வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 2 July 2018

கிள்ளைகள் விளையாட்டால் கிளிவெட்டியான தொல்லூர்

அரங்கம் பத்திரிகையில் இருந்து...
கிள்ளைகள் விளையாட்டால் கிளிவெட்டியான தொல்லூர்
===================================
-- பால.சுகுமார் ---
'மாவலியாள் வந்து விழுந்து
வளைந்து வளம் சேர்க்கும்
வண்ணத் தமிழ் ஊர்
பொன்னாய் வயல் விளைய சென்னெல்
கதிரறுக்கும்
கிள்ளைகள் விளையாட்டால்
கிளிவெட்டியான தொல்லூர்

நெல்லும் நீள் வாழைத் தோட்டங்களும்
நன்னீரும் நல்ல மனிதர்களும்
முன்னோராய் தோன்றி மறைந்த
முது ஊர் கிளிவெட்டி
தயிரும் பாலும் தண்ணியாய் இங்கிருக்க
ஆம்பல் பூக்கள் அழகுற வாய் விரிக்கும்
தேம்பல் இல்லா வாழ்வு இவர்க்கு
திசையெங்கும் புகழ் படைத்த மாந்தர் கொண்ட ஊர்'

கிளிவெட்டி ஈழத் தமிழ் நிலத்தில் பாரம்பரியம் மிக்க பழம் பெருமைகள் கொண்ட பெரு நிலப் பரப்பு. வயலும் வயல் சூந்த நிலத் திட்டும் மாவலியாறு சுற்றி வந்து வற்றாத நீர்வளத்தை எப்போதும் பொய்க்காத விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட அழகிய கிராமம்.
மூன்று போகம் நெல் வேளாண்மையில் விளைந்து கிடக்கும் முன்னைய நாட்களில் கூட்டம் கூட்டமாக கிளிகள் வந்து நெற் கதிர்களை பறித்து சென்றாலும் அதை பற்றி கவலைப் படாதவர்களாய் மக்கள் இருந்ததாகவும் அதனால் கிளிகள் நெல்லை வெட்டி சாப்பிட்டு மகிழும் வளம் மிக்க இடம் என்பதால் கிளிவெட்டி எனப் பெயர் வந்ததாக இக் கிராமம் பற்றிய கதைகள் காலம் காலமாக பேசப் படுகின்றன.
மூதூரில் இருந்து பயணிக்கும் போது மட்டக் களப்பு செல்லும் வழியில் பத்து மைல் தொலைவில் இருபுறமும் வயல்கள் சூழ பயணம் முழுவதிலும் பசுமையை சுவைக்க முடியும். கிழக்கே நீண்டிருக்கும் அல்லைக் குளமும் மேற்குப் புறமாக விரிந்திருக்கும் பழய வரலாற்று தொல்லியல் சான்றுகள் மிக்க ஆதி அம்மன் கேணியும் கிளிவெட்டியின் புராதன பண்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன.
குளக்கோட்டன் வகுத்தமைத்த நியமங்களின் படி விளை நிலங்களின் மூலம் கோணேசர் கோயிலுக்கு இங்கிருந்து நெல்லும் தாமரை மலர்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
சோழர் காலத்து வேழக்காரப் படையினரின் ஒரு பகுதியினர் இங்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டதாகவும் சில வரலாற்று செய்திகள் சொல்கின்றன. ஆதியம்மன் கேணி தமிழ் தொல்லியல் சான்றுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு பழைய கோயிலினின் இடி பாடுகளும் வாழ்விடங்களின் அழிந்த பகுதிகளும் உள்ளன.
கொட்டியாரத்துப் பிரதேசத்தில் மிகப் பழமையான மாரியம்மன் கோயில் இங்கேயே உள்ளது. இந்த கோயிலை சன்னியாசி ஒருவரே ஸ்தாபித்ததாக செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
கதிர்காம யாத்திரை செல்வோர் கிளிவெட்டியில் தங்கியே தங்கள் பயணத்தை தொடர்வர். குறிப்பாக இந்த மாரியம்மன் கோயிலே அவர்கள் தங்கு மடமாக பாவித்து ஊரவரின் உபசரிப்பில் உண்டு மகிழ்ந்து யாத்திரையை தொடர்வர்.
வெருகல் கோயில் யாத்திரிகர்களின் களைப்பாறும் இடமாகமும் கிளிவெட்டி நம் கிராமிய பண்பாட்டின் வழி பயணிக்கும் தமிழர் பண்பாட்டையும் கலாசார கூறுகளையும் சிறப்பாக காலம் காலமாக பின் பற்றும் ஒரு புராதன கிராமமாக வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
கிளிவெட்டி முன்னைய நாட்களில் எருமை மாட்டுப்பட்டிகள் நிறைந்த இடமாக இருந்தமையும் பல ஊர்களிலிருந்தும் குத்தகைக்கு வயல் வேலைக்காக இங்கிருந்து மாடுகளை எடுத்துச் செல்வதும் மரபாக இருந்தது. தம்பலகாமம் ஆலங்கேணி போன்ற இடங்களிலிருந்து மாடுகளை குத்தகைக்கு எடுத்துச் செல்வர்.
கிடா மாட்டு வளர்ப்போடு தொடர்புபட்ட நாயன்மார் வழிபாடு கிளிவெட்டியின் பழமை மிகு கலாச்சார கொண்டாட்டம். காலத்துக்கு காலம் நாயன்மார் வேள்வியும் அதனோடு தொடர்புபட்ட குழு மாடு பிடித்தலும் முக்கிய பண்பாட்டு மரபாக பேணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர் காலத்திலும் கொட்டியார நிர்வாக முறைமையில் கிளிவெட்டி முக்கிய பங்கு வகித்ததாக ஊர் பெரியவர்களின் செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று தபால் கந்தோர் அமைத்துள்ள இடம் முன்னர் வன்னியனாரும் பிரித்தானிய அதிகாரிகளும் தங்கி இருந்த இடமாகப் பேசப்படுகிறது.
வேளாண்மையே பிரதான தொழில் என்பதால் விளைந்து ஓய்வு காலங்களில் நாட்டுக் கூத்துக்கள் அரங்கேற்றம் பெற்றதாகவும் பெரிய மரங்களில் சித்திரை மாதத்தில் ஊஞ்சல் பாடலோடு ஆடி மகிழ்ந்ததாகவும் அறிய முடிகிறது.
பெரியதொரு தாமரைப் பொய்கை கிளிவெட்டிக்கு அழகு சேர்த்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பொய்கையிலிருந்தே கோணேசர் கோயிலுக்கு தாமரைப் பூக்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
ஊரை மறித்திருக்கும் ஆற்றுக்கு குறுக்காக இப்போது அழகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னர் மிதப்பு பாதையே பயன்படுத்தப் பட்டமையினால் இவ்வழி போவோர் இந்த துறயடியில் தரித்து நின்றே சென்றனர். அதனால் ஒரு சிறு வர்த்தக மையமாகவும் இது தொழிற்பட்டது. ஆனால் இன்று பாலம் அமைந்த பின்பு அந்த முக்கியத்துவம் குறைந்து போயிற்று என்றே சொல்ல வேண்டும்.
இன்றைய உள்ளூராட்சி முறைமை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், பல கிராமங்களை இணைத்த கிளிவெட்டி கிராமசபை கிளிவெட்டி கிராமத்தையே தலைமை இடமாகக்கொண்டு இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
வீர மறவர்களின் விளை நிலமாகவும் கிளிவெட்டி வரலாற்றில் தன்னை நிருபித்து, நிமிர்ந்து நிற்கும் ஒரு பாரம்பரியம் மிக்க ஊர்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி