வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

கல்வி கலை இலக்கியப் பணிகளில் திருமிகு.D.G.சோமசுந்தரம்

நம்மவர்களை நாம் அறிவோம்
கல்வி கலை இலக்கியப் பணிகளில் திருமிகு.D.G.சோமசுந்தரம்
இன்று இருபதாவது ஆண்டு நினைவு நாள்.1927-2000
குருமண்வெளியும் கொட்டியாரமும் இணைந்த கல்வியாளர்
மட்டக்களப்பு குருமண்வெளியில் மட்டக்களப்பில் புகழ் பெற்ற குடும்பமாய் அறியப் பட்ட சோமசுந்தரத் தேசிகருக்கு 1927ஆம் ஆண்டு மகனாகப் பிறந்து கொட்டியாரம் மூதூரில் தன் வாழ்க்கைத் துணையை தேடி நாட்டின் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியராகவும் அதிபராகவும் ,கல்வி அதிகாரியாகவும் ஒரு சிறந்த கலை இலக்கிய ஆளுமையாகவும் அறியப் பட்டவர் எல்லோராலும் டி.ஜி.எஸ் என அழைக்கப் பட்டு அன்புக்கு பாத்திரமானவர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மிசன் மத்திய கல்லூரியில் தன் கல்வியை பெற்ற இவர் ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றில் இரு மொழிப் புலமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார்.ஒரே நேரத்தில் கம்பனையும் சேக்ஸ்பியரையும் கற்பிக்கும் வல்லமை அவர் ஆளுமைக்கு சான்றாய் அமைகிறது பல் துறை ஆளுமையாளர் அவர்.
மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் ஆசிரியப் பயிற்சியையும்,மகரகம ஆங்கில ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கில ஆசிரியப் பயிற்சியையும் பெற்று பட்டப் படிப்புக்களுக்குரிய தகுதியுடையவராய் இருந்தார்.
மட்டக்களப்பில் குருமண்வெளி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் 1947ல் தன் பல்துறை ஆளுமையால் பாடசாலையில் நடந்த பெற்றோர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாய் இருந்து உடற்பயிற்சிக் காட்சிகளை வடிவமைத்து கல்வி அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றதாக அவர் நண்பர் குருமண்வெளியூர் திருமிகு க.கோபாலசிங்கம் குறிப்பிடுவார்.
அக் காலத்தில் இவர் தயாரித்த நள தமயந்தி,மயானத்தில் அரிச்சந்திரன்,அசோகவனத்தில் சீதை,புகழேந்தியார் ஆகிய நாடகங்கள் பலரதும் பாராட்டையும் பெற்றதாக அறிய முடிகிறது அத்தோடு கும்மி,கரகாட்டம் காவடி ஆகிய மண் சார்ந்த கலைகளை பழக்கி மேடையேற்றுவதிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பட்டிருப்பு மத்திய கல்லூரி,களுதாவளை மத்திய கல்லூரி ஆகியவற்றில் தன் ஆசிரியப் பணியை செவ்வனே நிறைவேற்றி மட்டக்களப்பில் நல் ஆசிரியர் என அறியப் பட்டவர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி,சண்டலங்காவ மத்திய கல்லூரி,ஹங்குரான்கெட்ட அரசினர் கல்லூரி,ஆகியவற்றிலும் தன் ஆசிரிய சேவையை தொடர்ந்தவர்.
தோப்ப்பூர் மத்திய கல்லூரி,மூதூர் மத்திய கல்லூரி,சம்பூர் மகா வித்தியாலயம்,புனித வளனார் கல்லூரி திருகோணமலை ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றி திருகோணமலை கல்வி வரலாற்றில் சாதனை படைத்த அதிபராக பாராட்டுப் பெற்றவர்.
அமரர் டி.ஜி.எஸ் அவர்களுடன் ஆசிரியப் பணி செய்த அதிபர் ரா.கோணாமலை அவர்கள் "ஒரு நல்ல அதிபர் உள்ள கூடாத பாடசாலையும் இல்லை,ஒரு கூடாத அதிபர் உள்ள நல்ல பாடசாலையும் இல்லை" என அவர் சொல்லும் அனுபவ மொழியை கூறுகிறார்.
மூதூர் மத்திய கல்லூரியில் 1954ஆம் ஆண்டு தொடக்கம்1959ஆம் ஆண்டு வரை அதிபராக கடமையாற்றிய போது இன மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அப்பழுக்கற்ற சேவை புரிந்ததாக அவர் மாணவர் இலக்கியச் செம்மல் அமானுல்லா குறிப்பிடுவார்.மேலும் அமானுல்லா இப்படிச் சொல்வார்"ஆசான்களை மரணம் தீண்டுவதுண்டா?கல்விக்கு உயிரளித்தோர் மரணிப்பதில்லை"என டி.ஜி.எஸ் அவர்களுக்கு மகுடம் சூட்டியுளார் தன் கட்டுரை ஒன்றில்.
சம்பூர் மகாவித்தியாலயத்தின் அதிபராக 1965 ல் பொறுப்பேற்று அப் பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியமை பற்றி ஓய்வு நிலைக் கல்வி அதிகாரி திரு.சிவக்கொழுந்து அவர்கள் ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுவார்."அப் பதவியை நிறைந்த ஆசிர்வாதத்தோடும் தன்னம்பிக்கையோடும் ஏற்றுக் கொண்டார்.இக் காலகட்டமே அன்னாரின் கல்விச் சேவையின் உச்ச கட்டமாக அமைந்தது .சம்பூர் பாடசாலை மாணவர்களை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.ஊர் மக்களை தன் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் ஏற்றுக் கொண்டார்.தன் முயற்சியை முற்று முழுதாக அர்ப்பணித்தார்.
மூதூர் பிரதேச மக்கள் போற்றக் கூடிய விதத்தில் சம்பூர் வித்தியாலயம் சகல துறைகளிலும் பரீட்சைப் பெறு பேறுகளிலும் வெற்றியீட்டியது.அமரர் அவர்களின் சேவையின் மகிமையால் பாடசாலையின் கல்வி வளர்ச்சியின் அடிப்படையில் கனிஸ்ர வித்தியாலயம் சம்பூர் மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப் பட்டது.சம்பூர் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் பூரித்தனர்.அமரர் அவர்களை போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தனர்."
என்று தொடர்கிறது அக் கட்டுரை.
திருகோணமலை புனித வளனார் கல்லூரியிலும் தன் சிறப்பான சேவையால் மாணவர்கள் பலரை ஆளுமைத் திறந் மிக்கவர்களாக உருவாக்கினார் இன்றும் அவர் மாணவர்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.
சம்பூர் மகாவித்தியாலயத்தின் சாரண இயக்க ஸ்தாபகரும் இவரே.சிறந்த விளையாட்டு வீரர் கரப் பந்து ,கால்ப் பந்து,மட்டைப் பந்து என்பனவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவித்தமையும் இங்கு நினைவு கூரத் தக்கது.
நான் சேனையூர் மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கொடுக்கன் குளத்தில் ஒரு சாரணர் பயிற்சிப் பாசறையை ஒழுங்கமைத்திருந்தார் எங்கள் சாரண ஆசான் திரு.க.துரைரெத்தினசிங்கம் அவர்கள் .அந்தப் பயிற்சிப் பாசறைக்கு வந்து பயிற்சி விரிவுரகள் நடத்தியமை இன்னமும் நீங்கா நினைவாய் உள்ளது.
1980 களில் சேனையூர் மத்திய கல்லூரியில் அவர் மனைவி திருமதி.மங்களநாயகம் அவர்கள் பிரதி அதிபர்களில் ஒருவராக கடமையாற்றிய காலங்களில் கல்லூரியில் வளர்ந்தோர் கல்வி பயிற்சி நெறிகளை வழிப் படுத்தியிருந்தமையும் இங்கு மனங் கொள்ளத் தக்கது.
1981 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை வளர்ந்தோர் கல்வி அதிகாரியாக திருகோணமலை மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பல செயலூக்க திட்டங்களால் கல்வியின் முக்கியத்துவத்தை உணரப் பண்ணியமை குறிப்பிடத் தக்கது.
அந்த நாட்களில் சிந்தாமணி வார சஞ்சிகையில் ஒவ்வொரு வாரமும் இவர் கவிதைகள் தொடர்ச்சியாக வெளி வந்தமை அவரை ஒரு கவிஞனாக அடையாளப் படுத்தியது.நடைச் சித்திரங்கள்,பாடசாலையில் மாணவர்களுக்கான நாடகங்கள் என இலக்கிய உலகில் தன் முத்திரைகளை பதிக்க தவறவில்லை.
Image may contain: 1 person
வெற்றியின் வழி எனும் கவிதை நூலை வெளியிட்டு ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவ முத்திரை பதித்தவர் என பேராசிரியர் செ.யோகராஜா குறிப்பிடுவார்.
"தன் வாழ்வையே செய்தியாக விட்டுச் செல்பவர்கள் மிக அருமை .திரு.சோமசுந்தரம் அவர்கள் தம் வாழ்வையே நமக்குச் செய்தியாக்கிச் சென்றுள்ளார்.அவரது வாழ்வே அவரது போதனைகள்" பேராசிரியர் சி.மெளனகுரு டி ஜி எஸ் பற்றி ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
"அவரது வாழ்வே அவரது போதனைகள்"
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி