வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday, 7 March 2018

பேராசிரியர் கைலாசபதி நினைவுகள் பேராசிரியர் மறைவின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்

பேராசிரியர் கைலாசபதி நினைவுகள்
பேராசிரியர் மறைவின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்
1975 ஆம் ஆண்டு நான் சேனையூர் மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த வேளை எனக்கு முதன் முதல் அறிமுகமாகிறார் என்னூடைய தமிழ் ஆசான் வ.அ.இராசரெத்தினம் அவர்கள் இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலைத் தந்து வாசிக்கும் படி கூறுகிறார் .அடுத்து பூரணி சஞ்சிகையயை தந்து மாக்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல் எனும் வெங்கட சாமிநாதனின் கட்டுரையயை படிக்கும் படி பணிக்கிறார் .இப்படித்தான் எனக்கு அறிமுகமானார் என் ஆசான்
1977 பல்கலைக் கழக அனுமதி கிடைக்கிறது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் செல்கிறேன் அப்போது யாழ் பல்கலைக் கழகம் யாழ்ப்பாண வளாகமாக இயங்கிய காலம் வளாகத் தலைவராக கைலாசபதி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்.யாழ் பல்கலைக் கழகத்தின் பிதா மகர் அவரே 1974ல் வளாகம் உருவாக முழு மூச்சுடன் செயல் பட்டவர். தன் தீர்க்க தரிசனமான முயற்சியால் தமிழர்களுக்கான ஒரு கலாசாலையின் உருவாக்கம் நிகழ்ந்தது. கலைப்பீட புதிய மாணவர்களுக்கான முதல் அறிமுக கூட்டம் நடை பெறுகிறது ,வளாகத் தலைவர் என்ற அறிமுகத்துடன் அவர் பேசுகிறார் அவர் பேச்சில் கட்டுண்டு போகிறேன் நான் அவர் கண்களில் தெறித்த அறிவொளி என்னை ஆதர்சிக்கிறது.
ஆரம்ப நாட்களில் பல்கலைக்கழகத்தில் எழுதப் படாத நடை முறையாய் இருக்கும் அறிமுக பகிடி வதை எனக்கும் முறைப்படி நடந்து கொண்டிருந்தது ஒரு நாள் பல்கலைக் கழக சிற்றுண்டிச் சாலையில் சிரேஸ்ர மாணவர்கள் என்னை ஒரு மேசையில் ஏறி நின்று சிற்றுண்டிச்சாலை முகாமையாளரை எந்த நல்ல வார்த்தையும் வராமல் தூசணத்தால் ஏசும் படி கூறுகின்றனர் .நான் எனக்குத் தெரிந்த தூசணத்தில் ஏசிக் கொண்டிருக்கிறேன் பலர் படிப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என் முதுகுப் புறத்தில் ஒருவர் வந்து தட்டுகிறார் திரும்பிப் பார்க்கிறென் அது பேராசிரியர் கைலாசபதி.
என்னை அழைத்துக் கொண்டு செல்கிறார் அவர் அலுவலக அறை அங்கு நானும் அவரும் என்ன நடந்தது என விசாரிக்கிறர் நான் நடந்ததை சொல்கிறேன் .பின்னர் என் விபரத்தை கேட்கிறார் நான் விபரிக்கிறேன் என் பாடசாலைத் தமிழ் ஆசான் வ.அ.பற்றி சொல்லி அவர் மாணவன் என்கிறேன் 1977 ஒரு காலைப் பொழுதில் ஆரம்பித்த அந்த அறிமுகம் அவர் இறக்கும் வரை அவர் மாணவனாய் நீண்டது இப்போதும் நான் அவர் மாணவன் நான்.
மாக்சிய ஒளியயை என்னுள் ஆழ விதைத்தவர் அவரே அவரே என் மாக்சிய ஆசான் தமிழை சிறப்புப் பாடமாக கற்பதற்கு ஆர்வத்தை தூண்டியவர்களில் அவரும் ஒருவர் பல வேளைகளில் நான் அவரைப் போலவே என்னைப் பாவித்துக் கொள்வதுண்டு நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளரான பின்பு அவரது படிப்பித்தல் முறைமையயை பின் பற்றத் தொடங்கினேன் .
அவரது விரிவுரைகள் எப்போதும் சுவாரஸ்யம் மிக்கவை .தமிழ் சிறப்பு வகுப்பில் அப்போது நாங்கள் நான்குபேர் நான், குணலட்சுமி (புதுக்குடியிருப்பு செல்லடிபட்டு 2009ல் இறந்து விட்டார்),ரூபி வலன்டீனா(இப்போது கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்)ராஜலட்சுமி (ஆசிரியர் மட்டக்களப்பு)என்னை மாப்பிள என்று செல்லமாக அழைப்பார்.என் மீதான தனித்துவ அக்கறை அவருக்கு எப்போதும் இருந்தது.
என் ரோல் மாடல்களில் ஒருவராக அவர் இருந்தார் அவர் விரிவுரைகள் அவரது அலுவலக அறையிலேயே நடக்கும் சில பாடங்களை அவராலேயே படிப்பிக்க முடியும் மூல பாடத் திறனாய்வு,திரவிட நாகரிகமும் கலாசாரமும்,தொல்கப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல்,நாவல் இலக்கியம்,இலக்கியத் திறனாய்வு, சங்க இலக்கியம் புறநானூறு அவரிடம் கற்றவை. இப்போதும் என்னுள் உறைந்திருக்கும் அவர் விரிவுரைகளும் அந்த பாடங்களும்.
யாழ் பல்கலைக் கழகத்தில் என் தலைமையில் இயங்கிய தமிழியற்கழகத்தின் மூலம் நிழ்த்தப் பட்ட மாதாந்த நிகழ்வுகளில் ஒரு பார்வையாளராக எப்போதும் கலந்து கொள்வார்.அவரே உரையாளராகவும் இருப்பார் .
அப்போது அவர் பற்றி அலை சஞ்சிகையில் மிக மோசமான விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டன அவற்றை வாசித்து நான் மிகவும் கோபப் பட்டதுண்டு அப்படியான சந்தற்பங்களில் நான் அவரை சந்தித்து சேர் இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்பேன் .ஆனால் ஒரு புன்னகையோடு மறுதலிப்பார்.
பல்கலைக் கழகத்தில் எப்போதும் நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை என்ற பாரதி வரிகளை நிஜமாக்கியவர்.மிடுக்கு குறையாத ஒரு கம்பீரம் ஒரு நாளும் குறைந்ததில்லை அவரிடம்.
1981 மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் அவரோடு ஒரு பேராளராக கலந்து கொண்டேன் அது ஒரு அற்புத அனுபவம் அவருக்கு தமிழ் நாட்டில் இருந்த ஆளுமைத் திறன் வெளிப்பட்டது அறிஞர்கள் மத்தியிலும் இலக்கிய காரர்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்கை நான் நேர்முகமாக அறிந்து நெகிழ்ந்து போன பொழுதுகள் அவை .மதுரை கொலிஜ் ஹவுசில் நடை பெற்ற எழுத்தாளர் சந்திப்பு இப்போதும் என்னோடு.மகா நாட்டின் அவர் ஆற்றிய தலமை உரை ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாய் இப்போதும் பார்க்கிறேன்.
1982 பங்குனி மாதம் பட்டமளிப்பு விழா பீடாதிபதியாய் என் பெயரை அவர் முன் மொழிய நான் பட்டச் சான்றிதழை பெறுகிறேன் அன்றும் மிக உற்சாகமாகத்தான் காணப்பட்டார் .பாரதி நூற்றாண்டை அந்த ஆண்டிலேயே சிறப்பாக வழி நடத்துகிறார் ஆனால் அடுத்து வரும் நாட்களில் கடும் சுகயீனம் என்ற செய்தி எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாய் அமைந்தது.
பொலநறுவையில் ஆசிரியப் பணி அங்கிருந்தே கொழும்புக்கு பயணமாகிறேன் வைத்திய சாலையில் நுஹ்மான் சேர் இருந்தார் பின்னர் மங்களம் அக்காவும் வந்து விட்டார் சில நிமிடங்கள் என் ஆசானுடன் உரையாட வாய்ப்பு ஏற்படுகிறது அக்கறையுட விசாரிக்கிறார்.விடைபெறுகிறேன் அதுதான் கடைசி சந்திப்பு என நான் நினைக்கவில்லை.உன் ஊருக்கு வரவேண்டும் என் சந்திக்கும் போதெல்லாம் சொல்லி தான் வாகரைக்கும் வெருகலுக்கும் போன கதை சொல்வார்.
1982 மார்கழி 6ஆம் திகதி வானொலி பேராசிரியரின் மரணச் செய்தியயை அறிவிக்கிறது நான் நிலை குலைந்து போனேன் கொழும்பு நோக்கி பயணிக்கிறேன் என் ஆசானின் உயிரற்ற உடல் மெளனித்து நிக்கிறேன்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி