வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

உலக மரபுரிமை நாள் 2020 ஏப்ரல் 18 World Heritage Day 2020 கறி மூடி மலையும் பெண்டுகள் சேனையும்

உலக மரபுரிமை நாள் 2020
ஏப்ரல் 18
World Heritage Day 2020
கறி மூடி மலையும் பெண்டுகள் சேனையும்
வரலாற்றின் மூலங்களும் தொல் நில வாழ்விடங்களும் குன்றுகளிலும் குகைகளிலும் புதைந்து கிடக்கும் வரலாறு உலகம் முழுமைக்கும் பொதுவான.பண்பு.
இலங்கையில் மட்டக்களப்பு படுவான் கரையில் குடும்பி மலை ஈழத் தமிழர்களின் வரலாற்று தொல்லிடமாக அறியப்பட்டுள்ளது.இதைப் போலவே கறி மூடியை ஒத்த வடிவிலான குன்று சேனையூருக்கு கிழக்கே பழந்தமிழர் வாழ்வை சுமந்தபடி உறங்கிக் கிடக்கிறது.
சேனையூருக்கு கிழக்காக சேனையூர் ஆற்றைக் கடந்து அக்கரை சென்று குன்றின் நிமிர்வு பசுமையாய் நம்மை வரவேற்கும் மலையை அதன் சரிவுகளில் ஏறி அதன் சாரல் குன்றுகளில் முது மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை காணமுடியும்.
அகலமான செங்கற்களும் அதனோடு சேர்ந்த கல் அடையாளங்கள் செதுக்கப் பட்ட படிகள் நீண்ட கல் படுக்கைகள் என்பனவும் கறுப்பு சிவப்பு மட் பாண்ட சிதைவுகளும் பல்லாயிரம் வருச வரலாற்றை உணர்த்தி நிற்கின்றன.
சேனையூரில் வாழ்ந்த காளிமுத்து சாமியார் அடிக்கடி காணாமல் போய் விடுவதுண்டு பல நாட்களின் பின் அவர் ஊருக்குள் வரும் போது சாமியார் இவ்வளவு நாள் எங்கு போனீர்கள் என்றால் நான் கறி மூடி மலையில் இருந்தேன் என்பார் அங்கு என்ன செய்தீர்கள் என்று கேட்கும் போது என் சொந்தக் காரர்கள் இருக்காங்க என்பார் அந்த நாட்களில் மர்மங்கள் நிறைந்த மலையாகாகவே அது விளங்கியது.
யுத்த காலத்தில் பல இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றியது இந்த கறி மூடி மலையே.
கறி மூடி மலையை அடுத்து இன்னுமொரு சிறிய குன்றாய் நிலைத்து நிற்பது தோணிக் கற்சுனை மலை இந்த மலையும் வரலாற்று புதையல்கள் மிக்கதே.தோணி வடிவிலான கற் சுனை இங்கு கோடை காலத்திலும் வற்றாத நீரூற்றாய் நிறைந்து நிற்கும் இங்கும் தொல் தமிழர் குடியிருபுகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப் படுகின்றன.
இந்த இரண்டு மலைகளை அண்டியே பெண்டுகள் சேனை எனும் பரந்த சிறு வெளி காணப் படுகிறது.
குளக்கோட்டு மன்ன்னனோடு போர் புரிய வந்த ஆடக செளந்தரி தன் பெண்கள் சேனையை இங்கு அணி வகுத்து யுத்தத்துக்கு தயாரானதாலேயே இவ்விடம் பெண்டுகள் சேனை என அழைக்கப் பட்டதாக ஒரு கதை உண்டு.ஒரு பக்கம் குன்றுகளும் மறுபக்கம் ஆறும் என எதிரிகள் இலகுவில் புக முடியா அரண் மிக்கதாக இருந்திருக்கின்றது என்பதை இப்போது பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியும்.
யுத்தம் கடுமையாக நடந்த காலங்கள் மக்கள் பெருமளவில் தஞ்சம் அடைந்த இடமாக இது இருந்திருக்கிறது என்பது அண்மைய வரலாறு.
மலைகளிலும் குன்றுகளிலும் ஆற்றோரங்களிலும் நம் வரலாற்றின் மூலங்களை தேட முடியும்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி