வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 15 March 2018

மல்லிகைத் தீவு



மல்லிகைத் தீவு

கொட்டியாரப் பற்றில் தனித் தமிழ் கிராமமாய் பனெடுங்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியும் நீட்சியுமாய் விளங்கும் அழகு தமிழ் கிராமம் மல்லிகைத் தீவு .கடல் நடுவே தீவைப் போல முன்று போகமும் விளையும் வயல்களின் நடுவே வளங்கள் கொட்டிக் கிடக்கும் சிந்தா அழகும் சீரும் தொன்மை மரபுகளும் கொண்ட பழமை மிகு வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமம்.

மூதூர் நகரத்திலிருந்து எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் மல்லிகைத் தீவு சந்தி மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ளது அந்த சந்தியிலிருந்து உள்ளே செல்ல விரியும் வயல் வெளிகளை கடந்து மணல் சேனையயை தாண்டும் போது மனங் கவரும் மல்லிகை மணத்துடன் நம்மை வரவேற்கும்.

குளக்கோட்டன் வரலாற்றுடன் தொடர்பு பட்ட கோணேஸ்வரப் பண்பாட்டின் ஒரு தொடர்ச்சியை பேணுகின்ற கிராமம் கோணேசர் கல்வெட்டு இக் கிராமத்திலிருந்தே அன்றைய நாட்களில் கோணேசர் கோயிலுக்கு பூக்கள் பூசைக்கு எடுத்துச் செல்லப் பட்டதாகவும் தாமரை மலர்களுடன் சிறப்புப் பெற்ற மல்லிகை மலர்கள் வாடாத வாசத்துடன் கொண்டு செல்லப் பட்டதாகவும் அதனாலேயே மல்லிகைத் தீவு என பெயர் வந்ததாகவும் சொல்லப் படும் கதைகள் கோணேசர் கல் வெட்டு சொல்லும் வளமைகளை பேணி அதன் வழி ஒரு பண்பாட்டுப் பரவலை கொண்ட கிராமமாக அடையாளப் படுவதை காணலாம்.

குளக்கோட்டு மன்னன் எனும் சோழகங்கனால் சிந்து நாட்டிலிருந்து கோணேசர் கோயிலின் பராமரிப்புக்கான நெல் முதலிய திரவியங்களை இங்கிருந்து இங்கு விளைவித்து கோயில் கருவூலத்துக்கு கொண்டு சேர்த்ததாகவும் வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அகத்தியயஸ்தாபனமும் திருக்கரசையும் மல்லிகைத் தீவுடன் அதன் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.ராஜேந்திர சோழன் காலத்தில் கொட்டியாரத்து கானகன் பற்றிய செய்திகளும் மல்லிகைத் தீவைச் சூழ உள்ள காடுகளில் காணப்படும் அழிபாட்டு சின்னங்களும் சோழ ராச்சியத்தின் செல்வாக்கை உறுதி செய்கின்றன. பழமையான சிவன் கோயில் ஒன்று இங்கு இருந்ததற்கான அடையாளங்கள் காணப்பட அதை புனரமைக்கும் வேலைகள் அண்மைக் காலத்தில் முடிவுற்று திருமங்களேஸ்வரர் என இப்போது சிறப்பு பெற்ற ஆலையமாக விளங்குகிறது.

முன்னைய நாட்களில் பத்தினி வழிபாடும் கொம்பு விளையாட்டும் நிகழ்த்தப் பட்டதாகவும் காலப் போக்கில் அது மருவி வழக்கொழிந்து போனதாகவும் ஊர்ப் பெரியவர்களின் செவி வழி குறிப்புகள் தெரிவிக்கின்றன.அத்தோடு நீலாப்பளை பத்தினியம்மன் சிந்து நாட்டாரோடு நெருங்கிய தொடர்புடையதாகவும் மல்லிகைத் தீவினரின் பராமரிப்பில் இருந்ததாகவும் முன்னோர்களின் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது.

நானூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த சோமநாத உடையார் பற்றி இவ்வூர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர் மல்லிகைத் தீவு எனும் முன்பைய பெரு நிலப் பரப்போடு அவர் நினைவுகள் சிறப்புப் பெறுகின்றன.இன்று மல்லிகைத் தீவு சிறு சிறு ஊர்களாக மாறிய சூழ் நிலமைகளும் கவனம் கொள்ளப் பட வேண்டியதே.

இரண்டாயிரம் வருசங்களுக்கு முன் எல்லாளனது சோழப் படையினர் மல்லிகைத் தீவின் வழியே மணலாற்றை கடந்து பொலநறுவை வழியாக அனுராத புரம் சென்றதாக ஒரு கதையுள்ளதையும் நாம் மல்லிகைத் தீவோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மல்லிகைத் தீவு சமூகத்தினர் பல தனித்துவ மரபுகளை கொண்டுள்ளனர் தங்கள் அடையாளமாக மாடுகளுக்கு குறி சுடும் போது மேழி சுளி,தாமரைப் பூ ஆகியவற்றின் மூலம் தமக்கான பண்பாட்டு வாழ்வியல் அடையாளமாக கொள்கின்றனர்.

இன வன் செயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும் இன்று மீண்டெழுந்து பாரம்பரிய பெருமைகளையும் பண்பாடையும் பேணி வருவதில் முன்னுதாரணமான ஒரு கிராமமாக எழுச்சி பெறுகிறது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி