வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

சேனையூர் அம்மானை



6சேனையூர் அம்மானை

எங்கள் ஊரெல்லாம் இனிய தமிழ் பூச்சூடும்
பொங்கும் அழகெல்லாம் பூதலத்தே கூடி வரும்
தெங்கும் பலாவும் சேர்ந்திங்கு ஆட்சி செய்யும்
மங்காப் புகழ் படைத்த மருதடிச் சோலை கொள்ளும்
ஆடக சவுந்தரியும் ஆதரித்து நின்றவூராம்
கோடி முறை நாம் பாடும் சேனையூரே அம்மானாய்

கண்சுமந்த காதல் மகளிர் கொண்டாடும்
தண்சுமந்த நிலம் கொண்ட நீராடும் பெரும் துறைகள்
விண் சுமந்த நிலவாடும் நெடு நீரும்
கல் சுமந்த குன்றுகளும்
நெல் சுமந்து கடும் கோடையானாலும் விளை நிலங்கள்
பொன் சுமந்த சேனையூரை பாடுதுங்காண் அம்மானாய்

ஏரால் நிலம் பிளந்து இடுகின்ற வயலெல்லாம்
தேர் போல விளைகிறது சென்னெல் நிலம் பாய்ந்து
வேர் கொண்டு கலை வாழும் சேனையூரில்
பேர் சொல்லும் மத்திய கல்லூரி கல்விக் கூடம்
பாரெங்கும் புகழ் பரப்பும் எல்லோர்க்கும் ஒளியேற்றும்
தங்க நிகர் கல்லூரி தான் போற்றி பாடுதுங்காண் அம்மானாய்

மந்தி வனம் பாயும் சிந்திப் பழம் சொரியும்
அந்தி வெய்யில் வந்து அழகு காட்டும் அம்மானை
குந்திஇருந்து குறி சொல்லும் அணில் கூட்டம்
வந்த மயிலாடும் குயில் பாடும் அம்மானை
சரவண்ட மரங்கள் சளிந்து பூத்திருக்கும்
இரவு வண்டுகள் இசை கூறும் அம்மானை
தாமரை அல்லி தண்ணீரில் அழகு காட்டி
ஆவாரையோடு அழகூரும் அம்மானை

பெருநெடும் வரலாறு முது தமிழ் குடி கொண்டோம் அம்மானை!
நெரு நெல் நீள்கரை மாவலியாள் புகழ் கண்டோம் அம்மானை!
வரும் காலம் எல்லாம் நம்மவர்கள் கல்விக்காய் உயர் ஒளியாய் அமைந்திட்ட
ஒப்பரிய சேனையூர் மத்திய கல்லூரியயை போற்றுவோம் அம்மானை!
கரை தாண்டி கடல் நீளும் களியாறு சுளியோடும்
வெருகோடு சேம்பும் வெண் முள்ளி தானும்அருகோடு அழகூட்டும் அம்மானை!
உருவாடும் வீரபத்திரர் கோயில் கொண்டோம் அம்மானை!
தெருவெல்லாம் பூ மணக்கும் சேனையூரைப் பாடுகின்றோம் அம்மானை



சிறுதின்னி பூத்திருக்கும் செம்பன்னை பழுத்திருக்கும்
கரு முல்லை வாசத்தொடு களித்திருப்போம் அம்மானை
பெரு நெருஞ்சி காடழித்து சிறு நெருஞ்சி அழகு கண்டு
கொவ்வை பழம் சுவைத்து கொண்டாடுவோம் அம்மானை
அல்லக் கிழங்கு கிண்டி கவலக் கொடி கிழித்து
காட்டின் அமுதுண்டு கடந்து நிற்போம் அம்மானை
பாட்டுடைத்த எங்களூர் பண் படைத்து நின்றவூர்
சோறுடைத்து பெருமை கொண்ட சேனயூரே அம்மானை

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி