வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

சேனையூரின் உள் முக தரிசனம்

சேனையூரின் உள் முக தரிசனம்
எண்ணங்கள் நீள
நடக்கிறேன் என்னூர்
தெருக்கள் தோறும்
வண்ணங்கள் குழைத்த
குடை கவிழ் மரங்களின்
ஆட்சி
கோயிலடியும் புளிய மரமும்
பன்னீர் மரத்தின்
பச்சைப் பூக்களும்
வாசகசாலையும் ஆசுப்பத்திரியும்
வழி விட்டு நீளும்
பாடசாலையும்
நினைவுப் பூவில்
விரிந்து சொல்லும்
ஆயிரமாயிரம் கதைகளின் நீட்டம்
புழுதி பறக்க
வார் ஓடியதும்
சிறட்டை பந்தும்
சில்லுக் கோடும்
கிளித்தட்டும்
கூழாம் பாண்டியும்
நொண்டி அடிச்சானும்
நண்பர்கள் சேர
விளையாடியதும்
இந்த வீதிகள்தாம்
பணிவு வளவில்
கண்ணா மரத்தில்
ஒளித்து விளையாடி
ஓடிப் பிடித்ததும்
இந்த தெருக்களில்தான்
குரங்கு கேணியில்
இழனி ஆய்ந்து
இட்டம் போல
முட்டுத்தேங்காய்
உரித்து உண்டதும்
இந்த தெருக்கள்தான்
ஆச்சி கையால்
அப்பம் சாப்பிட்டு
கற்பகம் மாமியின்
கடையல் உண்டு
ஆச கடையில்
றசுக்கு வேண்டி
கொட்டைத் தேங்காய்
வெட்டி உடைத்து
அந்த ருசியில்
அனைத்தும் மறந்து
மச்சாள் மாருடன்
ஆடி மகிழ்ந்ததும்
இந்த தெருக்கள்தான்
முள்முருக்கையில்
குழலை வெட்டி
பாவட்ட மரத்தில்
அச்சு செய்து
அதன் கொட்டையெடுத்து
உள் வைத்து தள்ளி
வெடியாய் பாவனை செய்து
விளையாடித் திரிந்ததும்
எங்கள் சேனையூர் வீதிதான்
உயரத்திருந்து என்
சேனையூரின்
உள்முக தரிசனம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி