வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday, 20 March 2018

பேராசிரியர் நா.வானமாமலை ஒரு நூற்றாண்டு நினைவு

பேராசிரியர் நா.வானமாமலை
ஒரு நூற்றாண்டு நினைவு

தமிழின் முற்போக்கு தமிழ் ஆராய்ச்சி அறிஞர் பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தமிழில் நாட்டாரியல் துறையில் மாக்சிய சிந்தனை மரபை உருவாக்கி அதன் வழி பயணித்து புதிய வரலாறு படைத்தவர்.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாட்டாரியல் பற்றிய பாடப் பரப்புக்குகாக யாழ் பல்கலைக் கழகத்தில் இவர் தொகுத்த முத்துபட்டன் கதை மூலம் அறிமுகப் படுத்தினார் .அதே வேளை யாழ் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் வழக்கி கெளரவித்து தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது.
1980ஆம் ஆண்டு அவர் இறந்த போது நான் யாழ் பல்கலைக்கழக தமிழியற்கழக தலைவராக இருந்தேன் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் வழிகாட்டலில் அவர் பற்றிய நினைவு நிகழ்வை நடத்தினோம் .
பேராசிரியர்.சு.வித்தியானந்தன்
பேராசிரியர்.கா.சிவத்தம்பி
பேராசிரியர்.கைலாசபதி
பேராசிரியர்.அ.சண்முகதாஸ்
உட்பட பலர் உரையாற்றிய நிகழ்வு பேராசிரியர் வானமாமலை பற்றிய அறிவை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது அந்த நிகழ்வில் பேராசிரியர் வானமாமலை பற்றிய ஒரு சிறு பிரசுரத்தையும் வெளியிட்டோம் இந்த நிகழ்வுக்கு அப்போது தமிழ் துறையில் படித்துக் கொண்டிருந்த தோழர் சாருமதி பெரும் ஒத்துழைப்பாக இருந்தமை குறிப்பிடத் தக்கது.
பின்னாளில் சாருமதியை ஆசிரியராக கொண்டு மட்டக்கலப்பிலிருந்து வெளிவந்த "வயல்" என்ற சஞ்சிகையில் பேராசிரியர் வானமாமலை பற்றி ஒரு நீண்ட கட்டுரையயை எழுதியிருந்தேன்.
என்னைப் பாதித்த அறிஞர்களில் பேராசிரியர் நா.வானமாமலையும் ஒருவர் என்பதை நான் பெருமையாக கருதுவேன்.
பேராசிரியர் நா.வானமாமலை பற்றிய வாழ்க்கைக் குறிப்பொன்று
"திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இவரின் சொந்த ஊர். 7-.12.-1907 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பயின்ற இவர் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நா.வா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பாளர் ஆனார்.
அதைத் தொடர்ந்து சில அடிப்படையான விஞ்ஞான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல அறிவியல் கட்டுரைகளை எளிமையாக எழுதியிருக்கிறார்.
‘விண்வெளி ரசாயணம்’ - ‘விஞ்ஞானத் தொழில்புரட்சியும் அதன் விளைவும்’ போன்ற அறிவியல் நூல்களும் இவரால் எழுதப் பெற்றுள்ளன.
ரப்பரின் கதை, இரும்பின் கதை, காகிதத்தின் கதை ஆகிய நூல்களை இவர் சிறுவர்களின் அறிவியல் சிந்தனைக்காக எழுதி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தி.நா.சு., கி.வா.ஜ., பெரியசாமி தூரன், செ.அன்னகாமு போன்றவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து ஆர்வம்காட்டி வந்த காலம் அது.
அப்பொழுது நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து அதன் வரலாறு, பாடியவர்கள், பாடல் வழங்கிய இடங்கள், அவை சார்ந்த நிலம், சூழல், மெய்ப்பொருள், பாடல்களைச் சேகரித்தோர் என்று விளக்கங்களுடன் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார் நா.வானமாமலை.
‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ (1960), ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ (1964) ஆகிய இரு தொகுப்புகள் அப்படி அவரால் வெளியிடப்பட்டனவாகும்.
நாட்டுப் புறப் பாடல், மானிடவியல், அடித்தள மக்களின் ஆய்வு போன்றவை அறிமுகமாகி விவாதத்தில் இருக்கும் போது ‘நாட்டுப்புறவியல்’ என்ற கலைச் சொல் உருவானது.
அதை நா.வானமாமலை ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்றார். இவ்விரு சொற் பெயர்கள் இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
நாட்டார் கதைகளை, பாடல்களைப் பலர் தொகுத்தார்கள், வெளியிட்டார்கள்.
சமூகவியல், மானிடவியலில் அந்நாட்டார் வழக்காற்றியல் எப்படி மையம் பெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். இவைகளை ஆய்வுகளுக்கும் உள்ளாக்கினார் நா.வானமாமலை.
அதே சமயம் கதைப் பாடல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து, அவைகளை வெளிக் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது, அவரின் துணையுடன் ஆறு கதைப் பாட்டிலக்கியங்களைப் பதிப்பாசிரியராக வெளியிட்டார் நா.வா. வெளியிட்டது மதுரைப் பல்கலைக்கழகம்.
அவை,
1. கட்டபொம்மன் கதைப்பாடல்
2. கட்டபொம்மன் கூத்து
- இவை இரண்டும் கட்டபொம்மன் குறித்த வரலாறை மக்களின் நாட்டுப்புறப் பார்வையில் சொல்கிறது.
3. முத்துப்பட்டன் கதை
இந்நூல் அருந்ததியர் சமூகம் குறித்த, குற்றால மலைப்பகுதியின் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. செக்கோசுலோவேக்கிய மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்க் கதைப் பாட்டிலக்கியம் இது.
4. கான்சாகிபு சண்டை
மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட கான்சாகிப் நடத்திய சண்டை பற்றிய நூல் இது.
5. காத்தவராயன் கதைப் பாடல்
ஒடுக்கப்பட்ட பறையர் சமூகத்தளத்தில் இக்கதைப் பாட்டிலக்கியம் அமைகிறது.
6. ஐவர் ராஜாக்கள் கதை
- நாயக்க மன்னரின் மேலாதிக்க ஆட்சியை ஏற்க மறுத்த ஐந்து பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்களின் கதை இது.
இந்தக் கதைப் பாட்டிலக்கியப் பதிப்பின் வரலாற்றுக் குறிப்புகள், வழக்குச் சொற்கள், நிகழ்வின் குறிப்புகள், சொல் விளக்கம் ஆகிய சிறப்புகள் உடையன. இவற்றுடன் நா.வானமாமலையின் ஆய்வு முன்னுரைகள் மிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கின்றன.
1975ஆம் ஆண்டு தார்வார் திராவிட மொழியின் பல்கலைக் கழகத்தில் ஆய்வுத்துறையில் பணியாற்றினார்.
அப்பொழுது International of Tamil Folk Creations என்று இவரால் எழுதப்பட்ட நாட்டுப்புற இலக்கிய ஆய்வு நூல் மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது.
இந்நூலும், இவரின் பல ஆங்கிலக் கட்டுரைகளும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை.
தமிழின் ஆய்வுத் தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ‘ஆராய்ச்சி’ என்ற ஆய்விதழை 1969ஆம் ஆண்டு தொடங்கினார் இவர்.
இதில் இவரின் ஆய்வுகள் மட்டுமின்றி, பல்வேறு துறை சார்ந்த ஆய்வறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார்.
பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும், தன் இறுதிகாலம் வரை இவ்விதழை இவர் நடத்தி வந்தது குறிக்கத்தக்கது.
இந்திய நாத்திகமும் மார்க்சியமும் - இலக்கியத்தின் உள்ளடக்கமும் உருவமும் &- உயிரின் தோற்றம் &- உரைநடை வளர்ச்சி -- கட்டபொம்மன் கதைப்பாடல் -- கட்டபொம்மன் கூத்து- - கான்சாயபு சண்டை -- முத்துப்பட்டன் கதை &- காத்தவராயன் பாடல் -- ஐவர் ராஜாக்கள் கதை &- தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம் &- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் &- தமிழ் நாட்டுப் பாடல்கள் -- தமிழர் பண்பாடும் தத்துவமும் -- தமிழர் வரலாறும் பண்பாடும் -- பழங்கதைகளும் பழமொழிகளும் - புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் &- மக்களும் மரபுகளும் &- மார்க்சிய அழகியல் &- மார்க்கிய சமூக இயல் கொள்கை - வ.உ.சி முற்போக்கு இயக்கங்களிள் முன்னோடி -- Studies in Tamil Folk Literature ஆகிய இவரின் 22 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
இவரின் இளமைக் காலத்தில், நாங்குநேரி வட்டார விவசாய இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயல்பட்டார்.
புகழ்பெற்ற திருநெல்வேலி சதிவழக்கு விசாரணைக் கைதிகளுள் இவரும் ஒருவர்.
கோயில் நுழைவு, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, நில மீட்புப் போராட்டங்கள் எனப் பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கு கொண்டுள்ளார்.
நகராட்சி உறுப்பினராகவும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத்தலைவராகவும் இவர் ஆற்றிய சமூகப் பணிகளும் மறக்கக் கூடியவை இல்லை.
இப்படிப்பட்ட பெரும் சிறப்புக்கு உரிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் தன் 73ஆம் வயதில் 1980ஆம் ஆண்டு காலமானார்."

LikeShow More Reactions
Comment


மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு

மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும்
இன்றய பின்னேரச் சாப்பாடு


இன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.
வறுமை வாட்டிய நாட்கள் பல அப்போது செட்டியாவெளியில்தான் மரவள்ளிச் சேனைகள் இருந்தன .சாப்பாட்டுக்கு கஸ்ரமான பொழுதுகளில் இந்த மரவள்ளிச் சேனைகளுக்கு சென்றிருக்கிறேன் சில நாட்களில் கடனுக்கு தரமாட்டோம் என சில சேனைக்காரர் மறுத்த போது வெறும் கைகளுடன் வந்த நாட்களும் உண்டு அப்படி பல இரவுகள் பட்டினியாய் இருந்த நாட்களும் உண்டு.காலம் எவ்வளவு கொடியது வறுமையும் அதனுடன் இணைந்த பசியும் பல நாட்கள் ஒரு நேர சாப்பாடு கூட கிடைக்காமல் பட்டினியாய் பள்ளிக்கு போன நாட்களில் மரவள்ளிக் கிழங்கே துணை நிற்கும். அத்தோடு சோழன் கதிரும் ஏழைகளின் ஒரு நேர உணவு வசதியானவர்களுக்கு அது ஒரு இடை நேர சாப்பாடு.
கடந்து வந்த ஆண்டுகளில் நாங்கள் கற்சுனையடியில் ஒரு ஐந்தேக்கர் சேனை வெட்டி அப்புச்சி அதில் மரவள்ளியும் சோழனும் சேனைப் பயிர்களும் செய்தார் பஞ்சமில்லாமல் சாப்பாட்டுக்கு குறைவில்லை ஒன்றில்லாவிட்டால் ஒன்று.அந்த நாட்களில் ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு முப்பத்தைந்து சதம் இது 1975 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலம். அப்புச்சி திருகோணமலைக்கு லோஞ்சில் மூட்டை கணக்கில் கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் வாழ்க்கை ஓடும் .
சில வேளைகளில் மரவள்ளிக்கிழங்கு சேனகளில் கிழக்கு புடுங்கும் போது அவற்றை மரத்தில் இருந்து பிரித்து வெட்டிக் கொடுத்தால் மிஞ்சும் தூழ் கிழங்கை இலவசமாக தருவர் அது எங்கள் வயிற்றுக்கு ஒரு நேர உணவாக மாறிய கதைகளும் உண்டு.
எங்கள் சேனை எப்போதும் பலருக்கு இலவசமாக மரவள்ளிக் கிழங்கு கொடுக்கும் கொடை நிலமாக இருந்தது பலர் கடனுக்கு வந்து கேட்கும் போது அப்புச்சி மறுக்காமல் தாராளமாக கொடுப்பார் எத்தனையோ பேர் எங்கள் சேனையால் பசி ஆறினர்.மரவள்ளியும் சோழனும் வெண்டியும் பூசணியும் பயத்தையும் மற்றும் சிறு பயிர்களும் தாராளமாகவே விளைந்ததது.
மரவள்ளிக் கிழங்கில் அம்மா விதம் விதமாக சாப்பாடு செய்வார்.
மரவள்ளிக் கிழங்கு புட்டு
மரவள்ளிக் கிழங்கில் பால் கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு வடை
மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்
மரவள்ளிக் கிழங்கை வெட்டி சீவி காய வைத்து அதை மாவாக இடித்து ரொட்டி புட்டு என எங்கள் வாழ்வில்
பசி போக்கி பல்லுயிர் ஓம்பிய மரவள்ளி.
மட்டக்களப்பு வந்தபின் மரவள்ளிக் கிழங்கு பொரியல் .பெரிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் கொச்சிக்காய் தூள் கலந்து பொரிப்பது தொட்டுக் கொள்ள கூனி இறாலும் கொச்சிக்காயும் கலந்த சம்பல் தூள் அத்தோடு இலுமிச்சம் பழ சாறும் கலந்து சாப்பிடுதல் வேறு எங்கும் கிடைக்காத சுவை.
கற்சுனயடி பொற்சுனை போல வறுமை எட்டிப் பார்க்காத ஒரு வளமான சேனை இன வன் செயல் காரணமாக அதனை கைவிட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இன்று அந்த நிலம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமில்லாமல் போயிற்று சம்பூர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் எங்கள் சம்மதம் இல்லாமல் சுவிகரித்துக் கொண்டது.
கற்சுனையடி எங்கள் சேனை என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் சுமந்த நிலம்.
அந்த நினைவுகளுடன் எனது இன்றைய மாலை நேர உணவு மரவள்ளிக் கிழங்கும் பச்ச கொச்சிக்காய் இலுமிச்சம் புளி போட்ட சம்பலும், அம்மா அப்புச்சி தம்பி தங்கச்சி அம்மம்மா என உறவுகள் நினைவுடன் நான் தயாரித்த எனக்குப் பிடித்த உணவு.

பேரறிஞர் அண்ணா திராவிடத்தின் குரலாய்

பேரறிஞர் அண்ணா
திராவிடத்தின் குரலாய்




பேரறிஞர் அண்ணா என் பள்ளிப் பருவ வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரிய சிந்தனையாளராக இருந்தவர் என் அம்மாவின் மாமா திரு .ஆ.கனகசின்கம் கல்லம்பாரில் அண்ணாவியாராக இருந்தவர் திரு ஆறுமுகம் அவர்களின் மகன் அம்மா சின்ன மாமா என்று அழைப்பார் நானும் சின்ன மாமா என்றே அழைக்கத் தொடங்கினேன் இன்று வரை அப்படித்தான் அழைத்து மகிழ்கிறேன் அவர் ஒரு தீவிர வாசிப்பாளன்.
அன்றய நாட்களில் திராவிடக் கொள்கைகளிலும் அண்ணாவிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவரிடம் அண்ணாவின் புத்தகங்கள் குவிந்து கிடக்கும் அங்குதான் அண்ணா எனக்கு அறிமுகமானார்.
அந்த நாட்களில் துப்பறியும் நாவல்கள் சின்ன கையடக்கமான பதிப்புகள்ளாக வெளி வந்தன அதே போலவே கையடக்க பதிப்புகளாக அண்ணாவின் நூல்கள் விரைவான வாசிப்புக்கு ஏற்றவையாக நம்மை கவரும் அடுக்கு மொழியில் அமைந்தமை சாதாரண மக்களிடம் தீவிர எழுத்தை கொண்டு சேர்த்தது.
பின்னாட்களிலும் அண்ணாவை தேடி வாசிக்க அவரின் எழுத்து என்னை கவர்ந்தது ரஸ்யப் புரட்சியின் பின் சோசலிசக் கட்டுமானக் கருத்துக்கள் இத்தைய சிறிய வெளியீடுகள் மூலமே மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் பட்டது அந்த வழியயையே அண்ணா பின் பற்றி இருந்தார்.
திராவிடம் தமிழ் பற்று மாநில சுயாட்சி பகுத்தறிவு அண்ணாவின் எழுத்துக்களின் பேசு பொருளாய் இருந்தவை அறுபதுகளில் ஈழத்து இளைஞர்கள் அண்ணாவில் எழுத்துக்களால் கவரப் பட்டனர் என்பதும் அவரைப் போலவே எழுத முற்பட்டவர்களும் மேடைப் பேச்சுக்களை பேசியவர்களும் ஈழத் தமிழர் மத்தியில் உருவாகினர் அண்ணா என்றால் அடுக்கு மொழி என்ற தமிழின் தனித்துவம் பேசப் பட்டது.
அண்ணவின்
கம்பரசம்
தீ பரவட்டும்
ஆரிய மாயை
சிவாஜி கண்ட இந்த் ராச்சியம்
என்னைக் கவர்ந்தவை
பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

ரோமாபுரி ராணி (நூல்)
கம்பரசம் (நூல்)
குமரிக்கோட்டம் (நூல்)
விடுதலைப்போர் (நூல்)
கற்பனைச்சித்திரம் (நூல்)
சிறுகதை (நூல்)
ஆரியமாயை (நூல்)
உலகப்பெரியார் (நூல்)
ஜமீன் இனாம் ஒழி்ப்பு (நூல்)
பணத்தோட்டம் (நூல்)
தீ பரவட்டும் (நூல்)
1858-1948 (நூல்)
அறப்போர் (நூல்)
இலட்சிய வரலாறு (நூல்)
வர்ணாஸ்ரமம் (நூல்)
ரேடியோவில் அண்ணா (நூல்)
நிலையும் நினைப்பும் (நூல்)
தாழ்ந்த தமிழகம் (நூல்)
மே தினம் (நூல்)
Image may contain: 2 people, people smiling, people eating and indoor அவரது வானொலிப் பேச்சுகள் மேடைப் பேச்சுகள் ,நாடகங்கள் திரைப் படங்கள் நூல்களாக தொகுக்கப் பட்டுள்ளன நம் இளைய சந்ததி அறிய வேண்டிய எழுத்துகள் அண்ணாவினுடையது.
நம் காலத்தின் மொழி அண்ணா

ஒரு உப கத இசுக்கா கூழையன்

ஒரு உப கத
இசுக்கா கூழையன்

ஒரு ஊர்ல ஒரு இசுக்கா கூழையன் இருந்தானாம் அவனுக்கு பலகாரம் சாப்பிட சரியான ஆசையாம் எங்கடா பல்காரம் கிடைக்கும் என்று அலைஞ்சானாம் பலகாரம் சுடுற ஆக்கள தேடிப் போனானாம்.
ஒரு இடத்தில பலகாரம் சுடுவதா கேள்விப்பட்டு அந்த இடத்தில யாரையும் காணல்லையாம் ஆனா ஒரு ஆள் நல்ல வாட்ட சாட்டமா வண்டியும் தொந்தியுமா ஒருவன் நிண்டானாம் .
அவனிட்ட இவன் போய்..
ஐயா இங்க ஆறு பலகாரம் சுடுறவங்க என்று கேட்டானாம்
அதுக்கு அந்த தொந்தியன்
என்னப் பாத்தா பலகாரம் சுடுறவன் மாதிரி தெரியல்லையா என்று அதட்டி விட்டானாம்
இல்ல ஐயா எனக்கு பலகாரம் சாப்பிட சரியான ஆச அதுதான்...என்றிழுத்து தலய சொறிஞ்சானாம்.
பலகாரம் சுடலாம் ஆனா மாவும் எண்ணையும் வாங்கி வா
என்று சொன்னானாம் தொந்தியன்
இவனும் ஓடிப்போய் வாங்கி வந்து குடுத்தானாம்
சரி நான் உள்ள போறன் நீ வெளியில நி சலீர் என்றொரு சத்தம் கேக்கும் அப்ப ஓடி வா இவனும் நிக்கிறானாம் சத்தம் கேக்கலையாம் கன நேரத்துக்கு பிறகு சத்தம் கேட்டிச்சாம்
ஒடி வா உன்ர சால்வய புடி என்று பலகாரம் சுட்டு முடிஞ்சு கடைசிய வளிச்சு தாச்சியில ஊத்தினா கருகலா அடிப் பலகாரம் தூள் அது
அது பலகாரம் தீஞ்சு போச்சு அடுத்த முற வா நல்ல பலகாரம் சுட்டு தாறன் என்றானாம் அவன்
இப்படி பலமுற நடந்து போச்சுதாம்.
ஆனா இன்னமும் நம்பிற்று இருக்கானாம் அந்த இசுக்கா கூழையன்
வாசல்ல சால்வத் துண்டோட.
பலகாரத்துக்காக காத்திருக்கும் .....
LikeShow More Reactions
Comment

நதிக் கரை காதல்

நதிக் கரை காதல்


கங்கை கரையில் காத்திருந்தேன்
கண்மணி உன்னை பாத்திருந்தேன்
பொன்னிற ஓளியில் சூரியப் பனியில்
உன்னெளில் கண்டேன் என்னவளே


நாணல் திரையாய் மறைத்திருக்க
நளின உன் முகம் விழி திறக்க
கானக் குயில்கள் பாட்டிசை போல்
காற்றில் வந்தது உன் குரலே

மாவலி ஓடி நடை பயிலும்-அந்த
மண்ணிடை உன் கால் சிலிர்த்து நிக்கும்
தேனிசை மொழியயை பொழிபவளே-என்
சிந்தையயை நாளும் கொல்பவளே

No automatic alt text available.
மதுர நீளல் மணல் பரப்பில்
மன்னவள் உன்னில் களித்திருப்பேன்
முதிர் கனி பழுத்த சுவை போல
முத்தம் என்னில் தித்திக்குதே

ஆற்றிடை ஓடும் சில்லிடைக் காற்று
நேற்றொரு சேதி சொன்னது எனக்கு
பார்த்திருந்தேனே பாவை உன் அழகை
நோற்றிருந்தேனே நுன் முகம் காண


Sunday, 18 March 2018

என்னைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் இமான்

என்னைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் இமான்



நூறாண்டுகளை கடந்து நிக்கும் தமிழ் சினிமா உலகில் இதுவரை பல இசையமைப்பாளர்கள் சாதனை படைத்துள்ளார்கள் அந்த வரிசையில் இளைஞர் இமான் தன் மெல்லிசையால் அசத்தி வருகிறார்
நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ள இந்த இளைஞர் தமிழ் மெல்லிசையில் வித்தியாசமான உச்சங்களை தொட்டு நிக்கிறார் நூறு படங்களுக்குள் நூற்றி இருபத்தியைந்து புதிய பாடகர்களை அறிமுகப் படுத்தி தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய தரிசனங்களை தொட்டு நம்மை தன் இசையால் வசப் படுத்தும் வல்லமை இமானுக்கு இருக்கிறது.
வித்தியாசமாக பாடல்களை கொடுப்பதில் அவரது திறமை புலப்படுகிறது தமிழ் இசை கர்நாடக இசை நம் மண்ணின் இசை என எல்லாவற்றையும் அறிந்திருக்கும் அவர் அவற்றை அழகுற சினிமாவுக்காக வடிவமைபதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நேற்றும் இன்றும் 17,18,03.2018 திகதிகளில் நடை பெறும் சரி க ம பா நிகழ்ச்சி அவரது பாடல்களால் நிறைந்திருக்கிறது .
நேற்றைய நிகழ்வில் இமான் பியானோ வாசித்து பாட பின்னர் சிறினிவாஸும் ,கார்த்திக்கும் ,விஜய பிரகாசும் இணைந்தது இசையாய் சேர்ந்த போது நம்மை எங்கோ ஒரு தூரத்துக்கு வான் வெளிக்கு அழைத்து சென்றது போன்ற இசைப் பிரவாகம் சில நிமிடங்களில் வசப் பட்டது.
மெல்லிசை மன்னன் விஸ்வநாதனுக்கு பின் மெல்லிசை இளவரசர் என பட்டம் கொடுக்க கூடிய திறமையாளர் இமான் மெல்கிசை மன்னருக்கு பின் படங்களையும் கதையயையும் உணர்ந்து கதாபாத்திரங்களுக்கான இசையை அனுபவித்து வெளிப் படுத்தும் இசையமைப்பாளர் இமான்
எளிமையும் இனிமையும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாய் இசையயை மொழிகிறார் அவரது பியானோ காவியமாய் இசைக்கிறது இறுமாப்பு சற்றும் இல்லாத இசையாளனாய் நம் முன் இமான் உயர்ந்து நிற்கிறார

பள்ளிக்குடியிருப்பென்னும் பழம் பதி

பள்ளிக்குடியிருப்பென்னும்
பழம் பதி





எல்லாளன் என்ற
வல்லாளன் வந்த வழி
படை வீடு கண்டதானால்
பள்ளிக் குடியிருப்பானதுவே

Image may contain: plant, nature and outdoor
கண்ணகிக்கு கால் நாட்டி
கவி சொல்லிப் பாடுகின்ற
கொம்பு முறி விளையாட்டை
கொண்டாடும் பெருவூர்
பிரம்பு வெளியென்னும்
பெரு நெல்லுக் களஞ்சியத்தை
வரமாகக் கொண்ட
உரம் மிக்க தமிழ் ஊர்
Image may contain: one or more people, outdoor and nature
தேனோடு பாலும்
திகட்டாத சென்னெல்லும்
மானோடி விளையாடும்
மகிழ் நிலமாய் தான் விரியும்
Image may contain: sky, grass, plant, cloud, outdoor and natureImage may contain: 4 people, people sitting and outdoor
குளமும் வயலும்
நிலமுமாய் நீளும்
தமிழாய் வாழும்
தனித்துவ ஊர் இது

இளக்கந்த சாமியார்

இளக்கந்த சாமியார்


இளக் கந்த குளம் நிறைந்து போய் கிடந்தது வான் கதவுகள் திறந்து விடப் படு நீர் பெரு நீர் வீழ்ச்சியயைப் போல பொங்கி பிரவாகித்து ஓடிக் கொண்டிருந்தது இம்முறை மழை மாரி மழை கொட்டி தீர்த்து வெள்ளக்காடாய் விரிந்து கிடந்தது பூமி பாயும் நீரில் முக்கி குழித்து மூழ்கி எழுந்தார் இளக்கந்த சாமியார்.
சாமியார்தான் இளக்கந்த குளத்துக்கு பொறுப்பு அவர் ஒரு குளக்கட்டு எஞ்சினியர் எஞ்சினியர் படிப்பு படித்தவர் அல்ல நீர் வள அதிகாரிகள் பகிடிக்கு சொல்லும் வார்த்த பகிடிக்கு சொன்னாலும் குளம் பற்றிய அனுபவ அறிவு அபரிமிதமானது வான் கதவுகள திறப்பது வயல்களுக்கு நீர்ப் பாச்ச மதகு திறந்து கட்டுப் படுத்துவது இதுதான். அவர் வேல
எப்போதும் நெற்றியில் பட்டையாய் திரு நீறும் வட்டமாய் சந்தணப் பொட்டும் நடுவில் குங்குமமுமாய் நீண்ட நரைத்த தாடி இழுத்து கட்டிய குடுமி காக்கிச் சட்டை வேட்டி கமக்கட்டு இடுக்கில் பெரிய குடை இந்த அடையாளங்களுடன் சேனையூரில் வலம் வருவார் குளத்தை பராமரிப்பது அவர் வேலை மாரி வெள்ளாம வெட்டிய பின் ஒருக்கா அவர் ஊரான யாழ்ப்பாணம் போய் வருவார் அந்த நாட்களில் அரசு பெரிய குளங்களை பராமரிக்க பராமரிப்பாளர்களை நியமித்திருந்தது .சாமியார் குழந்தைகளுடன் குதுகலமாக பொழுது போக்குவார் ஆசையிர கடையில பல்லி முட்டாய் வாங்கி பிள்ளையார் கோயில் புளிய மரத்துக்கு கீழ இருந்து மிட்டாய் கொடுத்து பிள்ளைகளை சந்தோசப் படுத்துவார் எப்போதும் அவர் பின்னால் குழந்தைகள் குழுமி இருப்பர்.
ஒரு பழைய சைகில் அது இளக்கந்த ரோட்டில் ஓடி ஓடி எப்போதும் சேறும் புழுதியுமாய் இருக்கும்.ஊரில் எல்லோரும் சாமியார் என்றே அழைப்பர் அடிக்கடி காளியப்பு பரியார் வீட்டுக்கு வந்து பரியாரிடம் பழைய கதைகள் கதைத்துக் கொண்டிருப்பது வாடிக்கை.
குளத்துக்கு பக்கத்திலையே ஒரு வாடி கட்டி இருந்தார் இரவில் அங்குதான் தங்குவது வழக்கம் இளக்கந்த மட்டப்புக்களி பன்வெளி கரச்ச,நல்லூர் என எல்லா இடமும் அவர் சையிக்கில் தடம் படாத இடம் இல்லை எனலாம்
குளித்து முடித்து கரையேறினார் சாமியார் அவர் கரையேறவும் விஸ்வலிங்க பரியாரியாரும்,முத்துகுமாரரும்,இராமலிங்கத்தாரும் வண்டில்ல இருந்து இறங்கவும் சரியாய் இருந்தது .
"பூசாரியார் நீங்க சொன்னபடி பச்ச பாக்கு பச்ச வெத்தில பச்ச பழம் எல்லாம் மூதூருக்கு போய் வாங்கி வந்திற்றன் எல்லாம் சரியா இருக்கு பத்தினித் தாயாருக்கு நேத்திக்கடன் வச்சது அவ அரூள்ள மழ கொட்டோ கொட்டென்று கொட்டி இப்ப பாருங்க நிறைஞ்சு கிடக்குது குளக்கட்டு பத்தினி நம்மள கைவிட மாட்டா "
என்று சாமியார் கொட்டி தள்ளி விட
"நானும் என் பங்க்குக்கு எல்லாம் கொண்டு வந்திருக்கன் முத்துக்குமார் குள வெட்டிப் பந்தல் போடு குளக்கட்டு பத்தினியம்மா குடியிருக்கிற வன்னி மரத்துக்கு கீழ தட்டையா கிடக்கிற பாறாங் கல்லில அம்மாளாச்சிக்கு வேண்டியதெல்லாம் வையுங்க " என்று விஸ்வலிங்கத்தார் சாமியார உசார் படுத்த குளக்கட்டு பத்தினிக்கு அன்றைய நாள் கொண்டாட்டமாய் அமைந்தது.
விஸ்வலிங்கப் பரியாரியார்ர வயல் குடல தள்ளி கிடந்தது சாமியாரும் பரியாரியாரும் கதைச்சு கதைச்சு காவல் மாலுக்கு வந்த போது பக்கத்து வயல் மெத்த வீட்டு நற்சிங்கத்தார் எருமப் பால் புக்கையோட காத்திருந்தார்.
எருமப்பால் புக்க எப்படி காச்சுவது சேனையூராக்களுக்கு ஒரு தனித்துவமான முற இருக்கு காக்கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பால் விடணும் .எப்பவும் சாமியாருக்கு எருமப் பால் புக்க என்றா உசிர் ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் இப்படி கிடைக்காது.
இளக்கந்த குளத்துக்கு மட்டுமில்ல இளக்கந்த வயல் வெளிக்கும் அவர்தான் காவல் காரன் .வெள்ளாம வெட்டு தொடங்கினா சாமியாருக்கு கொண்டாட்டம் ஒவ்வொரு வயல் காரரும் சாமியாருக்கு ஒரு கட்டு கொடுப்பாங்க எப்படியும் ஒரு போகத்தில அவருக்கு பத்து இருபது மூடைக்கு மேல தேறும் .வெள்ளாம வெட்டு முடிய ஒருக்கா யாழ்ப்பாணம் போய் வருவார்.
உண்மையில் சாமியார்தான் கலியாணம் முடிக்கல்ல ஒரு அக்கா யாழ்ப்பாணத்தில இருப்பதாக சொல்லுவார் .ஊருக்கு போற சாமியார் இரண்டு நாளிலேயே திரும்பிருவார்.
காளியப்பு பரியாரியார் வீடு ஆச கட அடுத்ததா இவர் அடிக்கடி போற இடம் மெத்த வீட்டு நற்சிங்கத்தார் வீடு சாமியார் ஒரு பாட்டுப் பிரியர் நற்சிங்கத்தாரிடம் ஒரு பெரிய சர்பனாப் பெட்டி இருந்தது காலால மிதித்து வாசிக்கும் பெரிய பெட்டி அந்த நாளைய தியாகராஜ பகவதர்பாடல்கள் என்றால் உயிர் நற்சிங்கத்தாருக்கு கொஞ்சம் சங்கீதம் தெரியும் கிட்டப்பா பாடல்களை பாடி சாமியாரை மகிழ்விபார் நற்சிங்கத்தார் சர்ப்பணாப் பெட்டி வாசிப்பதே ஒரு தனி அழகு வெறும் மேலுடன் தோழில் போட்ட வெள்ளை சால்வையும் வேட்டியும் அவருக்கு தனி அழகைக் கொடுக்க ரசித்து ரசித்து இசையில் மூழ்கிப் போவார் பல வேளைகளில் பாகவதர் மணியம் வந்தால் அது ஒரு இசைக் கச்சேரியாய் மாறும் உனக்கும் வேல தருவன் உனக்கும் வேல தருவன் என நகைச்சுவை பண்ணும் மணியத்தார் வாயை திறந்தால் சாமியார் வாய் மூடாமல் பார்த்து வியந்து நிற்பார் .
பகல் பொழுது இப்படி கழிய மத்தியானம் எங்கையாவது சாப்பாடு கிடைக்கும் சேனையூரில் சாப்பாட்டு நேரத்துக்கு எங்கு போனாலும் சாப்பாடு கிடைக்கும் சாமியாருக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் அப்படித்தான் சேனையூரின் விருந்தோம்பல் அப்படி.சாமியாருக்கு பிடித்த இன்னொரு விசயம் தண்ணி சேனையூர் தண்ணிபோல தான் எங்கும் குடித்ததில்ல என்பார் மாலையில் இளக்கந்த போகும் போது ஒரு குடம் சைக்கில பக்குவமா கட்டி கொண்டு போவார்.
பகல் முழுசதும் ஊருக்குள்ள சுத்தும் அவர் மூதூருக்குப் போய் அலுவலகத்தில தன்ர அலுவலக வேலையும் பார்த்து குஞ்சன்ர கடையில வடையும் வணிசும் வேண்டி வருவார்.சில நாட்களில் கூனித்திவு போய் வீசியோவை பத்து வாறதுக்கும் மறக்கிறதில்ல அப்படியே காரியப்பரிட்ட பத்திரகாளி பற்றி பக்தி பூரவமா சில கதைகள் சொல்லி வருவதும் வழக்கம்

Saturday, 17 March 2018

அசலும் நகலும்

அசலும் நகலும்

அசல் என்பது
மாயயைதான் இன்று
இரண்டுமே நகல்தான்
ஒன்றிலிருந்து இனொன்றாய்
உருவாகும் பிம்பம்

பூக்களின் அர்ச்சனை
அசலுக்கா நகலுக்கா
மாலையும் மரியாதையும்
மண்ணில் வீழ்தலும்
தொடர்தலும் மனித
அவலத்தின் குறியீடுகள்தான்
கண்ணம்மா
கொச்சைப் படுத்தப் படுகிறாள்
சுய மரியாதையுள்ள
நம் சுதந்திரக் கவி
பாரதி கண்ட பெண் அவள்
சுயமரியாதையயை
விலை கூறி விற்ற
ஒருவருக்காய்
கண்ணம்மாவின் கண்களில்
இரத்த்தம் கசிகிறது
நம் கவி
பாரதியயை தேடி

10.12.2016

Friday, 16 March 2018

மகாத்மா

மகாத்மா

காந்தி இரவு
என் கனவில் வந்தார்
நான் இப்போ
மகாத்மா இல்லை
என்றார்
பார்க்க பரிதாபமாய்
இருந்தது

என் பட்டத்தை
நடிகர் ஒருவர்
வேறொரு நடிகைக்கு
சூட்டியிருக்கிறார்
என்றார் அவர்
ஊஊ என பெரும் சத்தம்
கண் விழித்தேன்
வர்தா புயல்
சென்னையயை
கடந்து கொண்டிருந்தது
மகாத்மாவின் கல்லறை
உடைக்கப் பட்டு
உதிரம் வழிந்தது

11.12.2016

Thursday, 15 March 2018

மல்லிகைத் தீவு



மல்லிகைத் தீவு

கொட்டியாரப் பற்றில் தனித் தமிழ் கிராமமாய் பனெடுங்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியும் நீட்சியுமாய் விளங்கும் அழகு தமிழ் கிராமம் மல்லிகைத் தீவு .கடல் நடுவே தீவைப் போல முன்று போகமும் விளையும் வயல்களின் நடுவே வளங்கள் கொட்டிக் கிடக்கும் சிந்தா அழகும் சீரும் தொன்மை மரபுகளும் கொண்ட பழமை மிகு வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமம்.

மூதூர் நகரத்திலிருந்து எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் மல்லிகைத் தீவு சந்தி மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ளது அந்த சந்தியிலிருந்து உள்ளே செல்ல விரியும் வயல் வெளிகளை கடந்து மணல் சேனையயை தாண்டும் போது மனங் கவரும் மல்லிகை மணத்துடன் நம்மை வரவேற்கும்.

குளக்கோட்டன் வரலாற்றுடன் தொடர்பு பட்ட கோணேஸ்வரப் பண்பாட்டின் ஒரு தொடர்ச்சியை பேணுகின்ற கிராமம் கோணேசர் கல்வெட்டு இக் கிராமத்திலிருந்தே அன்றைய நாட்களில் கோணேசர் கோயிலுக்கு பூக்கள் பூசைக்கு எடுத்துச் செல்லப் பட்டதாகவும் தாமரை மலர்களுடன் சிறப்புப் பெற்ற மல்லிகை மலர்கள் வாடாத வாசத்துடன் கொண்டு செல்லப் பட்டதாகவும் அதனாலேயே மல்லிகைத் தீவு என பெயர் வந்ததாகவும் சொல்லப் படும் கதைகள் கோணேசர் கல் வெட்டு சொல்லும் வளமைகளை பேணி அதன் வழி ஒரு பண்பாட்டுப் பரவலை கொண்ட கிராமமாக அடையாளப் படுவதை காணலாம்.

குளக்கோட்டு மன்னன் எனும் சோழகங்கனால் சிந்து நாட்டிலிருந்து கோணேசர் கோயிலின் பராமரிப்புக்கான நெல் முதலிய திரவியங்களை இங்கிருந்து இங்கு விளைவித்து கோயில் கருவூலத்துக்கு கொண்டு சேர்த்ததாகவும் வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அகத்தியயஸ்தாபனமும் திருக்கரசையும் மல்லிகைத் தீவுடன் அதன் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.ராஜேந்திர சோழன் காலத்தில் கொட்டியாரத்து கானகன் பற்றிய செய்திகளும் மல்லிகைத் தீவைச் சூழ உள்ள காடுகளில் காணப்படும் அழிபாட்டு சின்னங்களும் சோழ ராச்சியத்தின் செல்வாக்கை உறுதி செய்கின்றன. பழமையான சிவன் கோயில் ஒன்று இங்கு இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட அதை புனரமைக்கும் வேலைகள் அண்மைக் காலத்தில் முடிவுற்று திருமங்களேஸ்வரர் என இப்போது சிறப்பு பெற்ற ஆலையமாக விளங்குகிறது.

முன்னைய நாட்களில் பத்தினி வழிபாடும் கொம்பு விளையாட்டும் நிகழ்த்தப் பட்டதாகவும் காலப் போக்கில் அது மருவி வழக்கொழிந்து போனதாகவும் ஊர்ப் பெரியவர்களின் செவி வழி குறிப்புகள் தெரிவிக்கின்றன.அத்தோடு நீலாப்பளை பத்தினியம்மன் சிந்து நாட்டாரோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் மல்லிகைத் தீவினரின் பராமரிப்பில் இருந்ததாகவும் முன்னோர்களின் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.

நானூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சோமநாத உடையார் பற்றி இவ்வூர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர் மல்லிகைத் தீவு எனும் முன்பைய பெரு நிலப் பரப்போடு அவர் நினைவுகள் சிறப்புப் பெறுகின்றன.இன்று மல்லிகைத் தீவு சிறு சிறு ஊர்களாக மாறிய சூழ் நிலமைகளும் கவனம் கொள்ளப் பட வேண்டியதே.

இரண்டாயிரம் வருசங்களுக்கு முன் எல்லாளனது சோழப் படையினர் மல்லிகைத் தீவின் வழியே மணலாற்றை கடந்து பொலநறுவை வழியாக அனுராத புரம் சென்றதாக ஒரு கதையுள்ளதையும் நாம் மல்லிகைத் தீவோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மல்லிகைத் தீவு சமூகத்தினர் பல தனித்துவ மரபுகளை கொண்டுள்ளனர் தங்கள் அடையாளமாக மாடுகளுக்கு குறி சுடும் போது மேழி சுளி,தாமரைப் பூ ஆகியவற்றின் மூலம் தமக்கான பண்பாட்டு வாழ்வியல் அடையாளமாக கொள்கின்றனர்.

இன வன் செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் இன்று மீண்டெழுந்து பாரம்பரிய பெருமைகளையும் பண்பாடையும் பேணி வருவதில் முன்னுதாரணமான ஒரு கிராமமாக எழுச்சி பெறுகிறது

Tuesday, 13 March 2018

திருகோணமலையில் பத்தினி கலாசார மரபு

திருகோணமலையில் பத்தினி கலாசார மரபு
ஈழத்தில் கண்ணகி மட்டக் களப்பு யாழ்ப்பாணம் வன்னி பிரதேசங்களில் கண்ணகி கலாசார மரபாக இருக்க அதன் நீட்சியாக திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பத்தினி கலாசார மரபாக முக்கியத்துவம் பெறுகிறது.
1. கடற்கரைச்சேனை சம்புக்களி பத்தினி அம்மன்
2.நீலாப்பளை பத்தினி அம்மன்
3.தோணாவடிசம்பூர் பத்தினி அம்மன்
4.மூதூர் பத்தினி அம்மன்
5.பாலம்பட்டாறு பத்தினி அம்மன்
6.நிலாவெளி கோபாலபுரம் பத்தினி அம்மன்
7.கந்தளாய் குளக்கட்டு பத்தினி அம்மன்
8.தம்பலகாமம் கப்பல்துறை பத்தினி அம்மன்
9.தம்பலகாமம் சேன வெளி பத்தினி அம்மன்
10.திருகோணமலை பத்தாம் குறிச்சி பத்தினி அம்மன்
11.லிங்க நகர் (மட்கோ)பத்தினி அம்மன்
12.உவர் மலை கண்ணகி அம்மன்
13.கும்புறு பிட்டி கண்ணகி அம்மன்
14.கிண்ணியா பத்தினி அம்மன்
15.ஆலங்கேணி கண்ணகை அம்மன்
16.ஈச்சந்தீவு கண்ணகை அம்மன்
மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் சடங்குகள் வருசம் தோறும் கதவு திறக்கப் பட்டு ஏழு நாள் சடங்காக நடை பேறுகிறது.கடசிநாள் குளிர்த்தி சடங்குடன் முடிவடைகிறது.குளிர்த்தில் இங்கு முக்கியப் படுகிறது.காரைதீவு கண்ணகி,செட்டிபாளையம் கண்ணகி முதலான சில கோவில்கள் சமஸ்கிருத மயமாக்கலுக்கு உட்பட்டிருந்தாலும் ,இரண்டு மரபுகளையும் பின்பற்றுகின்றன.
திருகோணமலை பத்தினி வேள்வி இரண்டு நாட்கள் உடையதாய் முதல் நாள் மடைப் பெட்டி எடுத்தலும் அடுத்த நாள் பொங்கலுமாய் முடிவடைகிறது.மட்டக் களப்பில் கோராவெளியில் இரண்டு நாள் சடங்காகவே நடை பெறுகிறது.
உவர்மலை கண்ணகியும் ,கும்புறு பிட்டி கண்ணகியும் சமஸ்கிருத மயமாக்கலுக்கு உட்பட்ட பூசை நடைமுறைகளை கொண்டுள்ளது.
திருகோணமலையின் கிராமங்களில் பத்தினி காவல் தெய்வமாக போற்றப் படுகிறாள்.
சேனையூர் ,கட்டைபறிச்சான் ,தம்பலகாமம் பகுதிகளில் வயல் நிலங்களை அண்டி குளக்கட்டு பத்தினி என போற்றப் படுகிறாள்.குளக்கட்டு பத்தினிக்கான வழிபாடும் வித்தியாசமானது.பச்சப்பழம் ,பச்சப் பாக்கு ,பச்ச வெத்திலை என சூழலியலை முக்கியப் படுத்தும் சடங்காக உள்ளது.
பத்தினி வழிபாடு பற்றிய ஒரு ஆய்வுகட்டுரையில்
கலாநிதி அனுசூயா சேனாதிராஜா
பின் வருமாறு குறிப்பிடுவார்
''சேரன் செங்குட்டுவன் கி.பி. 123 – 135 ஆண்டளவில் மண்ணகத்திலிருந்து விண்ணக மாந்தர்க்கு விருந்தாகச் சோதியுட் கலந்த பத்தினி அம்மனிற்கு திருச்செங்கோட்டையில் கோட்டம் அமைத்துப் பிரதிஸ்டை செய்யும்போது இலங்கை வேந்தன் கஜபாகுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்கு நித்திய பூசை செய்யும்படி கட்டளையிட்டான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி நின்றான். அப்போது அங்கு வந்த கஜவாகு மன்னன் அப்பத்தினியை நோக்கி இச்செங்குட்டுவனைப் போல் எங்கள் நாட்டில் நாங்கள் செய்யும் பூசையில் நீ எழுந்தருளி அருள்செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்போது நீ விரும்பியபடியே வரம் தந்தேன் என்று ஓர் அசரீரி ஒலி உண்டாயிற்று. கஜவாகு மன்னன் வேண்டிக் கொண்டதற்கு இணங்க சந்தண மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தண மரப்பலகையால் செய்து பேளையில் வைத்த கஜவாகு மன்னனிற்குச் செங்குட்டுவன் கொடுத்தான். அதைப் பாண்டிய அரசன் வெற்றிவேற் செழியன் யானைமேல் சந்தண மரப்பலகையால் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வந்து வேதாரணியத்தில் விட்டான். அங்கிருந்து கப்பலில் ஏறி, காரைநகரிற்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள திருவடி நிலையில் இறங்கினார்கள். யானைப் பவனிக்கென்று அலங்கரிக்கப்பட்ட யானைகள் அங்கிருந்தன. திருவடி நிலையிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மாகியப்பிட்டி வழியாய் அங்கணாமைக் கடவைக்கு வந்து ஆராதனை நடத்தப்பட்டு வேலம்பறை என்றுமிடத்திற்கு வைகாசிப் பூரணையன்று வந்து சேர்ந்தது. அங்கிருந்து கரம்பகம் கோவிற்குளம் நாகர்கோவில் வன்னிப்புட்டுக்குளம் விழாங்குளம் முள்ளியவளை வற்றாப்பளை சாம்பல்தீவு திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு நீலாப்பளை வரையும் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தாவளமாட்டின் மூலமாக (மாட்டுவண்டி) கோராவெளி கொக்கட்டிமூலை தாண்டவன்வெளி வந்தாறுமூலை ஈச்சந்தீவு கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகிழடித்தீவு மண்முனை புகுக்குடியிருப்பு செட்டிபாளையும் எருவில் மகிழூர் கல்லாறு கல்முனை ஊர்முனை காரைதீவு பட்டிமேடு தம்பிலுவில் பாணமை கதிர்காமம் கண்டிவரை கொண்டு செல்லப்பட்டது. கண்டியில் ஓர் கோவில் கட்டி சந்தனப் பலகையால் செய்த பெட்டியும் அம்மனும் சேமிக்கப்பட்டது. கண்டி தலதா மாளிகையில் உள்ள பத்தினிக் கோவில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அம்மனும் சந்தனப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. ''
சம்புக்களி பத்தினி அம்மன் தொன்மை மிகு வரலாற்றினூடு இன்று வரை தனித்துவமான பத்தினி கலாசார மரபைப் பேணி வருகிறது.
இரண்டுமரபுகளின் கலப்பை நாம் இங்கு காணலாம் மட்டக்களப்பில் காணப்படும் கண்ணகி குளிர்த்தியோடு இணைந்த பத்ததி முறையிலான சடங்கு முறையும்,வற்றாப்பளை மரபான உப்பு நீரில் விளக்கெரிக்கும் மரபும் இங்கு முக்கியப் படுகிறது.இங்கு குளிர்த்தி பாடுதல் சிறப்பான நிகழ்வாக நடை பெறும்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு இங்கு ஆடு ,கோழி பலிகொடுக்கும் மரபு காணப் பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
நான் முன்னர் பதிவிட்டிருந்தது தற்செயலாக அழிந்து விட்டதால் இந்த பதிவை புதிதாய் .பதிவு செய்துள்ளேன்.
தகவல்கள் தந்த அனைவருக்கும் நன்றி.
LikeShow More Reactions
Comment
10 comments
Comments
Raguvaran Balakrishnan
LikeShow More Reactions
· Reply · 1y
Anish Rai
Anish Rai நல்ல பயனுள்ள வரலாற்று பொக்கிசத்தை தந்து பகிர்தளித்ததற்கு நன்றி கூறுகிறேன் ....
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Thamotharam Ramesh
Thamotharam Ramesh அருமை
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Sithiravelu Karunanandarajah
Sithiravelu Karunanandarajah களுவாஞ்சிகுடி கண்ணகையம்மன் கோவில் பற்றி இந்த ஆய்வாளர் ஏன் குறிபிப்டவில்லையென்று தெரியவில்லை. மிகவும் கோலாகலமாக நடந்தேறும் இக்கோயிலின் குளிர்த்தி நேற்று நிறைவடைந்தது. வெளிநாடுகளிலிருந்து ஊரவர்கள் அங்கு ஒவ்வொரு வருடமும் இதற்கென்றே செல்வார்கள்.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Nsn Niro
Nsn Niro திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் 2ம் வட்டாரத்தில் கண்ணகி அம்மன் ஆலயம் , ஆலங்கேணிக்கு அண்மையில் உள்ள ஈச்சந்தீவு கிராமத்திலும கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் கிண்ணிய பிரதான வைத்தியசாலைக்கு முன்பாக பத்தினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது..
ஆகவே இவ்வாலயங்களையும் தாங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்..
நன்றி
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Punitha Thushyanthan
LikeShow More Reactions
· Reply · 1y
Nadesalingam Sabapathippillai
Nadesalingam Sabapathippillai எல்லோருக்கும் தெரியாத விடயம் கந்தளாய் குளக்கோட்டன் குளக்கட்டில் ஒரு கண்ணகி ஆலயம் உள்ளது. இதில் விசேடமாக சிங்களமக்கள் பூசித்து வருவது குறிப்படதக்கது
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Pathmanabasarma Thivyaroobasarma
Pathmanabasarma Thivyaroobasarma மிக அருமையான தொகுப்பு.
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Ramanan Kanes
Ramanan Kanes Super nalla visayam
Manage
LikeShow More Reactions
· Reply · 1y
Bala Ram
Bala Ram தரவுகளில் திருக்கோணமலை
மாவட்ட கண்ணகையம்மன்,பத்தினி
அம்மன் ஆலயவிபரங்கள் பதிவு

செய்யப்பட்டுள்ளமை யாவரும்
அறிவர். பத்தாம் குறிச்சி கண்ணகை
அம்மன் ஆலயத்திற்கு ,யாழ் பலகலைக்கழக வாழ்நாள்
பேராசிரியர் அ.சணமுகதாஸ் அவர்கள்
வருடா வருடம் வருகை
தந்து கோவலன் கண்ணகி
காவியத்தை இனிய குரலில்
பாடும் நினைவுகள் என்
மனதில் இன்றும் அடிக்கடி
வந்து செல்லும்.பறிபோகும்
திருமலையை யாராலும்
தடுத்துவிட முடியாது

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி