வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

பாலபோதினி

பாலபோதினி
நாம் அரிவரி வகுப்ப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தபோது அடிப்படை பாடப் புத்தகமாய் எங்கள் தமிழ் அறிவுக்கான கருவூலமாக அமைந்தது பால போதினி புத்தகமே.வண்ணப் படங்களும் வடிவான அச்சும் எம் கண்ணையும் சிந்தையயயும் கவர்ந்த புத்தகங்கள் .நான் களைப்பின்றி அந்த புத்தகங்களை அப்படியே பாடமாக்கி விடுவேன் முதல் பக்கமிருந்து கடைசி பக்கம் வரை முழுவதும் எனக்கு மனப் பாடமாகி விடும் .கேள்விகள் என்னிடம் இருக்காது பதில்கள் மட்டுமே என்னிடம் இருக்கும்.
தேசிக வினாயகம் பிள்ளையின் பாடல்கள் பால போதினியிந் வழியே வந்த அருங்கொடை எமக்கு
"அருணன் உதித்தனன்; அம்புஜம் விண்டது;
அளிகளும் மொய்த்தன; பாராய்!
அம்மா! நீ எழுந்தோடி வாராய்!
பசிய புல் நுனியில் பதித்தவெண் முத்தமோ?
பனித்துளி தானோ? நீ பாராய்?
பைங்கிளி! எழுந்தோடி வாராய்!
பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று;
பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
பொன்னே! நீ எழுந்தோடி வாராய்!
காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
கனியுதிர் காவினைப் பாராய்!
கண்ணே! நீ எழுந்தோடி வாராய்!
காக்காய்
காக்காய்! காக்காய்! பறந்து வா;
கண்ணுக்கு மை கொண்டு வா.
கோழீ! கோழீ! கூவி வா;
குழந்தைக்குப் பூக் கொண்டு வா;
வெள்ளைப் பசுவே! விரைந்து வா;
பிள்ளைக்குப் பால் கொண்டு வா.
என மனமெங்கும் நிறைத்த பாடல்கள்.மாலைக் காட்சி காலைக் காட்சி முதலான கட்டுரைகள் என வனப்பையும் வாழ்வையும் சொல்லித் தந்தன.
கந்தசாமி நல்ல சிறுவன் என்ற கதை அவ்வையின் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா என்ற கதைகள் பாலபோதினியில் நாம் படித்தவை .
கவிமணியின் இந்தப் பாடலும் பால போதினியே தந்தது.
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளை பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை
நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளை பசு - மடி
முட்டிக் குடுக்குது கன்றுக்குட்டி "
சோமசுந்தரப் புலவரின் பாடல்களும் பாலபோதினியின் வழியே வந்தவைதான்
"கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே"





இந்த பாடல் வரிகளைப் படித்து விட்டு பள்ளிக்கூடம் விட்டுப் போகும் போது சேனையூரில் போயிலைத் தோட்டங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வெருளிப் பொம்மைகளைப் பார்த்து ரசித்த அனுபவம் பால போதினி வழியே வந்தது எமக்கு.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை பாடலைப் படித்து விட்டு வந்து அம்மாவை கூழும் கொழுக்கட்டையும் செய்து தா என அடம் பிடித்த அந்த நாட்கள் பாலபோதினி தந்ததே.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
இன்று போல் இலவச புத்தகம் எங்களுக்கில்லை அப்புச்சியின் உழைப்பில் கஸ்ரப் பட்டு வாங்கும் புதிய பால போதினி புத்தகம் இப்போதும் மணக்கிறது.புதிய புத்தகத்தை அதன் நடுப் பக்கத்தை மோர்ந்து பார்க்கும் சுவையே தனி.இன்னமும் பாலபோதினி என்னுள் இனிய வாசத்துடன்.
பாலபோதினியோடு சேர்ந்து சூழல் என்கிற புத்தகமும் உலகை நம் முன் கொண்டு வந்த அறிவொளி அது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி