வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday, 11 June 2020

என்றும் என்னில் ஒளிர்கின்ற பேரொளி

இன்று 05.04.2020பேராசிரியர் கைலாசபதியின் 87 வது பிறந்த நாள்
என்றும் என்னில் ஒளிர்கின்ற பேரொளி
பேராசிரியர் கைலாசபதியும் நானும் சில நினைவுகள்.
என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை தந்தவர் ஒரு மாணவன் எனும் நிலை தாண்டி தோழமையின் நெருக்கத்தை கண்டவன் நான்.
என் மீதான தனிப்பட்ட அக்கறை அவருக்கு எப்போதும் இருந்தது ஒரு கிரமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் நேசத்தின் நீட்சியாய் என்னுள் நிறைந்திருந்தார்.
அவர் வீட்டு நூலகம் எனக்கு எப்போதும் திறந்திருந்தது வாசிப்புக்கானவைகளும் ஆய்வுக்கானவைகளும் பாடப் பரப்பு வகை சார்ந்ததுமானவைகளும் என் கை வசப் பட காரணமான அறிவொளியாய் அவர்.
அவரிடம் சில பாடங்களை நான் தனியாக விருப்ப பாடமாக தெரிவு செய்த திராவிட நாகரிகமும் கலாசாரமும் எனும் பாடப் பரப்பு இன்று பேசப் படுகின்ற சிந்து வெளி தமிழர் நாகரிகம் முதல் அது தென்னிந்தியா வரை பரவிய அடிப்படைகள் இந்தியாவுக்கு அப்பால் ஈராக் வரை பரவியிருந்த திராவிடக் கூறுகள் பற்றியும் இன்று நாம் கீழடியில் வாசிக்கின்ற விடயங்களினூடும் அவர் அறிவு அகன்றிருந்தது.அதுவே பாடப் பரப்பாய் விரிந்திருந்தது.
தொல்காப்பிய பொருளதிகாரம் எனும் பாடப் பரப்பில் தொல்காப்பியத்தில் சமூகவியல் கூறுகள் பற்றிய அறிவார்ந்த தேடலாய் அமைந்தது.தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அல்ல அது தமிழர்களின் தொன்மை வாழ்வியலின் அடிப்படை கூறுகளை இலக்கியம் அது சொல்கின்ற குடி சார்ந்த வழக்காறுகளில் அதன் செறிவு செழுமை என்பன பேசப் பட்டன.
மூல பாடத் திறனாய்வில் சங்க இலக்கியத்தில் இடை நுழைந்த போலிகளும் கம்பராமாயணத்தில் செருகலாய் விரிந்த பாடல்களையும்.எப்படி மூல பாடத்தை கண்டறிதல் எனும் விஞ்ஞான பூர்வ அணுகு முறகளின் அறிதலாய் அமைந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
நாவல் இலக்கியம் பற்றி அதன் உலகளாவிய வரலாறும் தமிழில் அது செறிந்த விதமும் ஈழத்து நாவல்கள் அதன் வரலாறு என்பனவும் நாவலின் உள்ளார்ந்த பொருண்மை பற்றிய தேடலும் அவர் மூலம் வாய்த்தவை
எந்த பாடத்தையும் மாணவர்களுக்கு எவ்வளவை அள்ளிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பது அவர் விரிவுரைகள் கொட்டிக் கிடந்த முத்துக்களில் நாம் பொறுக்கி எடுத்தவை சொற்பமே.
Image may contain: 5 people இன்னமும் என் மனக் கண் முன் அவர் வழி விரிவுரைகளில் விரிந்த மாமல்ல புரச் சிற்பங்கள் பற்றிய நுணுக்கமான விளக்கங்கள் ஒரு அழகியல் ஆளுமையின் வெளிப்பாடாகவே இருந்தன அந்த சிற்பங்களை இன்று பார்க்கும் போது அவரது விரிவுரைகள் ஒரு திரைப்படம் போல் விரிந்து கிடக்கிறது.
இறப்பதற்கு முன் சில மாதங்களுக்கு முன் அவரோடு பேசக் கிடைத்த போது திடீரென ஒரு நாள் நீ மொரீசசுக்கு தமிழ் படிப்பிக்கப் போகிறாயா என்றார் நானும் சம்மதித்தேன் ஆனால் அதற்கு முன் காலம் அவரை நம்மில் இருந்து பிரித்து விட அது நிறைவேறாத அவர் கனவாய் போனது.
என்றும் என்னில் ஒளிர்கின்ற பேரொளி பேராசிரியர் கைலாசபதி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி