வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday, 12 June 2020

பண்பாட்டுப் பெரு வெளியில் பட்டிப் பொங்கல்

பண்பாட்டுப் பெரு வெளியில் பட்டிப் பொங்கல்
சேனையூர் பட்டிப் பொங்கல்.
தமிழர் பண்பாட்டின் தனித்துவமான அடையாள நீட்சியில் பட்டிப் பொங்கலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஈழத் தமிழர்கள் தமக்கான தனித்துவ முத்திரைகளை பண்பாட்டு வரலாற்றில் தமிழ் நாட்டோடு ஓற்றுமைப் பட்டும் வேறுபட்டும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஈழத் தமிழர்கள் கலை பண்பாடு தொடர்பாக எதை சொல்ல வந்தாலும் என் கிராமமே எனக்கு மூல பாடமாய் முன் நகர்ந்து செல்கிறது.அத்தனை செழுமையும் அதன் வரலாற்று நீட்சியில் புதைந்து கிடப்பதே அதற்கான சாட்சி.
சேனையூர் எனும் என் கிராமம் கலை பண்பாட்டுப் பெரு வெளியில் காலம் காலமாக கொண்டாடும் பட்டிப் பொங்கல் எங்கள் வாழ்வோடு இணைந்த வரலாற்று நீட்சி.
இன்று புதிய தொழில் நுட்ப வரவு பல மாற்றங்களை உள் வாங்கி நம் மரபுகளின் தடங்களை சித்தைத்தாலும் காலத்தால் அழியாத பண் பாட்டு கருவூலங்களாய் இன்னமும் நம் கிராமங்கள் உயிர்ப்புடன் வாழ்கின்றன மறைந்தவற்றை மீட்டெடுக்கும் பணியில் நம் இளைய சந்ததியினர் ஆர்வம் கொண்டுள்ளமையை மறுதலித்து விட முடியாது.
எங்கள் ஊர் கிடா மாடும் பசு மாடும் என பட்டி பட்டியாய் ஊரெல்லையிலும் ஊருக்குள்ளும் மாடுகளால் நிறைந்து கிடந்து பாலும் தயிருமாய் வளம் கொண்ட கிராமம்.மாட்டுப் பட்டி,மாட்டுத் தாவளம் எனும் பெயர்களில் கால் நடை வளர்ப்பில் பேர் போன கிராமம்.
Image may contain: sky, outdoor and nature
வயல் செய்கையின் எல்லா படி முறைகளிலும் கடா மாட்டின் பயன்பாடு வயலடித்தல் தொடக்கம் சூடடித்தல் வரை வாழ்வின் செல்லமாய் வாரிக் காலன் எனும் பெயர் கொண்டு நெல் வாரியின் குறியீடாய் கண்ட பண்பாடு எங்களது .
வயல் உழவும் வண்டில் மாடு என வாழ்வோடு மிக நெருக்கம் கொண்ட தொழில் முறை கலாசார வாழ்வில் மாடுகளின் இடம் மறக்க முடியாத நினைவுச் சரம்.
பொங்கல் நாள் மாலை நாங்கள் அடுத்த நாள் பட்டிப் பொங்கலுக்கு தயாராவோம் அந்த நாட்களில் எல்லோரது வீடுகளிலும் மாடு வளர்ப்பு என்பதும் அதன் பயன்பாடு என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
Image may contain: one or more people and outdoor
ஊரைச் சுற்றி இருக்கும் ஆற்றை தாண்டினால் சிறு காடு அந்த காடு நிறைய பொன்னாவரை பூத்துக் கிடக்கும் பட்டிப் பொங்கலின் முக்கிய ஊடு பொருள் பொன்னாவரை இலையும் பூவும் சாக்கு நிறைய அந்த பூக்களை கொலை கொலையாய் முறித்து கட்டி வந்து மொட்டுகள் தனியாக ,இதழ்கள் தனியாக கந்தப் பார்த்து ஒவ்வொரு மாட்டுக்கும் பெயர் சொல்லி மாலை கட்டி அடுத்த நாள் செல்லமாய் வளர்த்த மாடுகளை குழிப்பாட்டி கழுத்து நிறைய மாலை கட்டி அழகு பார்க்கும் அர்த்தமுடனான ஒரு கலாசார விழா பட்டிப் பொங்கல்.
Image may contain: tree and outdoor
மாடுகளுக்கு கட்டுவதற்கென சுடுகின்ற அரிசி மா பலகாரம் அதன் அலங்காரத் தன்மை நம் முன்னோர் வழி வந்த கலை வெளிப்பாடாய் அமைந்திருக்கும் நெற்றிப் பட்டம்,கொம்பு வளையம்,கொம்பு முடி ,கழுத்தில் சூடும் பலகார மாலை எல்லாம் எத்தனை அழகு அம்மா ஆச்சி,அம்மம்மா என எல்லோரின் கை வண்ணத்தையும் பட்டிப் பொங்கல் பலகாரங்களில் கண்டு மகிந்த அந்த நினைவுகள் எங்கள் ஊருக்கே தனித்துவமான பொங்கல் பலகாரம் சிலுவு இன்னும் நாவில் சுவையூறும் இனிய நினைவுகளாக.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி