வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

கஞ்சன் அம்மானை

கஞ்சன் அம்மானை

என் சின்ன வயதில் இருந்து கஞ்சன் அம்மானை என் காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது எங்கள் அய்யா அம்மாவின் அப்பா திருமிகு வீரகத்தி குமாரசாமி அவர்கள் தன் பரம்பரை சொத்தாக ஒரு ஏட்டை வைத்திருந்தார் அது கஞ்சன் அம்மானை ஏடு.அவர்கள் பரம்பரை பரம்பரையாக வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் வீட்டில் விளக்கு வைத்து ஏடு படித்து பத்தாம் நாள் பொங்கி மடை வைத்து கொண்டாடுவது ஒரு மரபாக இன்று வரை நீள்கிறது.

சாத்திரியார் புலவர் தாமோதரம் பிள்ளை அவர்கள் சேனையூருக்கு ஒவ்வோராண்டும் அந்த தினத்துக்கு வந்து எங்கள் அம்மா வீட்டில் பத்து நாளும் தங்கி ஏடு படிப்பது அவரே அவர் இறந்த பின் எங்கள் அம்மாவின் அப்பாவே படித்து வந்தார் அவரே எனக்கு ஏடு படிப்பது எப்படி என காட்டி தந்தார் நான் ஏடு வாசிக்க கற்றுக் கொண்டது அவரிடம்தான்.

நான் பல்கலைக் கழகம் சென்ற பின் பல்கலைக்கழக நூலகத்தில் கஞ்சன் அம்மானை என் கண்ணில் பட்டது அதை 1970ல் பேராசிரியர்.சு.வித்தியானந்தன் பதிப்பித்திருந்தார்.நான் ஏடாய் படித்த நூல் அச்சில் வெளி வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியயை தந்தது. பின்னர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களை சந்தித்து அந்த நூலின் பிரதி ஒன்றை பெற்றுக் கொண்டேன் .

ஏடு படித்து பொங்கும் இம் மரபு எங்கள் வீட்டில் மட்டும் அல்ல மட்டக்களப்பிலும் பல வீடுகளில் இந்த மரபு காணப்படுகிறது.
கஞ்சன் அம்மானை படிப்பு மட்டக்களப்பு கிருஸ்னன் கோயில்களில் ஆண்டு தோறும் திருவிழாக் காலங்களில் படித்து கிருஸ்னன் பிறப்பை நிகழ்த்திக் காட்டும் ஒரு இலக்கியம் நிகழ்த்துகையாக ஒரு பண்பாட்டு தொடர்ச்சி காணப்படுகிறது.

இந்த மரபு பற்றியதான ஆய்வை காலம் சென்ற கல்வியாளர் கவிஞர் சுகந்தி.சுப்ரமணியம் செய்துளார் அது நூலாகவும் வெளி வந்துள்ளது.
கஞ்சன் என இந்த நூல் குறிப்பிடுவது கம்சன் என்ற புராணப் பெயர் கிராம வழக்காற்றில் கஞ்சனாக உரு மாறியிருக்கிறது.
கண்ணகி வழக்குரை போல் மட்டக்களப்பில் உருவான செவ்விலக்கியம் கஞ்சன் அம்மானை.
மரபுகள் தொடரட்டும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி