வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

தோழர் கே.ஏ.ஜி

தோழர் கே.ஏ.ஜி
கே.ஏ.ஜி எனும் நம் தோழர் மறைந்து ஓராண்டாகிறது.ஆனாலும் எல்லாம் நேற்றுப் போலவே எல்லாம் என்னுள்.கடந்த டிசம்பர் மாதம 23ந் திகதி அவரை கடைசியாக சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் பார்க்கிறேன்.என்னை கண்டதும் அவர் என் மகனை விசாரிக்கிறார் நான் சுகமடைந்து விடுவேன் என்கிறார்.விரைவில் லண்டனுக்கும் வருவேன் என்கிறார் அவரது வாழ்தலின் நம்பிக்கை வெளிப் படுகிறது.ஆனாலும் அவர் இருந்த காட்சி நம்பிக்கைகளை தகர்க்கிறது கட்டுப் படுத்த முடியாமல் அழுகை என்னை ஆக்கிரமிக்க என் கைகளைப் பிடித்து பயப்பட வெண்டாம் என்கிறார்.ஆனாலும் என்னுள் ஒரு பதகளிப்பு மறுக்க முடியாதபடி மனதை நிறைக்க அவரிடமிருந்து விடை பெறுகிறேன்.
ஜனவரி 17 அதிகாலை அவரது மரணச் செய்தியோடு,விடிகிறது அதிர்ந்து போனேன் .வெறுமை என்னைச் சூழ செய்வதறியாது செயலற்றுப் போனேன்.கடந்த இருபதாண்டுகளாக என்னோடிருந்த ஒரு உறவு.
ஆசானாய்,நண்பனாய்,தோழனாய்,சகோதரனாய் என் வாழ்வில் கலந்த கே.ஏ.ஜி இன்றில்லை என்பதை இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது.
பல் பரிமாணங்கள் கொண்ட கலைஞர்.அடக்கப் பட்ட ஒரு சமுகத்திலிருந்து வந்து கல்வியியல் துறையில் உயர் பதவிகளை வகித்தவர்.கடைசிவரை தனக்கு ஏதாவது ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தார்.ஆனால் தமிழ் நாட்ட்டின் சமூக அரசியல் சூழ் நிலை அதற்கு வழி விடவில்லை.
அவருடய தன்னானே இசைக்குழு தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் அறியப் பட்டது. இன்று புகழ் பூத்த பலர் அவர் பயிற்சிப் பட்டறையிலிருந்து வெளி வந்தவர்கள்தாம்.முற்போக்கு முகம் கொண்ட நம் கே.ஏ.ஜி அவர் பாடல்கள் கம்யூனிச கொள்கை முளக்கங்களாக ஒலித்த காலங்கள் மறக்கப் பட முடியாதவை.இன்குலாப்பின் மனிசங்கடா பாடல் அவர் குரலில் இன்றும் நம் போராட்ட மனங்களுக்கு உற்சாகம் ஊட்டும் சோம பானம்.நம் மண்ணின் கலைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பெருமை கே.ஏ.ஜிக்கு உண்டு.தமிழ் சினிமா அவரை சரியாக பபன் படுத்தவில்லை.வேலாயி பாடல் எல்லாவற்றையும் கடந்து தனித்து ஒலிக்கும் தமிழ் சினிமா பாடல்.
தமிழ் நாட்டின் மிகச்சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக கே.ஏ.ஜி தன் ஆற்றல்களி உயர்ந்தார்.பாண்டிச்சேரி பல்கலைக்கழக சுவாமி சங்கரதாஸ் நிகழ் கலைப் பள்ளியின் இயக்குனராக,முதன்மையராக கிட்டத்தட்ட 25ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.துடிப்பு மிகு நாடக படைப்பாளிகள் அங்கிருந்து உருவாகியிருக்கிறார்கள்.தலித் அரங்கியல் எனும் புதிய பேசு பொருளின் சொந்தக் காரர் அத்தோடு சேரிப்புறவியல் எனும் புதிய செல் நெறியயையும் அறிமுகப் படுத்தியமை இங்கு குறிப்பிடத் தக்கது.தனித்துவமான நாடக அளிக்கைகள் அவரை மற்றவர்களிலிருந்து வேறு படுத்தி காட்டியது.பலியாடுகள் நாடகம் தமிழ் நாடக வரலாற்றில் புதிய சேதிகளை சொன்னது.அவரது தொடு,கோப்பு ஆகிய நாடகங்களில் நான் நடித்திருந்தேன்.அவரோடு இயங்குவது ஒரு தனித்த அனுபவம்.தன்னானே கலைக் குழுவுடன் தமிழகமெங்கும் பயணித்ததையும் ஒரு கலைஞனாக பங்கு கொண்டதையும் மகிழ்வுடன் இங்கு பதிவிடுகிறேன்.அற்புதமான தருணங்கள் அவை.
உலகத்தமிழாராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளராக அவர் கடமையாற்றிய நாட்களில் அவர் பணி இனொரு பரிமாணம் பெற்றது தமிழ் ஆய்வுலகில் சங்க இலக்கியங்களுக்கு புதிய உரை கண்டார் பத்துப்பாட்டு,பட்டினப்பாலை ஆகியவற்றுக்கான உரைகள் தமிழறிஞர் மத்தியில் முக்கிய கவனம் பெற்றன.
இந்திய அளவில் மட்டுமலாமல் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் அறியப் பட்டவராக இருந்தார்.அமரிக்கா,கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ்,மலேசியா,சிங்கப்பூர் ,இலங்கை என பயணித்து ஆய்வு மகாநாடுகளிலும் விழாக்களிலும் பங்கு பற்றி தன் ஆளுமையயை வெளிப்படுத்தி பெருமை பெற்றவர்.
ஈழம் ஈழத்தமிழர் இவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்.நான் கிழக்குப் பல்கலைக் கழக கலைப் புல முதன்மையராக கடமையாற்றிய போது அவரை அழைத்து பயிலங்குகளையும் கருத்தரங்குகளையும் ,அதிதி விரிவுரைகளையும் இலங்கை மாணவர்களுக்கும் சுவறும் படி செய்தமை இங்கு நினைவு கொள்ளத் தக்கது.
1995ல் முதல் சந்திப்புப்2015 ல் இறுதிச் சந்திப்பு இருபது வருட நட்பு எதைச் சொல்ல நான்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி