வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 12 March 2018

குருதியில் தோய்ந்த தருணம்1

குருதியில் தோய்ந்த தருணம்

முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் கட்டைபறிச்சான் பிள்ளையார் கோயிலின் அருகில் உள்ள அனிச்ச மர நிழலில் தோழர்களோடு காலை நேரம் கழிந்து கொண்டிருந்தது. எல்லா இயக்கங்களும் எங்கள் ஊரில் சுதந்திரமாக உலவிய காலம் ,விதானையார் வீட்டுச் சந்தியயை திரும்பி பார்க்கிறோம் மூன்று சைக்கிளில் கைகளில் AK47 சுமந்த அவர்கள் எங்களை நெருங்குகின்றனர் நடுவில் போன சைக்கிளில் கைகள் கட்டப் பட்ட நிலையில் யோகேஸ் அத்தான் என் மனம் பதைபதைத்தது ஏக்கப் பார்வையுடன் அவர் முகம் கடந்து போனது.
சிலமாதங்களுக்கு முன் அவர்கள் அப்பா பழய விதானையார் என் நெருங்கிய மாமா முறயானவர் திரு.சிவபாக்கியம் அவர்கள் அவர்களால் படுகொலை செய்யப் பட்டார்.எந்த நீதி விசாரணையும் இல்லாத படுகொலைகளின் வரிசையில் இதுவும் ஒன்றானது,
மனம் தூணுக்குற்று துவண்டு போனது பயம் எங்களை பற்றிக் கொண்டது.யாரும் கேள்வி கேட்க முடியாத நேரம் அது விடுதலையின் பேரால் என்னன்னவோ நடந்த காலம் .ஒரு நாடகம் போட்டதற்காக என் பள்ளித்தோழன் இரத்தினசிங்கம் நய்யப்புடைக்கப் பட்ட நாட்கள் அவை.
அன்று நாங்கள் பலரை அணுகி விசாரித்தோம் விசாரணைக்காக சம்பூருக்கு கொண்டு போகிறார்களாம் என்றார்கள்,விசாரித்து விட்டு விடுவார்களாம் என்றார்கள் .மனம் ஒப்பவில்லை கையாலதவர்களாய் நாங்கள்.
மாலையாயிற்று மனம் என்னவோ போல இருந்தது,யோகேஸ் அத்தான் நடிகர் சிவகுமார் போன்ற அழகு பிறருக்கு துன்பம் நினைக்காத ஒருவர்,மற்றவர்களுக்கு எப்போதும் உதவியாய் இருப்பவர்.ஊருக்குள் அவரைப் போல கண்டு பிடிப்பது அபூர்வம்.இன்னமும் அவரது அந்த புன் சிரிப்பு கலந்த முகம் மறக்க முடியாத கனவாய் என்னுள்.
அவர்கள் இப்போ மோட்டர் சயிக்கிளில் ஒருவன் அவரை கொண்டு வருகிறான் பின்னால் AK47 சுமந்த அவர்கள்.அதே அனிச்ச மரத்தடியில் நாங்கள். விதானையார் வீட்டுசந்திக்கு அவர்கள் சென்று விட்டார்கள் விடுதலை செய்யப் போகிறர்கள் என எண்ணிய தருணத்தில், இரண்டு வெடிச் சத்தம் திரும்பி பார்க்கிறோம் வேகமாக அவர்கள் மோட்டார் வண்டிகள் ஓடி மறைகின்றன .
என்ன நடந்தாலும் பரவாயில்லை என அவ்விடத்திற்கு ஓடி போகிறோம் யோகேஸ் அத்தான் இரத்த வெள்ளத்தில் உயிரற்ற அவர் உடல். எங்கள் கைகளில் இரத்தம் வழிந்தோட தூக்கிச் செல்கிறோம் கோபமும் வெறுப்பும் கலந்த உணர்வுகளுடன் எதுவுமே செய்ய முடியாதவர்களான மனிதர்களோடு மனிதர்களாய்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி