வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

தமிழால் கட்டுண்டேன் 95ஆவது அகவையில் எங்கள் இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம். என் தமிழ் ஆசான்

தமிழால் கட்டுண்டேன்
95ஆவது அகவையில் எங்கள் இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்.
என் தமிழ் ஆசான்
சேனையூர் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக க.பொ.த உயர் தரத்தில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய காலங்களும் , எங்கள் சேனையூரின் நீங்கா நினைவுகளில் அவர் மனைவி லில்லி அக்காவும் அவர்கள் குடும்பமும்.
என்பை வாசிக்க தூண்டிய எழுதத் தூண்டிய எழுத்துச் சித்தன் அவன்
ஈழத்து இலக்கிய உலகின் தனித்துவ தடம் பதித்த எங்கள் வ.அ
நவீன ஈழத்து தமிழ் இலக்கியம் தன் மண் சார்ந்த மரபின் முகமாய் வெளிக் கிளம்பியது எங்கள் எழுத்துச் சித்தன் வ.அ.வில் இருந்து என்றே சொல்லலாம்.சாதாரண மக்களின் வாழ்வு இலக்கியமாகியது நம் சக மனிதர்கள் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அவரால் உலா வந்தார்கள்.
கொட்டியாரத்தின் அழகையும் அதனோடு சேர்ந்த சமூக முரண்பாடுகளையும் தனக்கே உரிய எள்ளல் நடையுடன் எடுத்தியம்பிய எங்கள் எழுத்தன்.
தான் வாழ்ந்த சூழலை எழுத்தில் படம் பிடித்த மண் மணம் மாறா எழுத்தை எமக்களித்த மண்டியிடாத யாருக்கும் தலை வணங்காத எழுத்தாளனுக்கே உரிய கர்வத்தோடு கடைசி வரை தன் வாழ்வை கொண்டாடிய மகா ஆளுமை அவர்.
முற்போக்கு என்று பேசாமலேயே முற்போக்கு மிக்க கருத்துக்களை தன் எழுத்துக்களில் உலவ விட்ட உன்னதமான கதை சொல்லி.
தோணியும்,துறைக்காரனும்,சந்தானாள் புரவியும்,ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறதுவும் கிரவுஞ்சப் பறவைகளும்,கொழு கொம்பும் இன்னும் நூற்றுக் கணக்கான சிறுகதைகளும் வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் என அவர் எழுத்து நம் முன் கொட்டிக் கிடக்கிறது.
அவர் எழுத்தில் மூதூரும் கொட்டியாரத்தின் பல கிராமங்களும் தம்பலகாமமும் ஆலங்கேணியும் என வாழ்வின் வாசத்தை அதன் முரண்களை சொல்லும் திறனில் இலக்கியங்களாய் நாவலாயும் சிறுகதையாயும் வெளிப்படுத்திய எவர் விமர்சனத்தையும் பொருட்படுத்தாத தன் எழுத்தில் நம்பிக்கை கொண்டு பயணித்த புதுமை விரும்பி அவர்.
தன் இலக்கிய நினைவுகள் எனும் நூலில் எனக்காகவே ஒரு பக்கத்தை ஒதுக்கி எழுதி இருப்பார் தன் இலக்கிய வாரிசாக என்னை அதில் பிரகடனப் படுத்தியிருப்பார்.
அவர் பிரகடனத்தை நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேனா?தொடர்கிறேனா என்னுள் எப்போதும் இந்தக் கேள்வி .........
கடந்த ஆண்டு என் முதல் நாவல் "கொடி எழு அன்னப் புரவி" முதல் சிறுகதைத் தொகுதி "கறுப்பி" ஆகியன வெளி வந்தது.பல சிறுகதைகளை எழுதி முடித்துள்ளேன் தம்பலகாமத்தை மையமாக வைத்து "செவ்வந்தி" எனும் நாவலும் எழுதி முடித்து கைகளில் உள்ளது பல சிறு கதைகளும் அவ்வப்போது எழுதுகிறேன் .இரண்டு கவிதைத் தொக்குப்புக்கள் பல நூறு கட்டுரைகள் இன்னும் பல நூல்கள் என என் எழுத்து தொடர்கிறது.
நான் எழுதும் சிறுகதைகளும் ,நாவல்களும் என் ஆசான் வ.அ.காட்டிய இலக்கிய நயத்தின் வழியே பயணிக்கிறது.அவர் தாழ் பணிகிறேன் அவர் பிறந்த நாளில்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி