வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

திருகோணமலை தமிழ் வல்லோன் பெருந்தெரு ,பெரும் புலவர் வே.அகிலேசபிள்ளை

திருகோணமலை
தமிழ் வல்லோன்
பெருந்தெரு ,பெரும் புலவர் வே.அகிலேசபிள்ளை
திருகோணமலை பெரிய இராசக்கோன் முதலியாரின் ஐந்தாவது வழித் தோன்றலாகிய அழகைக்கோன் வேலுப்பிள்ளையின் ஒரே புதல்வராக 1853 மாசி மாதம் 26ஆம் திகதி பிறந்தவர்.பரம்பரை வழியாக திருகோணமலையின் மூத்த குடி மரபில் அறிவார்ந்த வாரிசாக அறியப் பட்டவர்.
இளமையில் குமாரவேலு ஆசிரியரால் ஏடு தொடங்கப் பட்டு அவரிடமே கணிதம் இலக்கியம் சரிதம் என்பனவற்றை கற்று பழந்தமிழ் இலக்கியங்களிலும் அறிவு கொண்டு ,சிறிய தந்தையாராகிய தையல்நாயக பிள்ளையிடம் இலக்கண அறிவை முறைப்பட கற்றுத் தேறினார் இதனால் இலக்கணமும் இலக்கியமும் துறைபோக கற்ற ஒருவராக தானாகவே கவி பாடும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.அத்தோடு பழந்தமிழ் இலக்கியங்கள் பால் ஈடுபாடும் அந்த துறையில் தேடல் மிகுந்தவராகவும் விளங்கினார்.
1871ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியராக பயிற்சி பெற்று 1872ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று தொடர்ந்து அதிபராக பணியாற்றி பதினொராண்டுகளின் பின் ஓய்வு பெற்றார்.
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தன்னை முழுமையாகவே தமிழ் சைவ சமய சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோயில் ,சிவன் கோயில் ஆகியவற்றின் தர்மகர்த்தாவாகவும் சிறப்புற செயல்பட்டு அர்பணிப்புள்ளவராக விளங்கினார்.அத்தோடு தனது தமிழ் சமய அறிவை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் நோக்கில் தனிப்பட்ட முறையில் அக்காலத்தில் பலருக்கு அவற்றை கற்பிக்கும் வகுப்புக்களை நடத்தினார் என்றும் அறியக் கூடியதாய் உள்ளது.
திருகோணமலையின் பால் தீராத காதல் கொண்டவர் என்பதை அவர் இயற்றிய நூல்கள் சான்று பகர்கின்றன.இவருடைய எல்லா படைப்புகளுமே பிரபந்த வகையை சார்ந்ததாகவே உள்ளன.
1.திருக்கோண நாதர் பதிகம்
2.வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம்
3.கந்தசாமி கலி வெண்பா
4.வெருகல் சித்திரவேலாயுதர் சிறைவிடு தூது
5.சிவகாமியம்மை கும்மி
6.நிலாவெளி சித்திவினாயகர் ஊஞ்சல்
7.வெருகல் சித்திரவேலாயுதர் அடைக்கல மாலை
8.வெருகல் தரிசனம் பத்து
9.நெஞ்சறி மாலை
10.விஸ்வநாத சுவாமி ஊஞ்சல்
11.திருகோணமலை விசாலாட்சி அம்மை விருத்தம்
12.கண்டி நாடகம்
இன்னும் பல நூல்களை இவர் இயற்றியதாக பேசப் பட்டாலும் அவற்றின் தகவல்களை அறிய முடியாதுள்ளது.
1887ஆம் ஆண்டு இவர் எழுதிய கண்டி நாடகம் திருகோணமலையில் எழுதப் பட்ட முதலாவது கூத்தாகும் என திருமலை நவம் குறிப்பிடுகிறார்.இதன் மூலம் நாடகம் கூத்து என்பணவற்றிலும் அகிலேசபிள்ளை அவர்கள் பாண்டித்தியம் மிக்கவராக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.
பாரம்பரிய செய்யுள் நூல்கள் இயற்றிய புலவர் அகிலேச பிள்ளை அவர்கள் நவீன வசன மரபிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை
"திருக்கோணாசல வைபவம் " எனும் நூல் வெளிக்காட்டி நிற்கிறது.
நூல்கள் இயற்றுவதில் மாத்திரம் அல்ல திருகோண மலையின் பழந் தமிழ் நூல்களை பதிப்பிப்பதிலும் சாதனை படைத்த ஒருவராகவும் அறியப் படுகிறார்.
ஈழத்தின் ஆவணமாக கையில் கிடைக்கக் கூடிய முதல் தமிழ் இலக்கியம் என பேசப் படக் கூடிய
" திருக்கரசைப்புராணத்தை"யாழ்ப்பாணத்து அ.குமாரசாமிப் புலவரின் பொழிப்புரையுடன் பதிப்பித்து வெளியிட்டதன் மூலம் ஈழத்த் தமி இலக்கிய பதிப்புத் துறையில் தடம் பதித்தவராக மதிக்கப் படுகிறார்.
இவர் பதிப்பித்த ஏனைய நூல்கள்
1.கோணேசர் கல்வெட்டு
2.வெருகல் சித்திர வேலாயுதர் காதல்
3.நரேந்திர சிங்கன் வசந்தன் சிந்து
4.திருக்கோணமலை புராணம்
யாழ்ப்பாணத்தில் சி.வை தாமோதரம் பிள்ளை போன்று பதிப்புத் துறையில் ஈடுபட்ட பெரு மகன் இவர்.
குறிப்பாக இவர் பதிப்பித்த "கோணேசர் கல்வெட்டு " நம் இன்றைய வரலாற்று ஓட்டத்தில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது
உசாத் துணை நூல்கள்
1.திருகோணமலை கலை இலக்கிய வரலாறு-திருமலை நவம்-2012
2.திருகோணமலைப் புலவர் அகிலேசபிள்ளை நூற் திரட்டு-2007
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கிழக்குப் பல்கலைக் கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி