வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday 20 March 2018

மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும் இன்றய பின்னேரச் சாப்பாடு

மரவள்ளிக் கிழங்கும் ஏழ்மையும்
இன்றய பின்னேரச் சாப்பாடு


இன்று என் பின்னேரச் சாப்பாடு இங்கு சினெக் என்று அழைப்பர் ஆனால் ஒரு காலத்தில் ஒரு நேர சாப்பாடாக மரவள்ளிக் கிழங்கு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்த நாட்களும் உண்டு.
வறுமை வாட்டிய நாட்கள் பல அப்போது செட்டியாவெளியில்தான் மரவள்ளிச் சேனைகள் இருந்தன .சாப்பாட்டுக்கு கஸ்ரமான பொழுதுகளில் இந்த மரவள்ளிச் சேனைகளுக்கு சென்றிருக்கிறேன் சில நாட்களில் கடனுக்கு தரமாட்டோம் என சில சேனைக்காரர் மறுத்த போது வெறும் கைகளுடன் வந்த நாட்களும் உண்டு அப்படி பல இரவுகள் பட்டினியாய் இருந்த நாட்களும் உண்டு.காலம் எவ்வளவு கொடியது வறுமையும் அதனுடன் இணைந்த பசியும் பல நாட்கள் ஒரு நேர சாப்பாடு கூட கிடைக்காமல் பட்டினியாய் பள்ளிக்கு போன நாட்களில் மரவள்ளிக் கிழங்கே துணை நிற்கும். அத்தோடு சோழன் கதிரும் ஏழைகளின் ஒரு நேர உணவு வசதியானவர்களுக்கு அது ஒரு இடை நேர சாப்பாடு.
கடந்து வந்த ஆண்டுகளில் நாங்கள் கற்சுனையடியில் ஒரு ஐந்தேக்கர் சேனை வெட்டி அப்புச்சி அதில் மரவள்ளியும் சோழனும் சேனைப் பயிர்களும் செய்தார் பஞ்சமில்லாமல் சாப்பாட்டுக்கு குறைவில்லை ஒன்றில்லாவிட்டால் ஒன்று.அந்த நாட்களில் ஒரு கிலோ மரவள்ளிக் கிழங்கு முப்பத்தைந்து சதம் இது 1975 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலம். அப்புச்சி திருகோணமலைக்கு லோஞ்சில் மூட்டை கணக்கில் கொண்டு சென்று விற்று வரும் பணத்தில் வாழ்க்கை ஓடும் .
சில வேளைகளில் மரவள்ளிக்கிழங்கு சேனகளில் கிழக்கு புடுங்கும் போது அவற்றை மரத்தில் இருந்து பிரித்து வெட்டிக் கொடுத்தால் மிஞ்சும் தூழ் கிழங்கை இலவசமாக தருவர் அது எங்கள் வயிற்றுக்கு ஒரு நேர உணவாக மாறிய கதைகளும் உண்டு.
எங்கள் சேனை எப்போதும் பலருக்கு இலவசமாக மரவள்ளிக் கிழங்கு கொடுக்கும் கொடை நிலமாக இருந்தது பலர் கடனுக்கு வந்து கேட்கும் போது அப்புச்சி மறுக்காமல் தாராளமாக கொடுப்பார் எத்தனையோ பேர் எங்கள் சேனையால் பசி ஆறினர்.மரவள்ளியும் சோழனும் வெண்டியும் பூசணியும் பயத்தையும் மற்றும் சிறு பயிர்களும் தாராளமாகவே விளைந்ததது.
மரவள்ளிக் கிழங்கில் அம்மா விதம் விதமாக சாப்பாடு செய்வார்.
மரவள்ளிக் கிழங்கு புட்டு
மரவள்ளிக் கிழங்கில் பால் கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு வடை
மரவள்ளிக் கிழங்கு பிரட்டல்
மரவள்ளிக் கிழங்கை வெட்டி சீவி காய வைத்து அதை மாவாக இடித்து ரொட்டி புட்டு என எங்கள் வாழ்வில்
பசி போக்கி பல்லுயிர் ஓம்பிய மரவள்ளி.
மட்டக்களப்பு வந்தபின் மரவள்ளிக் கிழங்கு பொரியல் .பெரிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் கொச்சிக்காய் தூள் கலந்து பொரிப்பது தொட்டுக் கொள்ள கூனி இறாலும் கொச்சிக்காயும் கலந்த சம்பல் தூள் அத்தோடு இலுமிச்சம் பழ சாறும் கலந்து சாப்பிடுதல் வேறு எங்கும் கிடைக்காத சுவை.
கற்சுனயடி பொற்சுனை போல வறுமை எட்டிப் பார்க்காத ஒரு வளமான சேனை இன வன் செயல் காரணமாக அதனை கைவிட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இன்று அந்த நிலம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமில்லாமல் போயிற்று சம்பூர் மீள் குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் எங்கள் சம்மதம் இல்லாமல் சுவிகரித்துக் கொண்டது.
கற்சுனையடி எங்கள் சேனை என் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் சுமந்த நிலம்.
அந்த நினைவுகளுடன் எனது இன்றைய மாலை நேர உணவு மரவள்ளிக் கிழங்கும் பச்ச கொச்சிக்காய் இலுமிச்சம் புளி போட்ட சம்பலும், அம்மா அப்புச்சி தம்பி தங்கச்சி அம்மம்மா என உறவுகள் நினைவுடன் நான் தயாரித்த எனக்குப் பிடித்த உணவு.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி