வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

அருளாந்தம் எனும் அதீத ஆளுமை


அருளாந்தம் எனும் அதீத ஆளுமை
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் சேனையூர் மத்திய கல்லூரி சந்தித்த மிகப் பெரும் பல்துறைக் கல்வி ஆளுமை.
வகுப்புக்குள் நுழையும் போதே அவரது கம்பீரக் குரல் கட்டிப் போட்டு சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குமாய் காத்திருக்கும் பொழுதுகள்.பாடம் நடத்தும் விதமே தனி புவியல் பாடத்தை இலக்கியத் தன்மையோடு ஒரு கவித்துவ ஈர்ப்புடன் சொல்லித் தரும் அந்த நாட்கள் காதுகளில் ஒலிக்க இன்றும் அதே ஈர்ப்புடன் நான்.
Image may contain: 1 person முயற்சிக்கு முன்னுதாரணமாய் தன் மாணவர்களுக்கு வழி காட்டியாய் வாழ்ந்து காட்டி இன்னமும் எழுத்தின் மூலம் தன் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருக்கும் எப்போதும் இயங்கும் சவால்களை சாதாரணமாக்கி பயணிக்கும் ஒரு பன்முக ஆளுமை என் ஆசான்.
இன்று நாடகத்தால் உலகம் முழுவதும் அறியப்படுகிறேன் என்றால் என் திறமையில் நம்பிக்கை வைத்து சிறப்பு மிகு கதா பத்திரங்களை எனக்கு தந்து என் நடிப்பாற்றலை பார்த்து ரசித்து அழகு பார்த்தவர் என் ஆசான்.
இப்போதெல்லாம் போக்கு வரத்து வசதி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மிகவும் விரைவாக இலகுவாக சென்று விட முடியும் ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் ஆலங்கேணியில் இருந்து சேனையூர் வருவதென்றால் ஐந்து ஆற்றுத் துறைகளை கடந்து பயணிக்க வேண்டும் எங்கள் ஆசான் ஆலங்கேணியில் இருந்து காலை ஊர் ஆசிரியர் வருவதுக்கு முன் ஏழரை மணிக்கு வந்து மேலதிக வகுப்புகளை நாடகப் பயிற்சிகளை தந்து கொண்டு இருப்பார் அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட தியாகத் தன்மை வாய்ந்த ஆசான் இன்றுள்ளவர்கள் திருமலை நகரில் இருந்து கிராம பாடசாலைகளுக்கு தயங்கி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் சேவை மனப்பான்மையுடன் தனித்துக் கிடக்கிறார்கள்.
நடிப்பின் பல பரிமாணங்களை நான் கற்றது என் ஆசானிடமிருந்தே எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெற்ற சாதனையாளன் எங்கள் ஆசான்.
கேணிப்பித்தனாய் தமிழ் கவிதைக்கு மகுடம் சூட்டியவர் என்று சொல்லலாம் கவியரங்குகளில் அவர் கவிதை பாடும் போது கரவொலி வானைத் தாண்டிச் செல்லும்.அவர் தலைமையில் கவிதை வாசித்த தருணங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி