வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

சித்திரை ஊஞ்சலும் போர்த் தேங்காயும்

சித்திரை ஊஞ்சலும் போர்த் தேங்காயும்


சேனையூர் பிள்ளையார் கோயிலடி கூட்டத்தால் நிறைந்திருந்தது புளிய மரத்தில் ஊஞ்சல் உயர எழுந்து நீட்டுப் பாவாடைகள் காற்றில் பலவண்ணமாய் விரிந்து அழகு காட்ட விசயண்ணா கொப்பி வைத்துக் கொண்டு ஊஞ்சல் பாட ஒரு பக்கம் தவமணியும் மறு பக்கம் தனலட்சுமியும் உச்ச ஊஞ்சல் உச்சத்தை தொட்டு முகில் நாடி அச்சத்தை தர ஆடும் ஊஞ்சலும் இசையுமாய் எழில் காட்டி நின்றது.

பலர் கைதட்டி மகிழ நடுவில் இருந்த இந்திராணி "தலைய சுத்துது உச்ச்சிறத நிப்பாட்டுங்க " என கத்த தயாளமும் வீரிட்டாள் உச்சுதல் வேகம் குறைய பாய்ந்திறங்கினாள் இந்திராணி .தயாளமும் தாவிக் குதித்தாள்.ஓடி வந்து ஏறினார்கள் சூரியமும் ,சியாமளாவும். ம் ஊஞ்சல் பாடலும் கையொலியுமாக உயரங்களை தொட்டு வந்து உற்சாக ஒலியயை ஆடும் அவர்களை ஊக்கப் படுத்த பூபதியார் நல்ல தங்காள் ஊஞ்சல் பாடலை பாடத் தொடங்கினார் பெண்கள் அதிக அளவில் கூடத் தொடங்கினர் .பூபதியாரின் கதை தழுவிய ஊஞ்சல் பாடல்களை கேட்க.

ஊஞ்சல் ஆடும் போது கயிறும் பலகையும் இறுகி எழுப்பும் முறு முறுப்பான ஒலி இசையின் இடை வெளியயை நிரப்ப ஊஞ்சல் பாடலில் ஊரே மயங்கிக் கிடந்தது.ஆட்டத்தின் வேகத்துக்கு ஏற்ப பாடலின் வேகமும் மாறி மாறி தரு சொல்லும் கூட்டுக் குரலால் அந்த இடம் முழுவதையும் நிறைத்து ஊரின் நாலாபுறமும் இசையின் நாதத்தை எகிறி ஒலிக்க செய்ய இன்னமும் கூட்டம் அதிகமாகியது .

தரு சொல்லும் பெண்கள் ஒரு தாள லயத்துடன் ஊஞ்சல் இசைக்கு மெருகு சேர்க்க வானம் வரை நீண்டு செல்லும் ஊஞ்சலுக்கு உணர்வு மொழியாய் அமைய சித்திரை ஊஞ்சல் நெஞ்சம் நிறை பொழுதாய் நீண்டது.
"தன தன தானினோம் தான
தன தன தானினோம் தான
தான தனா தன தான தனா தன
தானே தானே ஏ ஏ ஏ
என அரியமலர் தொடங்க பின்னணியில் எல்லோரும் தருவை சத்தமாக பாட ஊஞ்சல் உயர பாய்ந்து மேலேறி கீழ் இறங்கி சரிந்து கவிண்டு சாகசம் பலகையாய் ஊஞ்சல் பலகை ஒய்யாரமிட்டு ஓயாத நீட்டத்தைப் பெற
இன்னொரு தருவை சிவலிங்க நாயகி இசைக்க லேகாவும் சேர்ந்து பாடத் தொடங்கினாள்

" தந்தன தான தன தான தந்தினா
தந்தன தானானா ஆ ஆ ஆ
தந்தன தான தன தான தந்தின
தந்தன தானானா ஆஆஆ ஆ"

அங்கிருந்தோர் இசையிலும் ஊஞ்சல் ஆட்டத்திலும் மயங்கிக் கிடக்க
ஆசையம்மா தேத்தண்ணியுடன் வர காளியாச்சி ஒரு பெட்டி நிறைய பலகாரங்களுடன் வந்தார்.முத்தான் ஆத்தையும் அவ்விடம் வர கூடவே தெய்வானப் பிள்ளை, மாரிமுத்து என் சுற்றி வரையுளோர் ஒரு சேர கூட பூபதியார் கண்டி ராசன் கதையயை ஊஞ்சல் பாடலாய் பாடத் தொடங்க ஊரே அவர் இசையில் மயங்க ஊஞ்சல் ஓடம் ஒன்று கடலில் அலைகளிடையே பயணிக்கும் அழகிய படகு போல ஆடிக் களித்தது என்றே சொல்லலாம்.
ஊஞ்சலாட்டம் முடிந்து சித்திரையாள் செந்தமிழ் இசையால் குழித்து செழித்து நின்ற அந்த மாலைப் பொழுது மற்றொரு மகிழ் விளையாட்டுக்காய் காத்துக் கிடக்க பூத்துக் கிடந்த பன்னீர் மரத்தடியில் பாலசிங்கத்தாரின் வரவு இன்னொரு போருக்கு கட்டியம் கூறி நின்றது.

சித்திரைக் கொண்டாட்டத்தின் சிறப்புக்கு சிறப்புச் சேர்க்கும் போர்த்தேங்காய் அடித்தல் ஊரவர் கூடி நிற்க அரங்கேறும் அதிசய பொழுது அது.
ஊரிலுள்ள பெரும்பாலோர் கூடி விடுவர் அந்த அந்திப் பொழுதில் வாலசிங்கத்தார் பக்கம்,அருமத்துரையர், அகிலேசர்,சுப்பையர்,நடராஜா,சின்னராசர் கிட்ணதாஸ் என அணி வகுக்கும் கூட்டம்

முதல் போர் மருத நகர் சின்னையர் கூட்டத்தோட ஆரம்பமாக இருந்தது சின்னையரோட பக்கியதுர் செல்லையர் ,பரமசாமி,வேல்முருகு என அணி சேர்ந்து நிக்க .
முதல் தேங்காய வாலசிங்கத்தார் வைக்க சின்னையர் தான் வைத்திருந்த கையான் காலித்தேங்காயை அடிக்க வாலசிங்கத்தார் வைத்த தேங்காய் சிதறி சுக்கு நூறாகியது.இது வாலசிங்கத்தார்ர தந்திரம் சின்னையர் சந்தோசத்தில் கை விளையாட்டுப் போட்டு தன்ர காய தரையில் வைக்க வாலசிங்கத்தார் ஓங்கி அடிக்க அது சறுக்கி பார்த்து நின்ற ஒருவரின் காலை பதம் பார்த்தது.
மாறி மாறி தேங்காய்கள் சிதற இரு பக்கமும் ஆரவாரமும் கை தட்டலுமாக வேகம் எடுக்க பாலசிங்கதார் சிங்கமென சீறி தேங்காய்களை சிதறடிக்க அவர் முன் வந்த எல்லாக் குழுக்களும்.சிதறு தேங்காய் போல தோல்வியத் தழுவ உடைந்த தேங்காய்கள்.மலையென குவிந்தது.

காலித் தேங்காய் பெரிய வளவுத் தேங்காய் ஊற்றடித் தேங்காய் வள்ளிலேணித் தேங்காய் என எல்லா போர்த் தேங்காய்களும் மோதிக் கொண்ட அந்த்த காட்சிகள் போர்த் தேங்காய் அடித்தல் நிகழ்வின் சிறப்பை உணர்த்தி நின்றன.
Image may contain: tree, plant, sky, outdoor and nature
மாலை செவ்வானமாய் கோலம் காட்டும் நேரம் விதானையார் கட்டைபறிச்சானிலிருந்து ஒரு கூட்டத்துடன் வந்து சேர்ந்தார் "மச்சான் எல்லாரையும் நீ தோற்கடிச்சுப் போட்டது சரி என்ன வெல்லு பாப்பம் என்று ஒரு தேங்காய சுத்தி நிறுத்தினார் பணிவு வளவு கையான் காயால் பதம் பார்த்த சிங்கத்தார் ஒற்றையடியில் விதானையாரின் காயை அடித்து நொறுக்கினார்.
விதானையாரும் மாறி சிங்கத்தார்ர தேங்காய்களை சிதறடிக்க வெற்றி மாறி மாறி இருவர் பக்கமும் வந்து போக ஆரவாரமும் மாறி மாறி ஒலிக்க ஒருவரை ஒருவர் மிஞ்சாத விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது .
இறுதியில் எறி தேங்காய் விடுதல் என முடிவாகி காய்களை எறித அவை நடு வழியில் மோதி உடைந்து சிதற சிலவேளைகளில் இருவரது தேங்காய்களும் ஒன்றாகவே நடு வழியில் அடிபட்டு உடைந்து விழும் காட்சி வாண வேடிக்கையயை போல இருந்த்தது.
இறுதியில் சிங்கத்தாரே ஜெயிக்க அருமைத்துரயர் பாலசிங்கத்தாரை தோழில் தூக்க கூட்டம் அவர் வீடு நோக்கி ஆரவாரத்துடன் சென்றது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி