வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

கெவுளி முனை






கெவுளி முனை


மூதூரிலிருந்து சம்பூர் வழியாக சுமார் எட்டு மைல் தொலைவில் கெவுளி முனை  அமைந்துள்ளது.
மூதூர் பிரதேசத்தின் முக்கிய கேந்திர மையம் இந்த கெவுளி முனை.திருகோணமலை துறைமுகம் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக குறிகாட்டியாக இந்த முனை முக்கியம் பெறுகிறது.

கெவுளி முனை பற்றிய செய்திகள் கோணேசர் கல் வெட்டில் காணப் படுகின்றன மீகாமனுடனும் கோணேசர் கோயிலுடனும் தொடர்பு பட்ட செய்திகளாய் வரலாற்றில் முக்கிய புள்ளியாய் கெவுளி முனை அமைந்திருக்கிறது.
''ஈதலுடன் ஏரண்டம் இருப்பை புன்னைப்பருப்பு இவைகள் இறையாத்தீவில்
சேதமற ஒப்புவிக்கச் செக்காட்டி எண்ணெயுறத்
திருந்த ஆட்டி
ஒதரிய கெவுளிமுனை மீகாமனிடத்தில் வரவு
வந்தே கோணை
நீதமுறு கருகுல நற்கணக்கிலுள்ளபடி கிணற்றில்
நிறைவாய் ஊற்றல்''
என்ற கோணேசர் கல்வெட்டின் 17ஆம் பாடல் வரிகள் கெளளி முனையின் வரலாறுப் பழமையயை உணர்த்தி நிற்கின்றன.சோழர் காலத்தில் திருகோணமலைக்கான பயணத்தின் ஒரு துறைமுகமாகக் கூட இர்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.மீகாமக் குடியிருப்புகள் பல இங்கிருந்திருக்க வேண்டும் காலப் போக்கில்  வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தாலும் இதனை அண்டிய கொடுக்கன் குள பகுதியில் இன வன்முறைக்கு முந்திய கால கட்டங்களில் பல குடியிருப்புகள் இதன் தொடர்ச்சியை வலியுறுத்தி நின்றது.

மூதூர் பிரதேசத்தின் முக்கிய கேந்திர மையம் இந்த கெவுளி முனை.திருகோணமலை துறைமுகம் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்டியாக குறிகாட்டியாக இந்த முனை முக்கியம் பெறுகிறது.திருகோணமலை துறைமுகத்துக்குள் நுழையும் வாசலாய் இது அமைகிறது படைக் கால ஈழ வணிகத்தின் ஒரு துறைமுகமாகக் கூட இந்த இடம் இருந்ததற்க்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன .

1860 ஆம் ஆண்டு இந்த இடத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் (Vice-Admiral Harry Edmund Edgell) ஹரி எட்மண்ட் வரைந்த ஓவியம்

National Maritime Museum, Greenwich, London லண்டன் கிரீன் விச் மியூசியத்தில் உள்ளது இந்த ஓவியம் பல சேதிகளை சொல்கிறது.இது ஒரு துறை முகமாகமாகவும் கடற்படைத் தளமாகவும் குடியிருப்புகள் சூழ உள்ள இடமாகவும் தென் படுகிறது





ஆங்கிலேயர் காலத்தில் 1863ம் ஆண்டு இந்த வெளிச்ச வீடு கட்டப் பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன.ஆங்கிலேயர் தங்கள் கடற்படையின் ஒரு சிறு தொகுதியினரை வைத்திருந்தனர்.

ஒரு கட்டிடத் தொகுதியும் அதனோடிணைந்த காவலரண்களும் இருந்தன சுதந்திரத்தின் பின் வெறும் வெளிச்ச வீடாகவே இவ்விடம் பயன் பட்டது.

இவ் வெளிச்ச வீடு அரச பராமரிப்பாளரால் 1980கள் வரை பராமரிக்கப் பட்டது.

மாலை ஆறு மணிக்கு ஏற்றப் படும் வெளிச்சம் காலை ஆறு மணிக்கு அணைக்கப் படும்.

இங்கிருந்து பாயும் ஓளி வெருகல் வரை பரந்து ஒளி பரப்பியமை ஒரு காலம்
இந்த கடற்கரை விசேசித்த பண்பு வாய்ந்தது கடல் தாவரங்கள் இங்கு உயிருடன் காட்சியளிக்கும் அதிசயம்.கடற் கரை பளிங்குப் பாறைகளாய்  .

பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக வெளித்தெரியும் அழகும் கிழக்காக நீண்டு செல்லும் அழகிய கடற்கரையும் மேற்கில் கடல் அருகில் உயர்ந்து நிற்கும் சிறு குன்றும் அழகின் சிரிப்பாய் எப்போதும்.

கடற்கரையில் விரிந்திருக்கும் மணல் வெளி பளபளப்புடனான பளிங்கு காட்சியாய் சூரிய ஓளியில் மின்னிடும் அழகும் தனித்துவமானதுதான்

அபூர்வமான மீன் வகைகளும் இறால் வகைகளுக்கும் இந்த இடம் பேர் போனது

இங்கிருந்து பார்த்தால் கோணேசர் மலையும் கோயிலும் நமக்கு திருஞானசம்பந்தத் தேவாரமான குரைகடலோதும் நித்திலம் கொலிக்கும் என்ற வரிகள் வரலாற்று நினைவை நம்முள் இருத்தும்.

பவளப் பாறைகள் காய்ந்த பின் அவை சல்லி என அழைக்கப் படும் முன்னைய காலங்களில் இந்த சல்லிக் கற்களை சூழை வைத்து சுட்டு அதில் வரும் சுண்ணாம்பு  கொண்டே வீடுகளை கட்டும் ஒரு மரபு மூதூர் கிழக்குப் பிரதேசமெங்கும் பிரபலமாய் இருந்தது.நம் பாரம்பரிய கட்டிட முறைக்கு துணையாய் இங்கு எடுக்கப் படும் சல்லிக் கற்கள் பயன் பட்டன பலருக்கு வா௳வாதாரமாகவும் இது அமைந்தமை குறிப்பிடத் தக்கது.
யுத்த காலத்தில் முப்படைகளின் கூட்டு முகாம்கள் இங்கிருந்தன இன்று பொது மக்கள் போய் வரக் கூடிய நிலமை  காணப்படுகிறது.

இப் பிரதேசத்தின் அழகிய சுற்றுலா தலமும்  இதுதான்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி