வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

ஊர் தந்த உத்தமன் ஊருக்கோர் உபகாரி அஞ்சலி திருமிகு.குமரேசபிள்ளை.கனகசிங்கம்

ஊர் தந்த உத்தமன்
ஊருக்கோர் உபகாரி
அஞ்சலி
திருமிகு.குமரேசபிள்ளை.கனகசிங்கம்


சேனையூர் பெற்றெடுத்த சிறப்பு மிகு சேவையாளன் என் நெருங்கிய உறவினன் சின்னப்பு என அழைத்து சொந்தம் கொண்டாடி என் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் பண்பாளன்.
ஊரோடும் உறவுகளோடும் எல்லையிலா அன்பும் ஆதரவும் கொண்டு மக்கள் உணர்வுகளை மதித்து சேவை செய்த பண்பாளன்.கடமையயைச் செய் பலனை எதிர் பாராதே என ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய உத்தமன் .எதையும் அறிவார்ந்த கண்ணோட்டத்துடன் பார்த்து பகுத்து அறியும் சிந்தனையாளனும் கூட.

ஊரில் என்ன நடந்தாலும் அவர் தரிசனம் அங்கிருக்கும்
சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலைய பரிபாலன சபை
சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம்
சேனையூர் கும்பத்து மால் சபை
சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம்
சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்
என்பனவற்றின் தலைவராக இருந்து சிறப்பான பணியாற்றி ஊரின் வளர்ச்சியில் மிகுந்த நாட்டமுடன் உழைத்தவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் பெற்றார் ஆசிரியர் சங்க செயலாளராக பதவி வகித்து பாடசாலையின் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றவர்.
சமூக சமய சேவையாளனாக மட்டுமல்லாமல்
பல் துறை ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவர்

சிறந்த கரப்பந்தாட்ட வீரன் எதிர் முகாமில் இருக்கும் வீரர்களை கதிகலங்க வைக்கும் வியூகங்களை தன் விளையாட்டால் சாதித்து காட்டியவர்.சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணம் வரை சென்று வெற்றிகளை குவிக்க காரணமாகியவர்.
சிறந்த சிந்தனையுடனான சொற்பொழிவுகளுக்கு சொந்தக்காரன்.
பாரம்பரியக் காவியப் பாடல்களை இயற்றும் திறன் மிக்கவர் .இவர் இயற்றிய சேனையூர் முத்து மாரியம்மன் பாடல்கள் இசை வடிவம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

வட்ட விதான் எனும் விவசாய வாழ் நிலை பதவியில் வளமான வாழ்வுக்கு வழி காட்டியவர்.

பதவிகளால் இவர் சிறப்பு பெறவில்லை பதவிகள் இவரால் சிறப்புப் பெற்றன.
மிகச் சிறந்த விவசாயி குடும்பத்தின் மீது நேசிப்பு நிறைந்தவர் மற்றவர்களுக்கு உதவும் இரக்க மனோ பாவமும் இவர் வாழ்வுக்கு சிறப்பு சேர்த்த விடயங்கள்.
வர்ணகுல மரபு எனும் என் ஆராய்ச்சி தொகுப்பு நூல் வெளிவர இருக்கிறது என கதைக்கும் போது சொல்லியிருந்தேன் அந்த நூலை வாசிக்க ஆவலாய் இருந்தீர்கள் இன்று அந்த நூல் விரைவில் வெளி வரவிருக்கிறது.நூலைக் காண நீங்கள் இல்லை. உங்களுக்கு அந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
இன்முகம் மாறா புன்னகை எப்போதும் என் நெஞ்சில்
போய் வாருங்கள் சின்னப்பு உங்கள் புன்னகைக்கு மட்டுமே விடை தருகிறேன்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி