வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

கதிரித்தம்பி ஐயா கடையடி

கதிரித்தம்பி ஐயா கடையடி

சேனையூரிலிருந்து கட்டைபறிச்சான் வழியாக வெளியூர்களுக்கு பிரயாணம் செய்ய போகும் போது கதிரித்தம்பி ஐயா கடைய கடக்காம போக முடியாது அந்த நாளில் தில்லங்கேணிக்கூடாக ஒரு வழி இடி மண் துறை வழிப் பயணத்துக்கு துணை போனாலும் பின்னாளில் அது தூர்ந்து போன வரலாறுதான்.
மூதூர் கிழக்கு மக்கள் வெளியூர் போகும் போதும் சரி வரும் போதும் சரி கதிரித்தம்பி ஐயா கடையில ஒரு தரிப்பிடம் போட்டே செல்வது வழக்கம்.அது கட்டபறிச்சான் சந்தி என இருந்தாலும் கதிரித்தம்பி ஐயா கட சந்தி என்பதே பெரு வழக்காயிருந்தது.
அதிகாலை ஐந்து மணிக்கே அந்த இடம் களைகட்ட தொடங்கிவிடும் ஐயா குடு குடு என்று சொல்லிக் கொண்டு ரீ அடிக்கிற சத்தம் கேட்க தொடங்கினால் இரவு எட்டு மணிவரை ஓயாது .ஐயா சுறு சுறுப்புக்கு சொந்தக் காரர் கன நாளைக்கு முதல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து வந்த அவர் இங்கேயே கலியாணம் முடித்து வாழ்ந்த வாழ்வு.
கடை ஏதோ ஓலைக் கொட்டில்தான் ஆனால் அதுக்கிருந்த செல்வாக்கும் ஐயாவின் வியாபார நேர்மையும் அவர் கை பக்குவ சுவையும் அவரது கடைக்கு ஒரு தனி மதிப்பு எப்போதும் இருந்தது அய்யா கடையில் சாப்பிடும் அந்த பணிசும் ரீயும் வாழ்வில் எங்கு சென்றாலும் கிடைக்காத சுவை.
காலையில் புட்டு அப்பம் இடியப்பம் தோசை எல்லாம் கிடைக்கும் தோசையும் சம்பலும் அய்யா கடையில் விசேசம் அதுக்காகவே ஊருக்குள் இருந்து சாப்பிட போவோர் பலர்.அந்த நாளில் எங்கள் ஊரில் மூன்று கடைகள்தான் தேத்தண்ணிக் கடைகள்.ஒன்று சேனையூர் பிள்ளையார் கோயிலடியில் இருந்த சிங்கள மாமாட கட நன்னாரி தேத்தண்ணிக்கு பேர் போனது நாங்கள் நன்னாரி வேர் புடுங்கி குடுத்து ரஸ்க் வாங்கிச் சாப்பிடுவம்.அடுத்தது கோணாமலையர்ர கட கட்டைபறிச்சான் பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில இருந்தது.பெரிய கட கதிரித்தம்பி அய்யாட கடதான்.
விடியச் சாமம் மூதூரில இருந்து முஸ்லிம் ஆக்கள் கொள்ளி எடுக்கிறதுக்காக ஒவ்வொரு நாளும் ஒரு பத்துப் பதினைஞ்சு வண்டில்களுக்கு குறையாமல் வந்து போகும் அனேகமா எல்லா வண்டில்களும் அய்யா கடையில் இறங்கி பணிஸ் வாழப்பழம் ரீ குடிச்சுத்தான் போகும்.அய்யா கடன் கொடுக்கிறதில கெட்டிக்காரர்.திருப்பி கேட்டு வாங்க மாட்டார் கொடுத்தால் கண்டு கொள்வார் ஆனால் ரீ அடிக்கிறதிலேயே குறிப்பால் கடனை வசூலிக்கும் திறன் அவரிடமிருந்தது.
ஐயாவுக்கு எப்போதும் கலகலப்பும் நகைச்சுவையும் சொந்தம் குழந்தைப் பிள்ளைகளிடம் பெரும் அன்பு கொண்டவர் .அவர்கள் அழுதால் பிராக்காட்டி அழுகையை நிறுத்தி மகிழ்ச்சிப் படுத்துவார்.
அவர் கடை தோசையும் சம்பலும் வடையும் ஊரவரிடமும் பயணிகளிடமும் மிகவும் பிரசித்தமானது.அது சாப்பிடுவதற்காக தேடி கடைக்கு வருபவர்கள் அதிகம்.வருமானம் அன்று அதிகமா கிடைத்தால் நல்ல உற்சாகத்தில் பாட்டுப் பாடி குடு குடு என கடைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.அவர் போடும் ரின் பால் ரீ சுவையின் சிகரத்தை தொட்டு நிக்கும்.தனி ஒருவனாகவே எல்லா காரியங்களையும் செய்து வருவார்.
கடை அவர் ஆரம்பித்த போது அந்த இடத்தில் கடைகளே இல்லை ஆனால் காலப் போக்கில் அந்த இடம் வியாபார கேந்திர இடமாக மாறியது முன்னால் ஒரு சைக்கிள் கட,பக்கத்தில் பூசாரியார் வைத்தியர் அவர்களின் பலசரக்கு கடை,அதை அடுத்து ரெயிலர் ராசனின் தையல் கடை என அந்த இடம் எப்போதும் சனத்துக்கு குறைவில்லாத இடமாய் மாறியிருந்தது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி