .
என் குழந்தைப் பருவத்தில் வீட்டு வேலைகள் தவிர்ந்த மற்ற நேரமெல்லாம் அம்மா கையில் ஒரு புத்தகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் எனக்கு புத்தகங்களின் மீதான பிரியம் அவரிடமிருந்து வந்ததுதான்.
அரிவரியில் பால போதினியயை அழைந்து அதனுள் மூழ்கிய அந்த நாட்கள் இன்னமும் அப்படியே என்னுள் புதைந்து கிடக்கும் சந்தோசத்தின் குறியீடாய் அது எப்போதும்.
கொஞ்சம் வகுப்புகள் மாறி மாறி ஒரு ஐந்தாம் வருடம் கற்கிற போது எல்லாவற்றையும் வாசிக்கும் ஆர்வம் அப்போதுதான் அம்மா எட்டாம் வகுப்புவரை படித்த ஆங்கில மொழி மூல புத்தகங்கள் அவற்றை புரட்டித்தான் பார்க்க முடிந்த்ததே தவிர வாசிக்க முடியவில்லை.
ஆறாம் வக்குப்பு படிக்கும் போது நான் தீவிர வாசிப்பாளனாய் மாறியிருந்தேன் அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி இல்லை வானொலியும் ஒரு சிலரிடம்தான் இருக்கும் அன்றைய பொழுது போக்கு வீடுகளில் பெரிய எழுத்து மகா பாரதம் படித்தல் எட்டு கட்டு மகா பாரதம் .
எங்கள் சிற்றம்பலம் மாமா வீட்டில் அது முழுமையாக இருந்தது நான் கறுத்த மாமி என்று சொல்லும் செளந்தரம் மாமி அவர்கள் வீட்டில் வாங்க்க் வந்து மாலை நேரங்களில் நான் வாசிக்க அம்மம்மமா உட்பட சுற்றியிருந்து சுவைக்கும் அந்த நாட்கள். இது அன்று எங்கள் ஊரில் பல வீடுகளில் நடந்த கதை கேட்கும் மரபு.
பெரிய எழுத்து மகா பாரதக் கட்டு புத்தகங்கள் அப்போ பலரிடம் இருந்தன எனக்கு அந்த புத்தகங்களில் கீறப்பட்ட படங்களை பார்த்து பார்த்து ரசிப்பது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது குறிப்பாக யுத்த பர்வ படங்களிலேயே என் நாட்டம் இருந்ததமை குறிப்பிடத் தக்கது.அந்த ஓவியங்கள் தஞ்சாவூர் பாணியயை பின்பற்றி இருந்தமையும் இங்கு மனம் கொள்ளத் தக்கது.
அடுத்த கால கட்டத்தில் சிறிய துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் வாசகனாய் மாறுகிறேன் பி.டி.சாமி போன்றோரது கைக்குள் அடங்கும் புத்தகங்கள்.மிகவும் விறு விறுப்பான அனுபவம் வாசிக்கும் போது நாமே துப்பறிவாளனாய் மாறும் வாசிப்பில் உள் நுழைவு.
கனகசிங்கம் மாமா சின்ன மாமா மூலம் வாசிப்பாய் உள் வந்து பகுத்தறிவை தந்த பெரியார்,அண்ணா,கலைஞர் நூல்கள் ஆரிய மாயயையும் தூக்கு மேடையும் கனலாய் தெறித்த புதிய திராவிடத் தமிழ்.
அடுத்த ஒரு கட்டத்தில் தமிழகத்து வார மாத சஞ்சிகளில் மூழ்கிப் போனமை அம்புலி மாமா,ஆனந்த விகடன் ,கல்கி குமுதம்,ராணி பேசும் படம் ,பொம்மை என எல்லாவற்றையும் வாசித்தமை இன்றும்தான்.
எங்கள் கிராம சபை நூலகத்துக்கு எழுபதுகளில் மாஸ்கோ முன்னேற்ற பதிப்பக நூல்களும் சோவிதத் நாடு தமிழ் பதிப்பும் கட்டு கட்டாக வரும் லெனினும் மாக்சும் ஏங்கல்சும் என் கண்களுக்கு விருந்தானார்கள் பின்னர் சிந்தைக்கும் .அதே போல இன்றைய சீனா வண்ணப் படங்களுடனும் மா ஓ வின் நூல்களும் கடுமையான மொழி பெயர்ப்புகளாக இருந்தாலும் கருத்தூன்றி வாசித்தேன்.
சரித்திர சமூக நாவல்களில் மயங்கியமை சாண்டில்யனும் ,அகிலனும்,கல்கியும் ,ஜெகசிற்பியனும் ,பார்த்தசாரதியும் மு.வவும் பின்னர் ஜெயகாந்தனும் என் வாசிப்பில் நீண்ட அந்த நாட்கள் .
பல்கலைக்கழகம் நூல்கள் பற்றிய வாசிப்பை மேலும் அகலிக்க வைத்தது ஜெயகாந்ரனும் ,ஜானகி ராமனும் என்னுள் புகுந்த நாட்கள். ஆராய்ச்சி நூல்களில் முகத்தை புதைத்து கிடந்த நாட்களும் அவைதான்.கைலாசபதியும்,சிவத்தம்பியும் வித்தியானந்தனும் என்னுள் குடி கொண்ட நாட்கள் அவை.
கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக என் காலம் தொடங்கிய பின் கலை நாடி கலை செய்யும் கலைஞனாய் நாடகம் கலை தொடர்பான நூல்களுக்குள் என்னை புதைத்து தேடலும் திரட்சியுமாய் கனிந்த வாசிப்பு.
சேக்ஸ்பியரும் ,இப்சனும்,மாக்சிம் கார்க்கியும் ,இதன் வழி இன்னும் பல நூறு ஆளுமைகளை அவர்கள் எழுத்துக்களை என்னுள் செரித்த அந்த நாட்களும் என் வீட்டு நூலகமும் நானும்
புத்தகங்களை தேடி மூதூரில் அன்றுள்ள எல்லா நூலகங்களுக்கும் சென்றிருக்கிறேன் சேனையூர் சிறி கணேசா சன சமூக நூல் நிலையம்,கட்டைபறிச்சான் கிராம சபை நூல் நிலையம் ,சம்பூர் கிராமசபை நூல் நிலையம் ,மூதூர் பட்டினசபை நூல் நிலையம் ,மல்லிகைத்தீவு கிராம சபை நூல் நிலையம் திரிகூடத்தில் வ.அ. அவர்களது நூலகம் அதிலிருந்து இலங்கையெங்கிலும் பல இடங்களிலும் நான் பார்த்த பல நூல் நிலையங்கள் இன்று உலக நாடுகளில் உள்ள பல நூலகங்கள் உலக புத்தக நாளில் நம் முகமாய் உள்ளது.
இன்று நானே நூல்களை ஆக்கும் எழுத்தாளனாய்.

காலம் தோறும் மாறி வரும் கதைசொல்லும் மரபும் கதை சொல்லிகளும்

காலம் தோறும் மாறி வரும் கதைசொல்லும் மரபும்
கதை சொல்லிகளும்

கதைகள் நம் நிலத்தோடும் வாழ்வோடும் பின்னிப் பிணைந்தவை இப்படித்தான் கதைகள் சொல்லப் பட வேண்டும் என்ற எந்த கட்டுப் பாடுகளும் இல்லை .கதை சொல்லிகளும் அப்படித்தான்.
மனித சமூகம் தோன்றியதிலிருந்தே ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் புதைந்து போன வரலாறு நிறையவே உண்டு.
நம் ஆச்சியும் ஆத்தையும் மூத்தோரும் சொன்ன கதைகள் எத்தனை
நவீன இலக்கிய மோடிமைகள் இன்று கதை சொல்லுதல் பற்றி வரைவிலக்கணங்களை வகுத்துக் கொண்டு அந்த சட்டகத்துக்குள் வராதவர்களை ஒரு விதமாக கிரேக்க காலத்து சற்றயர் நடையில் பந்த நூலும் நச்சாதார்க்கினியாரும் தந்து வழி காட்டிய பிதா மகன் வழியில் எழுதுவதும் அதி மேதாவிகளின் ஆற்றாமையின் குரலே.
உலக இலக்கிய வரலாறு நாவல் எழுதியோர் நாடகம் எழுதியதும் நாடக மொழி சார்ந்தோர் நாவல் எழுதியதும் முரண் நகையல்ல.சேக்ஸ்பியர் நாடகராக எப்படி கொண்டாடப் படுகிறாரோ ஒரு படி மேலாகவே ஆங்கிலேயர்களால் காவியக் கவிஞனாகப் போற்றப் படுகிறார்.
இன்னமும் சாண்டில்யனின் கடல் புறாவும்,கல்கியின் பொன்னியின் செல்வனும்,அகிலனின் சித்திரப் பாவையும் ,ஜெகசிற்பியனின் நந்திவர்மனின் காதலியும் பேசப்படுகிறது.
கதை சொல்லிகளை யாரும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று கட்டளை இட முடியாது இலக்கிய ஜனநாயகம் மதிக்கப் பட வேண்டும் .
இன்று உலக இலக்கியம் அதன் போக்கு மாறி விட்டது அவுஸ்ரேலிய பழங்குடி மக்களின் கதைகள் பாடல்கள் இலக்கியமாகியுள்ளன.
அவரவர் மொழி நடையொன்று உண்டு அது அவர்களுக்கானது.
ஈழ நவீன தமிழ் இலக்கியம் அது இன்று பன் முகம் கொண்டதாய் ஈழத்திலும் புலம் பெயர் வாழ்விலும் புதிய ஆளுமைகளையும் கதை சொல்லிகளையும் நமக்கு தந்அதுள்ளது.
கவிதை எழுதுவோர் கதை எழுதுவதும்
கதை எழுதுவோர் கவிதை சொல்வதும்
நாடகம் சார்ந்தோர் நாவல் புனைவதும்
நாவல் எழுதியோர் நாடகம் ஆக்குவதும்
வழுவல காலம் தோறும் எல்லாம் மாறும்
கதை சொல்லும் முறையும் மாறும்
நான் பல்கலைக் கழகத்தில் நாவல் சிறுகதை பற்றி படித்த போது அவை பற்றி இருந்த எண்ணக் கருக்கள் நாப்பது வருடங்கள் கடந்த நிலையில் அதன் மதிப்பீடுகள் மாறியுள்ளன .
யாரும் எழுதலாம் எழுத்துக்கு எல்லையில்லை

கலைஞர் -95 கலைஞர் எனும் தமிழ்

கலைஞர் -95
கலைஞர் எனும் தமிழ்


இன்று கலைஞருக்கு 95 ஆவது பிறந்த நாள் நான் அவர் எழுத்தை முகரத் தொடங்கியது என் பதின்ம வயதுகளில் அறுபதுகளில் அவரின் எழுத்தின் தாக்கம் எங்கோ மூலையில் இருந்த ஈழத்துக் கிராமம் ஒன்றுக்கும் பரவியிருந்த்தமை அவர் சார்ந்திருந்த பகுத்தறிவு சுயமரியாதை கொள்ககளின் தாக்கம்தான்.
1952 ஆம் ஆண்டு வெளி வந்த பராசக்தி திரைப் படம் கொழும்பில் ஒரு திரயரங்கில் 52 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருந்தது.பராசக்தி திரைப்படமே அவர் எழுத்துக்களை தேடி தேடி அந்த கால இளைஞகளை வாசிக்க தூண்டியது வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு என எல்லா இடங்களிலும் அவர் எழுத்தால் கவரப் பட்டோர் பலர் அவர் மாதிரியே எழுத முற்பட்டோரும் பலர்.
மனோகரா எனும் திரைபடத்தால் வசீகரிக்கப் பட்டு கலைஞர் வசனங்களில் கட்டுண்டு கிடந்த காலம் அது அவர் வசனங்களுக்காகவே பல படங்கள் இன்றும் பேசப் படுகின்றன.
ஈழத்தில் வழிபாட்டுக்கு உரிய தெய்வமாக போற்றப் படும் கண்ணகி கதையயை பூம்புகார் எனும் திரைப்படமாக தந்தார் அது கிழக்கு தமிழ் மக்களின் பண்பாட்டோடு கலந்திருந்த கண்ணகி வழக்குரையோடு மிக நெருக்கமாக கண்ணகியின் வழக்குரையயை பிரதானப் படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
கலைஞர் அவர் தன் எழுத்துக்களால் என்னோடு பேசியவர் அவர் எழுத்து என்பது அவர் உருவாக்கிய தனிப் பாணி அந்த பாணியில் அவரது ராஜ பாட்டையை இன்று வரை யாரும் எட்டிப் பார்க்க முடியாத உயரத்தில் அவர்.
அவரது கவியரங்க கவிதைகள் கனல் தெறிக்கும் பகுத்தறிவுப் பிரசாரமாயும் சுயமரியாதைக் குரலாகவும் சமூக நீதிக் கணையாகவும் அடக்கப் பட்டோரின் மொழியாகவும் எப்போதும் ஒலித்தன .
தமிழ் இலக்கியத்தின் எந்த துறையில் அவர் கால் பதிக்கவில்லை எல்லாவற்றிலும் அவர் எழுத்து அந்த தனித்துவ மொழி அவருக்கான இடத்தை எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்.
கவிதை ,சிறுகதை,நாவல்,நாடகம்,சினிமா ,கட்டுரை ,உரைச் சித்திரம் என விரிந்து நிற்கும் அவர் எழுத்து எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார் என்பதை யாரும் இலகுவில் புறந் தள்ளிவிட முடியாத படி அவர் தமிழோடு இணைந்திருக்கிறார் ,நவீன தமிழ் எழுத்தின் ஒரு செல் நெறியை உருவாக்கியிருக்கிறார்.
திருக்குறளுக்கு எழுதிய எளிய உரையும் வள்ளுவரை தன் எழுத்துக்கள் தோறும் முதன்மைப் படுத்தும் பண்பும் கன்னியா குமரியில் அமைந்த தமிழின் அடையாளமாய் உயர்ந்து நிற்கும் வள்ளுவனின் சிலையும் சென்னையில் அமைந்த வள்ளுவர் கோட்டமும் தமிழ் பண்பாடு நம்மோடு பேசும் இடங்கள்.
சிலப்பதிகாரம் நாடகமாய் படைத்து பூம்புகார் திரைப்படமாகி பின்னர் பூம்புகாரில் பூம்புகார் கோட்டமமைத்து தமிழரின் வரலாற்று தொன்மை நிகழ்வுகளை மீட்டெடுத்த பண்பாட்டு கருவூலமாய் இன்றும் அவர் பெயர் சொல்லும்சாதனைகளில் ஒன்று.
சங்கத் தமிழ் எழுதி பண்டைத் தமிழ் இலக்கியத்தை பாமரனும் புரியும் படி சொன்ன தும் ரோமபுரிப் பாண்டியனும் ,பாயும் புலி பண்டார வன்னியன் என தன் தமிழால் தமிழன் வீரத்தையும் பண்பாட்டையும் பரவலான வாசிப்புக்கு கொண்டு சென்றதும்.
தொல்காப்பிய பூங்காவால் தன் தொண்டனுக்கும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையயை உணர வைத்ததும் தமிழில் எத்தனை வழித் தடங்கள்.
அவர் எழுதிய சமூக புதினங்கள் இரு நூறுக்கு மேற்பட்ட சிறுகதகளும் பேர் சொல்லும் பல நாவல்களும் சமூக அக்கறையுடன் படைக்கப் பட்டவை.
கலைஞரின் எழுத்துப் பற்றி பிரபஞ்சன் இப்படிச் சொல்வார்
"ஒரு கருத்து, சிந்தனை, அனுபவத்தைச் சமூகம் சார்ந்து வெளிப்படுத்தவே கலைஞர் சிறு கடை வடிவத்தை எடுக்கிறார் அல்லாமல், கருத்தற்ற சமூக உணர்வற்ற ஒரு சிறு கதையைக் கூட அவர் எழுதிய தில்லை. இது ஓர் எழுத்தாளனுக்குப் பெருமை தரும் விஷயம்"
பேராசிரியர் சிவத்தம்பி தன் கலைஞர் பார்வையயை இப்படிப் பதிவிடுகிறார்
"தமிழகத்தின் உள்ளூர் வரலாற்று நோக்கில் (local history) இவை முக்கியமானவையாகும். எடுத்துரைப்பின் (Narration) முறை, சம்பவங்களை (தொடர்ந்தும்) புலனுகர்வுக் கவர்ச்சியுடையதாக அமைந்துவிடும்"
பிரபஞ்சன் கலைஞரின் எழுத்து பற்றி மேலும் கூறும் போது
"கருணாநிதி போன்ற கலகக்காரர்கள் தான் ஒரு பழமையான சமூகத்தின் அசமந்தத்தைப் போக்கும் திறன் பெற்றவர்களாக, வரலாற்றேட்டில் விளங்குவார்கள்.
தமிழ்ப் படைப்பிலக்கியப் போக்கில் அழுத்தமான தடம் பதித்த தமிழ்ச் சிற்பிகளில் கலைஞர் மு.கருணாநிதி, அவருடைய வன்மையையும் கூர்மையும் மிக்க சமூக யதார்த்த விமர்சனத்துக்காகவும் போர்க்குணம் மிக படைப்புகளுக்காகவும் நினைக்கப்படுவார்"
தமிழ் இலக்கிய வரலாறு அவரைக் கடந்து சென்று விடாத படி அவர் எழுத்துக்கள் என்றும் பேசப் படும்

கிள்ளைகள் விளையாட்டால் கிளிவெட்டியான தொல்லூர்

அரங்கம் பத்திரிகையில் இருந்து...
கிள்ளைகள் விளையாட்டால் கிளிவெட்டியான தொல்லூர்
===================================
-- பால.சுகுமார் ---
'மாவலியாள் வந்து விழுந்து
வளைந்து வளம் சேர்க்கும்
வண்ணத் தமிழ் ஊர்
பொன்னாய் வயல் விளைய சென்னெல்
கதிரறுக்கும்
கிள்ளைகள் விளையாட்டால்
கிளிவெட்டியான தொல்லூர்

நெல்லும் நீள் வாழைத் தோட்டங்களும்
நன்னீரும் நல்ல மனிதர்களும்
முன்னோராய் தோன்றி மறைந்த
முது ஊர் கிளிவெட்டி
தயிரும் பாலும் தண்ணியாய் இங்கிருக்க
ஆம்பல் பூக்கள் அழகுற வாய் விரிக்கும்
தேம்பல் இல்லா வாழ்வு இவர்க்கு
திசையெங்கும் புகழ் படைத்த மாந்தர் கொண்ட ஊர்'

கிளிவெட்டி ஈழத் தமிழ் நிலத்தில் பாரம்பரியம் மிக்க பழம் பெருமைகள் கொண்ட பெரு நிலப் பரப்பு. வயலும் வயல் சூந்த நிலத் திட்டும் மாவலியாறு சுற்றி வந்து வற்றாத நீர்வளத்தை எப்போதும் பொய்க்காத விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட அழகிய கிராமம்.
மூன்று போகம் நெல் வேளாண்மையில் விளைந்து கிடக்கும் முன்னைய நாட்களில் கூட்டம் கூட்டமாக கிளிகள் வந்து நெற் கதிர்களை பறித்து சென்றாலும் அதை பற்றி கவலைப் படாதவர்களாய் மக்கள் இருந்ததாகவும் அதனால் கிளிகள் நெல்லை வெட்டி சாப்பிட்டு மகிழும் வளம் மிக்க இடம் என்பதால் கிளிவெட்டி எனப் பெயர் வந்ததாக இக் கிராமம் பற்றிய கதைகள் காலம் காலமாக பேசப் படுகின்றன.
மூதூரில் இருந்து பயணிக்கும் போது மட்டக் களப்பு செல்லும் வழியில் பத்து மைல் தொலைவில் இருபுறமும் வயல்கள் சூழ பயணம் முழுவதிலும் பசுமையை சுவைக்க முடியும். கிழக்கே நீண்டிருக்கும் அல்லைக் குளமும் மேற்குப் புறமாக விரிந்திருக்கும் பழய வரலாற்று தொல்லியல் சான்றுகள் மிக்க ஆதி அம்மன் கேணியும் கிளிவெட்டியின் புராதன பண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.
குளக்கோட்டன் வகுத்தமைத்த நியமங்களின் படி விளை நிலங்களின் மூலம் கோணேசர் கோயிலுக்கு இங்கிருந்து நெல்லும் தாமரை மலர்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
சோழர் காலத்து வேழக்காரப் படையினரின் ஒரு பகுதியினர் இங்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டதாகவும் சில வரலாற்று செய்திகள் சொல்கின்றன. ஆதியம்மன் கேணி தமிழ் தொல்லியல் சான்றுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு பழைய கோயிலினின் இடி பாடுகளும் வாழ்விடங்களின் அழிந்த பகுதிகளும் உள்ளன.
கொட்டியாரத்துப் பிரதேசத்தில் மிகப் பழமையான மாரியம்மன் கோயில் இங்கேயே உள்ளது. இந்த கோயிலை சன்னியாசி ஒருவரே ஸ்தாபித்ததாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
கதிர்காம யாத்திரை செல்வோர் கிளிவெட்டியில் தங்கியே தங்கள் பயணத்தை தொடர்வர். குறிப்பாக இந்த மாரியம்மன் கோயிலே அவர்கள் தங்கு மடமாக பாவித்து ஊரவரின் உபசரிப்பில் உண்டு மகிழ்ந்து யாத்திரையை தொடர்வர்.
வெருகல் கோயில் யாத்திரிகர்களின் களைப்பாறும் இடமாகமும் கிளிவெட்டி நம் கிராமிய பண்பாட்டின் வழி பயணிக்கும் தமிழர் பண்பாட்டையும் கலாசார கூறுகளையும் சிறப்பாக காலம் காலமாக பின் பற்றும் ஒரு புராதன கிராமமாக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
கிளிவெட்டி முன்னைய நாட்களில் எருமை மாட்டுப்பட்டிகள் நிறைந்த இடமாக இருந்தமையும் பல ஊர்களிலிருந்தும் குத்தகைக்கு வயல் வேலைக்காக இங்கிருந்து மாடுகளை எடுத்துச் செல்வதும் மரபாக இருந்தது. தம்பலகாமம் ஆலங்கேணி போன்ற இடங்களிலிருந்து மாடுகளை குத்தகைக்கு எடுத்துச் செல்வர்.
கிடா மாட்டு வளர்ப்போடு தொடர்புபட்ட நாயன்மார் வழிபாடு கிளிவெட்டியின் பழமை மிகு கலாச்சார கொண்டாட்டம். காலத்துக்கு காலம் நாயன்மார் வேள்வியும் அதனோடு தொடர்புபட்ட குழு மாடு பிடித்தலும் முக்கிய பண்பாட்டு மரபாக பேணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர் காலத்திலும் கொட்டியார நிர்வாக முறைமையில் கிளிவெட்டி முக்கிய பங்கு வகித்ததாக ஊர் பெரியவர்களின் செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று தபால் கந்தோர் அமைத்துள்ள இடம் முன்னர் வன்னியனாரும் பிரித்தானிய அதிகாரிகளும் தங்கி இருந்த இடமாகப் பேசப்படுகிறது.
வேளாண்மையே பிரதான தொழில் என்பதால் விளைந்து ஓய்வு காலங்களில் நாட்டுக் கூத்துக்கள் அரங்கேற்றம் பெற்றதாகவும் பெரிய மரங்களில் சித்திரை மாதத்தில் ஊஞ்சல் பாடலோடு ஆடி மகிழ்ந்ததாகவும் அறிய முடிகிறது.
பெரியதொரு தாமரைப் பொய்கை கிளிவெட்டிக்கு அழகு சேர்த்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பொய்கையிலிருந்தே கோணேசர் கோயிலுக்கு தாமரைப் பூக்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
ஊரை மறித்திருக்கும் ஆற்றுக்கு குறுக்காக இப்போது அழகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் மிதப்பு பாதையே பயன்படுத்தப் பட்டமையினால் இவ்வழி போவோர் இந்த துறயடியில் தரித்து நின்றே சென்றனர். அதனால் ஒரு சிறு வர்த்தக மையமாகவும் இது தொழிற்பட்டது. ஆனால் இன்று பாலம் அமைந்த பின்பு அந்த முக்கியத்துவம் குறைந்து போயிற்று என்றே சொல்ல வேண்டும்.
இன்றைய உள்ளூராட்சி முறைமை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், பல கிராமங்களை இணைத்த கிளிவெட்டி கிராமசபை கிளிவெட்டி கிராமத்தையே தலைமை இடமாகக்கொண்டு இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
வீர மறவர்களின் விளை நிலமாகவும் கிளிவெட்டி வரலாற்றில் தன்னை நிருபித்து, நிமிர்ந்து நிற்கும் ஒரு பாரம்பரியம் மிக்க ஊர்.

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

இன்று 30.06.2018 சனிக்கிழமை ஆரையம்பதியில் மூத்த கலைஞர் மூனாகானாவுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடை பெறுகிறது வாழும் போதே வாழ்த்தி கொண்டாடுவோம் நம் மண்ணின் மா கலைஞர்களை

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

அண்ணாவியார்,கவிஞர்,மரபு வழிப்பட்ட ஆராய்ச்சி அறிஞர் என பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி.ஆரையம்பதியின் அதன் வரலாற்றையும் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் உலகறியச் செய்வதில் பெரும் பங்காற்றி ஆரையம்பதிக்கு பெருமை சேர்த்த முதல் தலை கலை மகன்.
கூத்து மீளுருவாக்கம் என்ற கோட்பாட்டு தளம் அதற்கான உரிமை கோரல் வாதப் பிரதி வாதங்கள் நீண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கலைஞர் சத்தமின்றி கூத்தில் புதிய மாற்றங்களை இன்றைய கூத்து பிதாமகர்கள் பிறக்காத அறுபதுகளில் கலைஞர் மு.க கூத்துக்களில் அதன் கதை கூறலில் புதிய உள்ளடக்கப் புனைவை சமுகப் பிரச்சினைகளை மையமிட்டு நிகழ்த்திக் காட்டியவர்.அந்த கூத்துக்கள் நவீன கூத்துக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.கூத்து மீளுருவாக்க முன்னோடிகளில் ஒருவர் நம் மு.க.
பல விருதுகள் அவரை தேடி வந்தடைந்தன இலங்கை அரசின் விருது வடக்கு கிழக்கு மாகாண அரச விருது,கிழக்கு மாகாண இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றாலும் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறை தலைக்கோல் விருது கொடுத்து கிழக்கின் தலை கலை மகனாக மதிப்பளித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
அவருடனான பரீட்சயம் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக கலைப் பீடாதிபதியாக கடமையர்றிய காலங்களில் அவரோடு உரையாட அவர் அனுபவங்களை என்னுள் பகிர்ந்து கொள்ள கிடைத்த அந்த நாட்கள் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவே கருதுகிறேன்.
மட்டக்களப்பின் பண்பாடு வரலாறு மரபு வழிக் கலைகள் என்பவற்றில் ஒரு முதிர்ந்த அறிஞர் ஆரையம்பதி சமூகம் அவரால் பெருமையுறுகிறது.
கிழக்கு மாகாணம் பற்றிய அறிதலில் ஒரு பல்கலைக் கழகமாக திகழும் மு.க அவர்களுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் அளித்து தன்னை கெளரவப் படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மகா கலைஞனை வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம்
இவன்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி