வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 13 June 2020

செல்லையா அண்ணாவியார்

செல்லையா அண்ணாவியார்
இன்று காலை தமிழகத்திலிருந்து வந்த செய்தி என்னுள் சில நினைவலைகளை எழுப்பி நின்றது.
Image may contain: 1 person, close-up
Image may contain: 1 person தமிழ் நாடு இசைப் பல்கலைக் கழகம் தன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் புரசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் மகன் புரசை சம்பந்தம் தம்பிரான் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளித்திருக்கிறது.பாரம்பரிய கலைஞர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் ஒரு விடயம் நடந்தேறி இருக்கிறது.
இத்தகைய மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப் பட வேண்டியவர்கள் இன்று நம்மோடு இல்லை அவர்களில் முதன்மை பெறும் ஒரு மா கலைஞன் செல்லையா அண்ணாவியார்.
நேற்று நாடகப் பள்ளி குழுமத்தினர் செல்லையா அண்ணாவியாரை பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பேட்டி காணும் ஒரு காணொளியை பகிர்ந்திருந்தனர்.தன் தள்ளாத வயதிலும் கம்பீரமான குரலிலும் அச்சரம் பிசகாத மத்தள அடியிலும் நம்மை மயக்கி நின்றது அந்த நேர்முகம்.
Image may contain: 1 person உயர் கல்வி படிக்கும் காலத்தில் செல்லையா அண்ணாவியாரைப் பற்றி பேராசிரியர் வித்தியானந்தன் ,பேராசிரியர்.சிவத்தம்பி,பேராசிரியர்.சி.மெளனகுரு சொல்லக் கேட்ட நினைவுகளோடு அவர் பற்றி அறிய ஆவல் என்னுள் புதைந்து கிடந்தது.
1992ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக பணியேற்ற போது அந்த மா கலைஞனை முதல் முதல் சந்திக்க கிடைத்த வாய்ப்பும் அதன் பின் வந்தாறுமூலை வளாகத்தில் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புகளும் அவருடனான நெருக்கம் அதிகமாகியது.
நுண்கலைத் துறை வாசலில் அமைக்கப் பட்டுள்ள இருக்கையில் அவரை காணலாம் நிரந்தர கூத்துக் களரி அமைக்கப் பட்ட போது அவர் அச்சா என சொல்லி பாராட்டியது இன்னும் அவர் குரலை என்னுள் தாங்கி நிற்கிறது.
களரியில் அவர் ஏறி நின்று அடித்த மத்தள ஒலி இன்னும் என் காதுகளை நிறைத்து நிற்கிறது..
அறுபதுகளில் கண்டடையப் பட்ட கூத்து மீளுருவாக்க பயணத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் வலது கையாய் இருந்தவர் செல்லையா அண்ணாவியார்.கர்ணன் போர் முதல் வாலி வதை ,இராவணேசன் ,நொண்டி நாடகம் என எல்லாவற்றினதும் அடி நாதம் செல்லையா அண்ணாவியார் .இன்று மட்டக்களப்பு கூத்து இளையோர் மத்தியில் பிரபலம் ஆகின்ற சூழ் நிலையில் அவர் பங்களிப்பு முக்கியம் பெறுகிறது.
Image may contain: 1 person, close-up அறுபதுகளில் தொடங்கிய கூத்து மீளுருவாக்க முயற்சிகள் இன்று பல்கலைக் கழக செயல்பாட்டு கல்வியாக மறு ரூபம் கொண்டாலும் செல்லையா அண்ணாவியார் இவற்றில் ஒரு மூலைக் கல் என்பதை யாரும் மறுதலித்து விட முடியாது.
அவரிடம் புதைந்து கிடந்த கூத்துப் பிரதிகள் ஏராளம் தாளக் கட்டுகளும் கூத்தின் செம்மை மிகு அழகியலும் அவரின் தனித்துவம் .கூத்து நடிப்பின் பல் பரிமாணங்களையும் பாடி ஆடி வெளிப்படுத்திய ஆளுமை அவர்.
Image may contain: 1 person
அறுபதுகளில் தொடங்கிய கூத்து மீளுருவாக்க தொடர் உலகப் பரப்பில் ஈழ நாட்டியமாய் ஈழத் தமிழர்களின் கலை அடையாளமாய் உருப் பெற்றுள்ளது.
அந்த மா கலைஞனுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் மதிப்பளிக்க வேண்டும்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி