வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 30 April 2018

ஊரகப் பேரொளி மண்ணின் மரபோடிணைந்த ஆடல் வடிவங்களின் ஆற்றுகை விழா

ஊரகப் பேரொளி
மண்ணின் மரபோடிணைந்த ஆடல் வடிவங்களின் ஆற்றுகை விழா


கடந்த 21.04.2018 பிரான்சின் பாரிஸ் நகரில் ரி.ரி.என் தொலைக்காட்சியின் ஊரகப்பேரொளி விருதுக்கான போட்டி நிகழ்வாக இந்த ஆடல் ஆற்றுகை விழா ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது .முழுக்க முழுக்க கிராமிய ஆடல் வடிவங்களின் சங்கமமாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது.இந்த விழாவின் பிரதம விருந்தினராகவும் பிரதம நடுவராகவும் நான் அழைக்கப் பட்டிருந்தேன்.
கீழ் பிரிவு,நடுவண் பிரிவு,மேல் பிரிவு ,உயர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நிரல் படுத்தப் பட்டிருந்தன மொத்தம் 35 ஆடல் அளிக்கைகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்டது பாராட்டு பரிசளிப்பு என 10.30 மணிக்கு நிகழ்வு நிறைவு பெற சந்தோசம் மிக்க ஒரு நாளாக அது அமைந்தது.

காவடி,கரகம்,பறையாட்டம்,கோலாட்டம்,குறத்தி நடனம்,மீனவ நடனம்,மயில் நடனம் ,பாம்பு நடனம் ,உழவர் நடனம் ,சிலம்பாட்டம் என பரத நாட்டிய முத்திரைகள் கலக்காத நம் மண்ணின் மரபுக் கலைகளின் எழுச்சி நிகழ்வாக இது அமைந்தது.

பங்கு பற்றிய இளம் மாணவர்களும் மாணவிகளும் பிரான்சிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள் கலைகள் பற்றிய அறிதலும் புரிதலும் உள்ளவர்கள் என்பதை அவர்களோடு உரையாடிய போது அறிய முடிந்தது.

ஆடல் அளிக்கைகள் யாவுமே தீவிர பயிற்சியின் முதிர்வும் தேற்சியும் வெளிப்பட்டு நின்றது.நம்மை அசர வைக்கும் ஆட்ற் கோலங்களாக அவை அமைந்திருந்தன ஆசிரியர்களின் உழைப்பு பளிச்சென தெரிந்தது பெற்றோரின் ஒத்துழைப்பும் இவ் ஆடல் வடிவங்களின் அழகியல் வெற்றிக்கு உறுதுணையாய் தொழிற் பட்டிருந்தமையயை தெளிவாக உணர முடிந்தது.
எவ்வளவு வகையான ஆட்டக் கோல வேறு பாடுகளை மிக லாவகமாக செய்து காட்டியமை அந்த ஆடல் வடிவங்களின் தனித்துவத்தை வெளிப் படுத்தி நின்றன .ஒவ்வொரு குழுவினரும் மற்றய குழுவினருக்கு மிகச் சிறந்த போட்டியை கொடுத்திருந்தார்கள் யாரும் இலகுவாக பரிசை தட்டி செல்லாத அளவுக்கு ஒருவரை ஒருவர் மிஞ்சாத ஆடல்.

ஆடலில் அவர்களது நிபுணத்துவம் மிகச் சிறந்த வெளிப்பாடாய் அமைந்தது பல்கலைக் கழக பட்டப் படிப்பில் ஆடற்கலையை ஒரு பாடமாக படிப்பவர்களுக்கு சவால் விடும் ஆடல் அளிக்கைகளாக முதிர்ந்த ஞானத்தை வெளிப்படுத்தி நின்றன ஊரகப்பேரொளிக்கான இந்த ஆடல் நிகழ்வுகள்.நம் மண் சார்ந்த கலைகளுக்கான நம்பிக்கை ஒளி என்றால் அது மிகையாகாது.
புலம் பெயர் வாழ்வில் இன்னும் பல தலை முறைகளுக்கு நம் ஆடற் கலைகளும் கலாசார கலை மரபும் பழுதில்லாமல் பயணிக்கும் என்ற ஓர் உறுதியின் வெளிப்பாடாய் இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் .ரி.ரி.என் தொலைக்காட்சி குழுமத்தினர் அதன் உறுப்பினர்களின் அயரா உழைப்பின் விழைவின் அறுவடை இந்த நிகழ்வு எல்லோருக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நம் ஊர்கள் தோறும் நம் மண்ணின் கலைகள் இசையாகவும் இசையோடு இணைந்த ஆடல் வடிவங்களாயும் மக்கள் வாழ்வோடு இணைந்து கிடக்கிறது அவற்றின் வீச்சும் அவை நம் பண்பாட்டு கோலங்களாய் விரவி நிற்கும் செழுமையும் காலம் காலமாய் தொடரும் மரபுகள்.

நம் மண்ணின் கலைகளான இழுவைக் காவடி,ஆட்டக் காவடி,வசந்தன் ஆட்டம்,கொம்பு விளையாட்டும் அதனோடு இணைந்து வரும் ஆடலும் இசையும்,காத்தவராயன் கும்மி,மாரியம்மன் நடை,கும்ப ஆட்டம் ,ஊஞ்சல் இசை,கோலாட்டம்,களி கம்பு,கண்ணகியம்மன் காவியம்,
உலகம் முழுவதும் இத்தகைய நம் மண்ணின் ஆடல் வடிவங்கள் ஆற்றுகை விழாக்கள் நடத்தப் பட வேண்டும்.

பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி