வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

சேனையூர்க் காவியம்



சேனையூர்க் காவியம்


அவையடக்கம்
ஆழி சூழ் உலகனைத்தும் அருட் கொடை இயற்கையன்றோ
மேழியை கைப் பிடித்து மேன்மை கொள் உலகமெல்லாம்
ஏழையோன் நானுமிங்கு இன் கவி பாட வந்தேன்
சேனையூர்க் காவியத்தை செப்புவேன் வாழ்த்து வேண்டி

வாழ்த்து
முன் பழம் காலம் முதல் தமிழ் முது குடி நாங்கள் இங்கு
என்னரும் தந்தையரும் தாய் வழி குடி முறையும்
பன்னெடும் காலமதாய் எங்கள் பன்பாட்டு பூமியிது
மன்னவன் எல்லாளன் மகிழ்ந்திட்ட சோலையிது
குளக்கோட்டன் வழி முறையும் கோணேசர் குடி முறையும்
வளமைகள் பல நூறு வாழ்ந்திடும் பொன்னூரு
இளமைக்கு இளமயதாய் முதுமைக்கு முதுமையதாய்
வளமுடை சேனையூரை பாடுவோம் காவியமாய்

ஆற்று நீர் ஓடி வந்து அழகுற பாய் விரிக்கும்
சேற்றிலே கால் பதிக்க சென்னெல் விழைந்திருக்கும்
காற்றிலே இசை மணக்கும் கவிதையும் சேர்ந்திருக்கும்
சோற்றிலே விருந்தோம்பி சுகம் பெறும் எம்மூரே
வேற்றுமை மறந்திடுவோம் வெற்றிகள் நாம் சுவைப்போம்
சாற்றிடும் கல்வியதை சகமெங்கும் பரப்பிடுவோம்
போற்றிடும் சேவையிங்கு மத்திய கல்லூரி கூடமது
ஏற்றிடும் சேனையூரை என்றுமே வாழ்த்தி நிற்போம்


களம்
மேகம் கூடிமழை பொழிய மின்னல் வந்து ஒளி படர
தென்னம் பழங்கள் தானுதிர சிந்தும் பூக்கள் கோலமிட
மந்தைகள் கூடி ஓடியெள மானினம் கண்டு மிரள் கொள்ள
சிந்தை மகிழ்ந்து களி கொள்ள அறிந்தேன் வாழி சேனையூரே

குன்றின் அழகு கூடி வர கொடி முல்லையெங்கும்பூத்திருக்க
கறி மூடி மலை காடடைய கணங்குடா வெளியில் நாற்று நட
சிறுக்களி ஓடையில் தோணி விட சிரித்து சிரித்து நாம் மகிழ
மெதுக்கால் நண்டு கண்ணசைய அறிந்தேன் வாழி சேனையூரே

ஊற்றடி மூத்த ஊராமே உயரிய வரலாறு அதுவாமே
காற்றடித்து அலையடிக்கும் கரச்சை வெளியில் நிலவெறிக்கும்
பார்த்து நின்று மகிழ் கொள்வோம் படர் மலையின் சுவடுகளில்
நேர்த்து நிற்கும் வதனமாரை அறிவேன் வாழி சேனையூரே


புளிய மரத்து கிளைகளிலே ஊஞ்சல் கட்டி ஆடிடுவோம்
கெளிய கெளிய பலகையிலே ஊசல் பாட்டு பாடிடுவோம்
கிளித் தட்டு மறித்திடுவோம் கிட்டிப் புள்ளும் ஆடிடுவோம்
சளிய சளிய சிரட்டை பந்து அறிவேன் வாழி சேனையூரே

பொங்கல் வந்தால் எங்கள் ஊர் புதிய கோலம் கண்டு நிற்கும்
எங்கும் வெள்ளை மணல் பரவும் இருள் அகல ஒளி பிறக்கும்
கோலமிட்ட மேடையிலே தைப் பொங்கல் அழகு பெறும்
ஞாலமெங்கும் புகழ் கொண்ட அறிந்தேன் வாழி சேனையூரே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி