வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

சுஜாதா என்றொரு எழுத்தன் சுஜாதாவும் அனாமிகாவும்

சுஜாதா என்றொரு எழுத்தன்
சுஜாதாவும் அனாமிகாவும்
சுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .
அனேகமாக அவரது துப்பறியும் புனைவுகள் முழுவதையும் வாசித்திருக்கிறேன் எப்போதும் பி டி சாமி முதல் ராஜேஸ்குமார் என நீளும் அத்தகைய நாவல்களில் மூழ்கிப் போனது ஒரு காலம்.மூதூர் பட்டினசபை நூலகத்தில் இந்த வகை நாவல்கள் நிறையவே இருந்தன.சுஜாதா எனக்கு அறிமுகமானது "கரையெல்லாம் செண்பகப் பூ " மூலமே.ஆனந்த விகடனில் அந்த நாவல் வந்த போது பாக்கியராசா அண்ணன் அந்த நாளில் ஆனந்த விகடனை எங்களூரில் கிரமமாகா எடுக்கும் தீவிர வாசிப்பாளர்.அவர் வாசிப்புக்கு எல்லையே கிடையாது.கரையெல்லாம் செண்பகப்பூ இப்போது நினைத்தாலும் அந்த வாசிப்பின் நினைவாய் நீள்கிறது.
தமிழ் நாட்டு வார சஞ்சிகைகள் அவர் கதைகளால் நிறைந்து கிடந்தன கடைசி வரை அவர் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக பலவற்றை எழுதி வந்தார்.
எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானது போலவே அவர் எழுத்தால் என் மகளும் ஈர்க்கப் பட்டாள் அவரது விஞ்ஞான அறிவியல் சார்ந்த எழுத்துக்கள் அவளுக்கு பிடித்துப் போனது.
என் மகள் அனாமிகா இறப்பதற்கு முன் தமிழகம் சென்று வந்த போது அவளுக்கு பிடித்த சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகத்தை வாங்கி கொடுத்திருந்தேன் அதில் உள்ள ஒவ்வொரு கதைகளிலும் ஆழ்ந்து போவாள் அந்த ஈர்ப்பில் அந்தக் கதைகள் போலவே தானும் எழுத முற்பட்டாள்.அவள் இறந்த பின் அந்த கதைகளை தேடினேன் ஆனால் அது கிடைக்கவில்லை.
ஒரு கொப்பியில் தனக்குப் பிடித்தவைகள் எவை என ஒரு குறிப்பு எழுதியிருந்தாள் அதில் சுஜாதாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
சுஜாதாவின் எழுத்தின் பாதிப்பில் தான் வளர்த்த பொம்ரேனியன் நாய்க் குட்டிக்கு பூக் குட்டி என பெயரிட்டிருந்தாள்.
மகள் இறந்த பின் தமிழகம் சென்ற போது தோழர் ரவிகுமார் ஜூனியர் விகடனுடனான ஒரு பேட்டிக்கு ஒழுங்கு செய்திருந்தார்.அந்த பேட்டியில் நான் அவள் கடைசியாய் வாசித்த புத்தகம் "சுஜாதாவின் விஞ்ஞானச் சிறு கதைகள்" எனக் குறிப்பிட்டிருந்தேன்.அந்த பேட்டியை வாசித்த சுஜாதா மகள் மீது கொண்ட ஈர்ப்பால் ஆனந்த விகடனில் "அனாமிகா" எனும் சிறுகதையை சுனாமியோடு தொடர்புறுத்தி எழுதியிருந்தார்.
அந்த கதையால் உலகம் முழுவதும் அறியப் பட்டாள் என் மகள் அடுத்த முறை இந்தியா சென்ற போது நானும் மனைவியும் அவரை அவரது இல்லத்தில் போய் சந்தித்தோம் அது ஒரு மகிழ்வான தருணம் 2005ம் ஆண்டு.
அனாமிகா கதை அவள் பற்றிய சின்னத் தேவதை தொகுப்பிலும் பின்னர் ஆங்கில மொழி பெயர்பாய் "Anamika" ஆகிய நூல்களிலும் பிரசுரமானது.
ஆனந்த விகடனில் அவர் எழுதிய "கற்றதும் பெற்றதும் " தொடரில் மகள் பற்றி ஐந்து முறை எழுதியிருக்கிறார்.
தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளுமை சுஜாதா அவர்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி