வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 2 July 2018

கலைஞர் -95 கலைஞர் எனும் தமிழ்

கலைஞர் -95
கலைஞர் எனும் தமிழ்


இன்று கலைஞருக்கு 95 ஆவது பிறந்த நாள் நான் அவர் எழுத்தை முகரத் தொடங்கியது என் பதின்ம வயதுகளில் அறுபதுகளில் அவரின் எழுத்தின் தாக்கம் எங்கோ மூலையில் இருந்த ஈழத்துக் கிராமம் ஒன்றுக்கும் பரவியிருந்த்தமை அவர் சார்ந்திருந்த பகுத்தறிவு சுயமரியாதை கொள்ககளின் தாக்கம்தான்.
1952 ஆம் ஆண்டு வெளி வந்த பராசக்தி திரைப் படம் கொழும்பில் ஒரு திரயரங்கில் 52 வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்திருந்தது.பராசக்தி திரைப்படமே அவர் எழுத்துக்களை தேடி தேடி அந்த கால இளைஞகளை வாசிக்க தூண்டியது வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு என எல்லா இடங்களிலும் அவர் எழுத்தால் கவரப் பட்டோர் பலர் அவர் மாதிரியே எழுத முற்பட்டோரும் பலர்.
மனோகரா எனும் திரைபடத்தால் வசீகரிக்கப் பட்டு கலைஞர் வசனங்களில் கட்டுண்டு கிடந்த காலம் அது அவர் வசனங்களுக்காகவே பல படங்கள் இன்றும் பேசப் படுகின்றன.
ஈழத்தில் வழிபாட்டுக்கு உரிய தெய்வமாக போற்றப் படும் கண்ணகி கதையயை பூம்புகார் எனும் திரைப்படமாக தந்தார் அது கிழக்கு தமிழ் மக்களின் பண்பாட்டோடு கலந்திருந்த கண்ணகி வழக்குரையோடு மிக நெருக்கமாக கண்ணகியின் வழக்குரையயை பிரதானப் படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
கலைஞர் அவர் தன் எழுத்துக்களால் என்னோடு பேசியவர் அவர் எழுத்து என்பது அவர் உருவாக்கிய தனிப் பாணி அந்த பாணியில் அவரது ராஜ பாட்டையை இன்று வரை யாரும் எட்டிப் பார்க்க முடியாத உயரத்தில் அவர்.
அவரது கவியரங்க கவிதைகள் கனல் தெறிக்கும் பகுத்தறிவுப் பிரசாரமாயும் சுயமரியாதைக் குரலாகவும் சமூக நீதிக் கணையாகவும் அடக்கப் பட்டோரின் மொழியாகவும் எப்போதும் ஒலித்தன .
தமிழ் இலக்கியத்தின் எந்த துறையில் அவர் கால் பதிக்கவில்லை எல்லாவற்றிலும் அவர் எழுத்து அந்த தனித்துவ மொழி அவருக்கான இடத்தை எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்.
கவிதை ,சிறுகதை,நாவல்,நாடகம்,சினிமா ,கட்டுரை ,உரைச் சித்திரம் என விரிந்து நிற்கும் அவர் எழுத்து எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார் என்பதை யாரும் இலகுவில் புறந் தள்ளிவிட முடியாத படி அவர் தமிழோடு இணைந்திருக்கிறார் ,நவீன தமிழ் எழுத்தின் ஒரு செல் நெறியை உருவாக்கியிருக்கிறார்.
திருக்குறளுக்கு எழுதிய எளிய உரையும் வள்ளுவரை தன் எழுத்துக்கள் தோறும் முதன்மைப் படுத்தும் பண்பும் கன்னியா குமரியில் அமைந்த தமிழின் அடையாளமாய் உயர்ந்து நிற்கும் வள்ளுவனின் சிலையும் சென்னையில் அமைந்த வள்ளுவர் கோட்டமும் தமிழ் பண்பாடு நம்மோடு பேசும் இடங்கள்.
சிலப்பதிகாரம் நாடகமாய் படைத்து பூம்புகார் திரைப்படமாகி பின்னர் பூம்புகாரில் பூம்புகார் கோட்டமமைத்து தமிழரின் வரலாற்று தொன்மை நிகழ்வுகளை மீட்டெடுத்த பண்பாட்டு கருவூலமாய் இன்றும் அவர் பெயர் சொல்லும்சாதனைகளில் ஒன்று.
சங்கத் தமிழ் எழுதி பண்டைத் தமிழ் இலக்கியத்தை பாமரனும் புரியும் படி சொன்ன தும் ரோமபுரிப் பாண்டியனும் ,பாயும் புலி பண்டார வன்னியன் என தன் தமிழால் தமிழன் வீரத்தையும் பண்பாட்டையும் பரவலான வாசிப்புக்கு கொண்டு சென்றதும்.
தொல்காப்பிய பூங்காவால் தன் தொண்டனுக்கும் தமிழ் இலக்கணத்தின் தொன்மையயை உணர வைத்ததும் தமிழில் எத்தனை வழித் தடங்கள்.
அவர் எழுதிய சமூக புதினங்கள் இரு நூறுக்கு மேற்பட்ட சிறுகதகளும் பேர் சொல்லும் பல நாவல்களும் சமூக அக்கறையுடன் படைக்கப் பட்டவை.
கலைஞரின் எழுத்துப் பற்றி பிரபஞ்சன் இப்படிச் சொல்வார்
"ஒரு கருத்து, சிந்தனை, அனுபவத்தைச் சமூகம் சார்ந்து வெளிப்படுத்தவே கலைஞர் சிறு கடை வடிவத்தை எடுக்கிறார் அல்லாமல், கருத்தற்ற சமூக உணர்வற்ற ஒரு சிறு கதையைக் கூட அவர் எழுதிய தில்லை. இது ஓர் எழுத்தாளனுக்குப் பெருமை தரும் விஷயம்"
பேராசிரியர் சிவத்தம்பி தன் கலைஞர் பார்வையயை இப்படிப் பதிவிடுகிறார்
"தமிழகத்தின் உள்ளூர் வரலாற்று நோக்கில் (local history) இவை முக்கியமானவையாகும். எடுத்துரைப்பின் (Narration) முறை, சம்பவங்களை (தொடர்ந்தும்) புலனுகர்வுக் கவர்ச்சியுடையதாக அமைந்துவிடும்"
பிரபஞ்சன் கலைஞரின் எழுத்து பற்றி மேலும் கூறும் போது
"கருணாநிதி போன்ற கலகக்காரர்கள் தான் ஒரு பழமையான சமூகத்தின் அசமந்தத்தைப் போக்கும் திறன் பெற்றவர்களாக, வரலாற்றேட்டில் விளங்குவார்கள்.
தமிழ்ப் படைப்பிலக்கியப் போக்கில் அழுத்தமான தடம் பதித்த தமிழ்ச் சிற்பிகளில் கலைஞர் மு.கருணாநிதி, அவருடைய வன்மையையும் கூர்மையும் மிக்க சமூக யதார்த்த விமர்சனத்துக்காகவும் போர்க்குணம் மிக படைப்புகளுக்காகவும் நினைக்கப்படுவார்"
தமிழ் இலக்கிய வரலாறு அவரைக் கடந்து சென்று விடாத படி அவர் எழுத்துக்கள் என்றும் பேசப் படும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி