வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

சேனையூர்ப் பரணி



3.சேனையூர்ப் பரணி

வாழ்த்து

ஆழி சூழ் உலகனைத்தும் ஆட்சியுடை வெய்யோனே
பொய்க்காத உன் நீட்சி
புவியெங்கும் வெண்சுடராய்
பசுமை ஒளி பரவ பகலவனாய் உன் கருணை
இருளகற்றும் உனை நாம் எப்போதும் வாழ்த்துவமே
வாழி

தொழிலுடை உழவர்கள் சிறக்கவே சிறத்தலில் மகிழ் மழை பெருகவே
நிலம் புகழ் சேனையூர் வாழ்கவே நித்திலம் பவளமும் மிளிர்கவே
பயிர்த் தொழில் எங்கணும் நீள்கவே
பல்லுயிர் ஓம்பி வாழ்கவே
நிலவும் ஒளியுமாய் நீரும் உயிர்ப்புமாய்
உலவும் சேனையூர் உவப்புடன் வாழ்கவே

கடை திறப்பு

கயல்விழி கண்ணுடை மயல் கொளும் மானிடை
துயிலெழும் மாதரே வழித்திரை நீக்கி கடை திறமினோ

புவியளந்திடும் கண்ணினாய் மொழியளந்திடும் இதளினாய்
விழி நீண்டிடும் மதியினாய் தளிர் மலர்க் கபாடம் திறமினோ

கடல் அலையென குழல் அசைந்திடும் நடையிடை அழகே
கலை மேகலை ஒலியிடை உன் பொலி மகிழ் கபாடம் திறமினோ

கூடலில் ஓர் நாள் உன் மென்னிதழ் ஊறிய தேனிடை மகிழ்ந்தே
காதலில் மயங்கிய கண்ணிடை என் கனிமொழி கடை வழி திறமினோ

சேனையூரிடை ஓர் நாள் உன் காலிடை வண்ணச் சுழியிலே
தயங்கிய வேல் விழிப் பாவையே சுவையுறு கபாடம் திறமினோ

மலரின் அழகை முகம் வாங்க விழியின் அழகை மீன் வாங்க
மாயக் காதல் மயக்கம் தரும் மணிக் குமிழ் கபாடம் திறமினோ

கை வளையெல்லாம் களன்று களன்று சதிராட
மெய்யிழையெல்லாம் மெலிந்து மெலிந்து சருகாக
கூடல் கொண்டு குழைந்து குழைந்து இனிதாக
வாடல் நீங்க மென் மடவீர் ஆடற் கபாடம் திறமினோ

காடு பாடியது

விரிந்த குடைபோல் வெளித்தெரியும் சரிந்து பெருத்து உயர்ந்திருக்கும்
சேனையூர்க்கு அரண் சேர்க்கும் பெருமை உறையும் காடு பாடுவமே

கணங்குடா ஒரு காடு கற்சுனையடி மறு காடு
சமுளங்குடா நெடுங்காடு நய்யந்தை கடும் காடு
கிழல் வெளியெங்கும் சுழல் காடு
சம்புக் குளத்தில் படு காடு

வீரையும் சூரையும் காரையும் இங்கு கனி சொரியும்
பாலையும் சேர்ந்திங்கு பழுத்திருக்கும்
சூரையும் கிழாவும் சூழ்ந்திருக்க
தண்ணீர்க் கொடி ஆடி இங்கு நீர் சொரியும்

கூழா பூத்திருக்கும் அனிச்சம் மலர் தான் சொரியும்
பனிச்சம் மரமேறி மந்தி காய் பறித்து சிந்தும் கால் நீளும்

கிண்ண மரங்கள் நெடு நீர் தோறும் பழம் சொரிந்து வாய் விரிக்கும்
கண்ணா மரங்கள் முள்ளிச் செடியை மோர்ந்து நீர் தெறிக்கும்

வாகை மரமெங்கும் பொன் வண்டு கூடு
கட்டும்
குருந்தை மயக்கும் மணம் பரப்பும் ஒதியயை நீண்டு நெடிதுயரும்
வேல முள் கொட்ட விழாத்தி பழம் சொரியும்
வெல்லயும் ஆத்தியும் விளங்கும் நார் தெறிக்கும்

இத்தியும் அத்தியும் இணைந்த ஆலையும் விழுதில் நிலம் பார்க்க
முதிரையொடு குயிலை சாளம்பை கடம்பு
சமுளை கருங்காலி வெட்பாலையொடு விண்ணாங்கும் சேரும்

புன்னையும் பன்னையும் பூச்சூடும் நறுவிலியும்
விண்ணைத் தொடும் இலுப்பையும்
அகன்று விரிந்த அரச மரங்களும்
கனத்து நிக்கும் காட்டுத் தேங்காயும்
எங்கள் காடுகள் இருள வெளி நீளும்

நிரை நீண்ட விராலி கரை தெரியா தாழை
சிவந்திருக்கும் இலந்தை கண் சிமிட்டும் புல்லாந்தி
வேம்பாடங் கொடியும் சிலுந்தான் விழுதும்
தேர்போல பூத்திருக்கும் திருக்கொன்றை மரமும்.

உலுமந்தை நெய்கொட்டை ஊமத்தையோடு
விடத்தலும் வெள் கண்ணாவும்
சடைத்த தவிட்டையும்
தேத்தாவும் சிரிக்கும் சரவண்டையும்
பூத்துக் குலுங்கும் பொன்னாவரையும்
பாவட்டையும் எரிக்கலம் செடியும்
மயில் கொன்றையும் மகிழ மரமும்
எங்கள் சேனையூர் காடு எங்கும் நிறையும்

கோயில் பாடியது

பூதலத்துக் கோயில்களில் புகழுடைத்த எங்கள் கோயில்
சேனையூரின் வர்ண குலத்து பிள்ளை கோயில்.
தேரிழுத்து பெருமை கொண்டு சிதறு தேங்காய் தானுடைத்து
வீறு கொண்ட மீகாமப் பெருமை கொண
வண்ணக் கோயில்

சோறுடைத்த சோழ மன்னன் நாடுடைத்த சேனையூரில்
பாடல் பெறும் மருதேஸ்வரமாய் மனம் மகிழும்
சிவன் கொண்ட அவதாரத்து மகிமை கூறும்
வீர பத்திரப் பெருங்கோயில்

தேவி பாடியது

காவல் கொண்ட தெய்வமதாய்
சம்புக்களி தன்னுறையும்
கொம்புப் பாட்டில் மகிழ்ந்திருக்கும்
குளிர்த்தியாடி கொண்டாடும்
காவிரி தந்த செல்வியாய்
கனக விஜயர் கல் சுமந்த
மதுரை எரித்து மீண்டு வந்த
வல்ல பத்தினி தெய்வம் கண்டோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி