வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

அப்புச்சி 16 ஆவது ஆண்டு நினைவில்

அப்புச்சி
16 ஆவது ஆண்டு நினைவில்

அப்புச்சி எப்போதும் எனக்குள் மகிழ்ச்சிப் பொழுதுகளை கொண்டு வரும் நினைவுச் சுழி.கனவுகள் தோறும் அவர் வருவார்.கனத்த கதைகளை அவர் சொல்வார்.
அவர் தோள்களில் அமர்ந்து இந்த உலகைப் பார்த்த நாட்கள்.பசுமையாய் என்றும்.
அதிகம் படிக்கவில்லை படித்ததோ இரண்டாம் வகுப்பு ஆனாலும் அவர் தன் அனுபவங்களால் ஆயிரம் அறிவுப் புதையல்கள் அவரிடம் இருந்தன.
முறுக்கேறிய இளமைப் பருவத்தில்அவர் ஒரு சண்டியன்.ஒரு காலத்தில் மூதூர் நகரத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த கிணற்றடிப் பாட்டியோடு மோதி வெற்றி கண்டவர்.
ஒரு பல்துறை ஆற்றலாளன். உடுக்கடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.சேனையூரில் அந்த நாட்களில் நடை பெறும் சித்திரை கொண்டாட்டங்களில்.போர்த் தேங்காய் அடிப்பதில் .அவரை வென்றவர் இல்லை.
அவர் ஒரு சிறந்த பாடகர்.அடிக்கடி ''ஆக்காட்டி ஆக்காட்டி எங்கெங்கே முட்டையிட்டாய்'' பாடலை பாடுவார் ஆனால் பொது வெளியில் தனித்து பாடியதில்லை.பத்தினியம்மன் கோயிலில் குளிர்த்தி பாடும் போது அவர் குரல் தனித்து ஒலிக்கும்.
சேனையூரில் மிகச் சிறந்த கைப் பந்து விளையாடு வீரர்களில் இவரும் ஒருவர்.டாஸ் அடிப்பதில் பேர் போனவர்..
சிறந்த சினிமா ரசிகர் ரி.ஆர்.மகாலிங்கத்தின் ரசிகர்.இதயகீதம் படம் பார்ப்பதற்க்காக தனி வத்தை பிடித்து திருகோணமலை சென்ற கதைகளை எனக்கு சொல்லியிருக்கிறார்.பின்னாளில் அவர் சிவாஜியின் தீவிர ரசிகரானார்.,அவரும் சிவாஜி கணேசனும் பிறந்தது ஒரே ஆண்டு இறந்ததும் ஒரே ஆண்டு.
சேனையூரில் சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் பங்கு கொண்டவர்.சேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் பெரிய அய்யா நடராஜா அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் பல தடவைகள் பெற்றார் ஆசிரியர் சங்க நிர்வாக சபை உறுப்பினராக இருந்து கடமையாற்றியவர்.
சேனையூர் வர்ணகுல பிள்ளையார் ஆலையம் ,சேனையூர் நாகம்மாள் ஆலையமாகியவற்றில் உப தலைவராகவும்.சேனையூர் சிறி கணேசா சன சமூக நிலையம்,சேனையூர் கிராம முன்னேற்ற சங்கம் ,சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து ஊரின் முன்னேற்றத்தில் பங்கு கொண்டவர்.
அந்த நாட்களில் ஒரு தீவிர தமிழரசுக் கட்சி ஆதரவாளர்.
அரசியல் சமூகம் சமயம் என எல்லா தளங்களிலும் தன்னை ஈடு படுத்திய பன்முக ஆற்றல் கொண்ட அப்புச்சியின் நினைவுகளோடு ...

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி