வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

சேனையூர் அந்தாதி



5சேனையூர் அந்தாதி

பனிக்கின்ற காலையில் பகலோன் ஒளி படர
நுனிக் கொம்பும் இனிக்கும் கரும்பின் சுவை போல்
தெறிக்கின்ற பழமும் திகட்டாத சுவையும்-சேர்ந்து
இனிக்கின்ற எங்கள் சேனையூர் புகழ் பரவுதுமே
பரவும் ஆற்றுக் கரையும் படரும் பாலக் கொடியும்
தொடரும் கண்டல் நிலமும் நெடிது நீளும் கண்ணாக் காடும்
தோணித் துடுப்பு உறையும் காணித் துறைகள் காட்சி
நாணிப் பெண்கள் கூடும் சேனையூர் எழில் காட்சி

காட்சியெல்லாம் இங்கு மாட்சி சொல்லும் பாங்கு
பாடுகின்ற வர்ணகுலத்து பெருமையெல்லாம்
நாடுகின்ற வரலாறாய் நாளும் நாளும்
ஏடு சொல்லும் சாட்சிகளோ கூறும் கூறும்
தேடரிய சேனையூரின் மாண்பைக் கேளும் கேளும்

கேட்கின்ற பழைமை நாட்களெல்லாம் நமது
ஆர்க்கின்ற குடி வழியின் பேர் சொல்லி பெருமையுறும்
ஆனையடக்கி பட்டம் கட்டி வேழச் செருக்கு கொண்ட எம்
மீனக் கொடியில் அழகு கண்ட ஞானச் சோலைச் சேனையூரே

சேனையூரும் செந்தமிழும் வானை நிகர்த்த பெரும் புகழாம்
ஏனையோர்க்கும் எல்லோர்க்கும் வழிகாட்டும் பொன்னூராம்
மீகாமத் தொல்குடியின் மேன்மைகளின் வளவூராம்
ஏர்காமம் எனச் சொல்லும் இள நெல்லுக் களஞ்சியமாம்

களஞ்சிய கொட்டகைகள் காலூன்றி நின்ற இடம்
இளைஞர்கள் எழுச்சியிலே எதிரிகளை வென்ற இடம்
வர்ணகுலத்து பிள்ளையாரை வணங்கி நின்றார்
கர்ணக் கொடை போல படைத்திட்டார் நல் அமுது

அமுது கொடுத்து அழகு கொண்ட சேனையூராம்
கரையல் உண்டு களி கொண்ட நல்லூராம்
மடைகள் பல கண்டு மாண்புறுத்தும் பண்பாடு
தடைகள் எவை வரினும் தாண்டிச் செல்லும் கண்கூடு

கூடு கட்டும் பறவையெல்லாம் குதுகலித்து பாட்டுப் பாடும்
நாடும் கவி வாணரெல்லாம் நல்ல செய்யுள் இசைத்து செல்வார்
ஏடெடுத்த புலவரெல்லாம் இங்கிருந்து பயன் சொல்வார்
காடு வயல் சூழும் எங்கள் மகரக் கொடி
மாண்புடையூர்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி