வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

நம்மவர்களை நாம் அறிவோம் மூதூரின் கல்வித் தந்தை திருமிகு.சிப்பிரியான் பெர்னாண்டோ

நம்மவர்களை நாம் அறிவோம்
மூதூரின் கல்வித் தந்தை
திருமிகு.சிப்பிரியான் பெர்னாண்டோ
மூதூர் மண் என்றும் மறக்க முடியாத கல்வித் தந்தையாய் போற்றப் படுபவர் மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்.திருமிகு சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்கள்.
அந்த நாட்களில் கொட்டியாரம் முழுவதற்கும் கல்விக் கண் திறந்த பெரும் கல்விக் கூடமாய் செயல் பட்டது மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயம்.
இன மத வேறுபாடற்ற பொதுமைப் பட்ட கல்வியை தன்னைச் சூழ உள்ள சமூகத்துக்கு வழங்கிய பெருமை மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயத்துக்கு உண்டு அந்த பெருமையின் பெரும் பங்குதாரராக இருந்தவர் அமரர் சிப்பிரியான் பெர்னாண்டோ அவர்கள்.
வீடு வீடாகச் சென்று மாணவர்களை தேடி அழைத்து வந்து கல்வி அறிவு பரப்பியவர் மூதூரைச் சூழ உள்ள பாரம்பரியமான பல தமிழ் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலோர் சிப்பிரியான் ஐயாவிடம் கல்வி கற்றவர்களாகவே இருந்தனர்.
ஆலங்கேணி கந்தளாய் ஆகிய கிராமங்களிலிருந்து வந்து பலர் அந்த நாளில் கல்வி கற்றமை குறிப்பிடத் தக்கது.
நீர்கொழும்பு வாய்க்கால் எனும் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஐயா அவர்கள் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக சிறப்படைந்து அதிபராக தரம் உயர்ந்து உயர் கல்விச் சேவையால் மூதூரின் கல்வித் தந்தை எனப் பெயர் பெற்றார்.
தன் வாழ்வை மூதூருக்காகவே அர்ப்பணித்து வாழ்வில் எப்போதும் கல்வி பற்றிய சிந்தனையிலேயே தன் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்ட பெரு மகான் அவர்.
ஐயாவிடம் கற்ற பலர் பின்னாளில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் கல்வி அதிகாரிகளாக பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களாக சிறப்புப் பெற்றனர் இன்றும் ஐயாவின் கற்பித்தலையும் அவர் ஆற்றலையும் மகிழ்வுடன் நினைவு கூர்கின்றனர்.
முதுபெரும் தமிழ் கவி ஆளுமை தாமரைத்தீவான் அவர்கள் ஐயாவின் மாணவரே .
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற இலக்கணத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் சிப்பிரியான் ஐயா அவர்கள்.
அன்றைய அரசின் சட்ட விதிகளால் ஐயா ஐம்பத்து ஐந்து வயதுடன் ஓய்வு பெற வேண்டியதாய் ஆயிற்று ஆனாலும் தன்னைச் சூழ உள்ள உறவுகளுக்கு தன் கல்வியாலும் அனுபவத்தாலும் அறிவூட்டியவர் ஐயா அவர்கள்.
அவரோடு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் நெருக்கமாய் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டமையை நான் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.அவருடைய அமைதியான சுபாவமும் அனுபவ முதிர்ச்சியிலான அறிவுரைகளும் என் மனம் விட்டு அகலாதவை.
ஐயாவின் நினைவுகளோடு அவர் மனைவி சித்தியம்மாவின் நினைவுகளும் நம்மோடு பயணிப்பவைதான் அவர் மூதூருக்கே உரித்தான சித்தியம்மா வீதியால் போவோரை அழைத்து சாப்பாடு கொடுக்கும் ஒரு பெரும் உபசரிபாளர்.
யாருக்கும் எள்ளளவும் தீங்கு எண்ணாத மனோ நிலையும் எல்லோரும் நன்றாய் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவர் விட்டுச் சென்ற பாடங்கள்.
சேனையூர்,கட்டைபறிச்சான்,சம்பூர்,கூனித்தீவு,பள்ளிக்குடியிருப்பு,தோப்பூர்,மல்லிகைத்தீவு,கிளிவெட்டி,ஈச்சலம்பற்று,வெருகல்,மேங்காமம் ,கங்குவேலி,பட்டித்திடல்,ஆலங்கேணி ,கிண்ணியா ,திருகோணமலை,மூதூர்
இன்று உலகம் முழுவதும்
அவர் வழி வந்த பலர் அவர் பெருமையின் தடத்தில் பயணிக்கின்றனர்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி