வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    நம்மவர்களை நாம் அறிவோம்

    மூதுரின் முத்தாய் முகிழ்த்த மூத்த தமிழ் அறிஞன்
    பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    Image may contain: 1 person, glasses, text that says "பண்டிதர். அந்தோனி சவரிமுத்து குருஸ்"
    நில வளமும் நீர் வளமும் கொண்ட மூதூர் தமிழ் வளமும் கொண்டு தன்னை தகை சால் சான்றோர்களால் பெருமைப் படுத்தி நின்றது அத்தகைய பெருமையுறும் சான்றோனாய் பண்டிதர் அ.சவரி முத்து அறியப் படுகிறார்.
    மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்.

    ஆசிரியராக அதிபராக நற்பணியாற்றி தமிழ் இலக்கியம் இலக்கணத்தின் பால் காதல் கொண்ட தமிழ் அறிஞன் அவர்.இலக்கிய இலக்கண்ப் புலமை ஒரு சேரப் பெற்ற தமிழ் ஆளுமை.
    மூதூரின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரெத்தினம் அவர்கள் பண்டிதர் அ.சவரிமுத்து பற்றி இப்படிக் குறிப்பிடுவார்.
    "நான் எழுதியவைகளையெல்லாம் படித்து ரசித்த வர்களில் மூதூரைச் சேர்ந்தவரும் எனது மாமன் முறை யினருமான பண்டிதர் அ. சவரிமுத்து குரூஸ் அவர்கள் முதன்மையானவர். நான் எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் ஆசிரி யரானார்.எஸ். எஸ். சி. வகுப்புக்கான இலக்கியப் பாடநூல்
    முழுவதையும் அவர் எனக்கு ஒரே ஒரு மாதத்திற்குட் படிப்பித்தார்
    .
    அவரில் உள்ள குறிப்பிடத்தக்க விசேடம் என்ன வென்றால் அவர் பத்தாம் பசலிப் பண்டிதர் அல்ல. அகநானூறையும் படிப்பார், அதே நேரத்தில் ஆனந்த விகடனையும் படிப்பார். ஆனந்த விகடனிற் தேவன் எழுதிய "துப்பறியும் சாம்பு’ என்ற நாவலை மிகவும் ரசித்துப் படித்தார். எல்லாத் துப்பும் சாதாரணமா னதாக எதிர்பாராத வகையிற் கண்டு பிடிக்கப்பட் டது போல எழுதப்பட்டிருப்பதுதான் தே வ ணி ன் திறமை. அந்தப்பாணி புதியது. அற்புதமானது என்று என்னிடம் புகழ்ந்தார்.
    இலங்கையர் கோனிடமும் அவர் நெருங்கிப் பழகி கினார். இலங்கையர் கோனின் யாழ்பாடி என்ற நாட
    கத்திற்கு, இலங்கையர் கோன் கேட்டுக் கொண்டபடி அவர் சில பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.

    நான் டெணியாயாவிலும் மொறட்டுவாவிலும் ஆசிரியனாக இருந்த காலத்தில் எழுதியவைகளை எல் லாம் ஒவ்வோர் விடுமுறையும் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு வாசித்து காட்ட வேண்டும். அதுவும் நான் உரத்துப் படிக்க அவர் கேட்க வேண்டும் என் பது அவர் ஆசை.
    எனக்கு எப்போதுமே உரத்து வாசிக்கப் பிடிக் காது. என் வாசிப்பெல்லாம் உதடுகள் அசையாமலே "Barking at the print' அச்சைப் பார்த்துக் குரைத்தல் என்று யாரோ எழுதி யிருக்கிறான்.

    ஆனாலும் என்ன செய்வது? நான் அவருக்காக உரத்து வாசிப்பேன். அவர் என் கதைகளை ஆர்வத் தோடு கேட்டு ரசிப்பார்.
    நான் மாப்பஸான் பற்றி வானொலியில் நிகழ்த் திய பேச்சுக்குப் பின்னால் என்னை 'மாப்பஸான் என்றே அவர் அழைப்பார் . என் வீட்டில் எல்லாருமே அவரை ரசிகர் என்றே அழைப்பார்கள்.
    நான் மூதூரில் விடுதலைக்கு வரும் காலங்களில் எல்லாம் அவரோடுதான் என் பெரும் பொழுது கழியும்.
    அவர் என்னைச் செய்யுள் இலக்கணம் கற்கும்படி மிகவும் வற்புறுத்தினார். நானும் அவரிடம் அதைப் படித்தேன், ஆனால் அதில் அத்தனை சிரத்தை காட் டவில்லை. இது அவருக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது."
    Image may contain: one or more people and people standing பண்டிதர் நிக்கிலஸ் அவர்கள் தனது நான் கண்ட பாரதி எனும் நூலில் தன்னை இந்த நூல் எழுதத் தூண்டியவர் பண்டிதர் அ.சவரிமுத்து என குறிப்பிடுகிறார்.அத்தோடு பண்டிதர் நிக்கிலஸ் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதியுள்ளார்

    தன் தமிழால் மற்றவர்களையும் ஊக்கப் படுத்தி அதன் பால் ஈடுபட வைக்கும் பெருந்தன்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு எனலாம்.
    மூதூர் மண் பெருமையுறும் தமிழ் அறிஞன் பண்டிதர் அ.சவரிமுத்து குரூஸ் அவர்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி