வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

நல்லம்மா ஆத்த

நல்லம்மா ஆத்த
(ஒரு கதை)

ஊர் அல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது எல்லோரும் எங்கேயோ ஓடிக் கொண்டிருந்தார்கள் கால்கள் இடற கண்பட்ட இடமெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை.ஊரில் யாருமே இல்லாத அளவுக்கு வீடுகள் எல்லாம் வெறிச்சோடின ஊழையிடும் நாய்களைத் தவிர வீதியிலும் வீட்டிலும் யாருமே இல்லை நடக்க முடியாத கிழவிகள் கூட ரோட்டில் தட்டுத் தடுமாறி வீழ்ந்து எழுந்து போய்க் கொண்டிருந்தனர் வெறுமையாய்க் கிடந்த வீதியில் நல்லம்மா ஆத்த தனித்தவளாய் வந்து கொண்டிருந்தாள்

ஊரின் மருத்துவிச்சி அவள் இப்போ தொண்ணூறு வயதை அவள் தாண்டியிருப்பாள் .ஊர் இப்போ எவ்வளவோ மாறிப் போச்சு அந்தக் காலத்தில் அவளுக்கு அவ்வளவு மரியாத பிள்ளப் பிறப்பென்றால் கொண்டாட்டம்தான் அவள் வரவுக்கு காத்து கிடக்கும் வீடுகள்.

ஒவ்வொரு சமூகத்திலும் பிள்ளைப் பிறப்பு அந்த நாளில் பெண்களுக்கு மறு பிறப்பு மருத்த்துவிச்சி மாரே அதன் முழுப் பொறுபாய் இருந்தனர்.பல பெண்களின் உயிர் அவர்கள் கைகளிலேயே ஊர்ப் பரியாரியார் வைத்தியம் மருந்து கொடுப்பதற்கு முன் எல்லாப் பணி விடைகளும் மருத்துவிச்சி கையிலேயே இருக்கும்.

நல்லம்மா ஆத்த பார்த்த பிள்ளப் பெறு வீடுகள் எதிலும் அவள் தவறு விடுவதில்லை மிக நேர்த்தியாக காரியமாற்றுவாள் பக்குவம் தெரிந்தவள் ஊரில் பல மருத்துவிச்சி மார் இருந்தாலும் அவளுக்குத்தான் மவுசு அதிகம் பவிசு காட்டாத பண்புள்ள நடத்தை எப்போதுமே அவளுக்கு சொந்தம் என்ன கொஞ்சம் சந்தோசத்தில் மருங்கை நாளிலும் முப்பத்தொன்று வீட்டிலும் சாராயம் குடிப்பாள்.

அந்த நாளில் பிள்ள பிறந்து நாலாம் நாள் செய்வது மருங்கை நெருங்கிய உறவினர்களுடன் பிள்ளை பிறந்த சந்தோசத்தை கொண்டாடும் நிகழ்வு அன்றுதான் சாணைக் கூறை போடுதல் சடங்கு நடக்கும் பிறந்த வீட்டிலேயே தங்கள் மருமகளாக ,மருமகனாக வரித்துக் கொள்ளல்.மருங்கை வீடு சொந்தக் காரர்களால் நிறைந்திருக்கும் மருங்கை வீடென்றால் நல்லம்மா ஆத்தைக்கு கலியாண வீட்டை விட விசேசம் ஒரு பெரிய கடகப் பெட்டி நிறைய அரிசி மா மரக்கறி சாராயப் போத்தல் அத்தோடு பிள்ளப் பெறுவை பழுதில்லாமல் பாத்ததற்காக அன்பளிப்பு பணமும் இருக்கும் .அவள் பணத்துக்காகவோ பொருட்களுக்காகவோ கடமை செய்பவளல்ல தன் தொழிலை உயிராய் மதிப்பவள் .ஆனால் கண்டிப்பானவள்.பிள்ளைப் பேறு பார்ப்பரை ஒரு தவமாய் புனிதமாய் கருதுபவள் அந்த சந்தற்பத்தில் யாரும் அவளோடு பேச முடியாது எல்லோரும் பயந்து நடுங்கும் தருணமாய் அது இருக்கும்.

அவள் செட்டை போட்ட சாமான்களை ஒரு மாதத்துக்கு முதலே ஆயத்தப் படுத்த வேண்டும் பெரிய சுறாக் கருவாடு,நல்லெண்ண,மருந்துத் தூள்,தேன் என அமர்க்களப் படும் ஆயத்தங்கள் எப்போ பிள்ளை பிறக்கும் என்பதை சரியாக கணித்து வைத்திருப்பாள் அவள் சொல்லிய சாமான்களில் ஒன்று குறைந்தாலும் சும்மாயிருக்க மாட்டாள்
 அவள் பிள்ளப் பிறப்பு பார்ப்பது என்பதே மற்றவர்களுக்கு விசித்திர அனுபவம்தான் வயிற்று நோ ஏற்பட்டவுடன் அவளை அழைக்க போனால் அவர்கள் போன நேரத்தை வைத்து ஒரு கணிப்பு சொல்வாள் அது சரியாகத்தான் இருக்கும் சிலவேளைகளில் உடனடியாகவே போய் விடுவாள் .அந்த நாளில் பிள்ள பிறப்பு என்றால் உயிர் போய் உயிர் வரும் மரணப் போராட்டம் இப்போதும் அப்படித்தான் அது எப்போதும் பெண்களுக்கான வலியும் மரணமும் மகிழ்வும் .நல்லம்மா யாரையும் பக்கத்தில் அண்ட விட மாட்டாள் அந்த பெண்ணின் தாய் அல்லது பேத்திக்காரி என ஓரிருவரைத் தவிர கிட்ட நெருங்க முடியாது வலி எடுத்தது என்று அறிந்தால் சொந்த காரப் பெண்கள் எல்லாம் வீட்டில் கூடி விடுவர் நல்லம்மா ஆத்த வந்தால் எல்லோரையும் ஒரு முறப்பு பார்வ பாத்திற்றுதான் வீட்டுக்குள்ள போவாள் எல்லோரும் வெளியில் காத்திருக்க கச்சிதமா பார்த்து முடிக்கும் திறன் நல்லம்மாவின் தனித்த திறன்.

பொம்பள பிள்ளை பிறந்தால் வீட்டு கூரைக்கு மேலால் வாருவக் கட்டை எறிவதும் ஆம்பிள பிள்ளை பிறந்தால் உலக்கை எறிவதும் ஊர் வளக்கமாயிருந்தது ஆனால் நல்லம்மாவுக்கு இதில் உடன் பாடில்லை ஆனாலும் பேசாமல் இருந்து விடுவாள் .எப்போதும் அவள் காளியப்பு பரியாரியாரைத்தான் ஏதும் பொறுப்பான சந்தற்பத்துக்கு கூப்பிடுவாள் அவர் மீது அபார நம்பிக்கை ஊரவருக்கும்தான்.

நல்லம்மா ஆத்த எப்போதுமே மேல் சட்ட போட்டது கிடையாது பதினாறு முளச் சேலையயை பின் கொய்த்கவம் வைத்து தாள இறக்கி கட்டியிருப்பாள் காதில் நீண்ட பெரிய குண்டு போலான தோடு ஆடிக் கொண்டே இருக்கும் காதுச் சோணையின் மேல் பக்கமாக மூன்று நான்கு வளையங்கள் போட்டிருப்பாள் கல்லு மூக்குத்தியும் கழுத்தில் கொஞ்சம் மொத்தமான சங்கிலியும் எப்போதும் இருக்கும்.

நல்லம்மா ஆத்த எப்போதுமே சும்மா இருந்ததில்ல தென்னை மரங்கள் நிறைந்த அவள் வளவு கூட்டி துப்பரவாக இருக்கும் பிலாப் பழக் காலம் அவள் வளவில் இருக்கும் கூழன் பிலா,செம்பக வரிக்கன் என பழுத்து நிக்கும்.சட்டி பானை செய்வதில் அவள் கை தேர்ந்தவள் .நன்னித் துறைய கடந்து உப்பளக் கரைச்சைக்கு போய் களி மண் வெட்டி தலையில் சுமந்து வந்து களியப் பதப் படுத்தி அழகாய் அரிக்கஞ் சட்டி,குரச்சி,கறிச் சட்டி,கறி மூடி,உல முட்டி,சோத்துப் பானை என அவள் கை வண்ணம் மண்ணில் புனைந்து நிக்கும் .அவள் செய்யும் அரிக்கம் சட்டிக்கு சரியான மவுசு சொல்லி வைத்து வாங்குவர்.ஏனெனில் அவள் அரிக்கம் சட்டியில் வைக்கும் வரிகள் அரிசி அரிக்கும் போது கல் சோத்தோடு சென்று விடாத பக்குவம் அவள் அரிக்கஞ் சட்டிக்கு உண்டு.அரிக்கஞ் சட்டி ஆத்த என்ற பட்டப் பெயரும் அவளுக்குண்டு.தானே சட்டி பானைகளை பதத்துக்கு சுட்டெடுப்பாள் செக்கச் செவேர் என இருக்கும் அவள் செய்யும் மட் பாண்டம் வாங்க பக்கத்து ஊரிலிருந்தும் ஆக்கள் வருவர்.

கலியாணம் முடித்து கொஞ்ச நாளிலேயே அவள் புருசன் பேயடிச்சு இறந்து போனதாக ஒரு கத அதுக்கு பிறகு அவள் இத்தன வயசு வர தனிக் கட்டையாத்தான் சீவியம்

 ஆத்த நல்லா வெத்தில போடுவா வாய் சிவக்க சிவக்க எப்போதும் கொடுப்புக்குள் குதப்பிய படி இருப்பா வீட்டில வெத்திலக் கொடிக்கு சிறாம்பி போட்டு வளர்த்து வச்சிருப்பா அவசரத்துக்கு ஆத்தையிட்டத்தான் பக்கத்து ஆக்கள் ஓடி வருவாங்க ஊரில் வெத்தில தட்டமும் வெத்தில போடுதலும் ஒரு கலாசாரமாய் நீண்ட பாரம்பரியம் உண்டு.வீட்டுக்கு போகிறவர்களை வெத்துல தட்டம் கொடுத்து வரவேற்பது ஒரு மரபு.கலியாண வீடு,செத்த வீடு,என் கொம்டாட்டத்திலும் துக்கத்திலும் வெத்தில தட்டம் ஒரு பண்பாட்டு படையல்தான்.

ஆத்த பாண்டி விளையாடுவதில் கெட்டிக்காரி வீட்டில் செம்பிலான பாண்டி விளையாட்டு சட்டகம் ஒன்று அவளிடம் இருந்தது நிலவு காலத்தில் பக்கத்து வீட்டுப் பெண்கள் ஆத்தையின் முத்தத்திலிருந்து பாண்டி விளையாடுவது பார்க்க சலிக்காத காட்சிகள்.பாண்டி விளையாட்டுக்கு புளியங் கொட்டையும் ,முள் முருக்கங் கொட்டையும் கட்டுப் பெட்டிகளில் சேர்த்து வைத்திருப்பாள் ஆத்த தான் விளையாடும் போது மட்டும் நல்ல பளிங்கு போல உள்ள முள் முருக்கங் கொட்டைய எடுப்பாள்.கை வைத்தியமும் யெரியும் அவளுக்கு.

வெள்ளாம வெட்டு காலம் என்றால் அவளுக்கு கொண்டாட்டம்தான் அவள் செய்யும் சேவைக்கு நன்றிக் கடனாக வயல் களம் முடிஞ்சு வரும் பலர் ஒரு பூசல் நெல்லு கொடுத்து விட்டு போவர் அவளது வருசம் முழுவதுக்குமான சாப்பாட்டுக்கு அது போதும்.எப்போதும் சாப்பாட்டுக்கு பஞ்சம் இருந்ததில்லை அவளுக்கு.

வர்ணகுலப் பிள்ளையார் கோயில் திருவிழா வந்தால் அவள் சட்டி பானக் கடையும் ஒரு மூலையில இருக்கும் விரதமிருக்கிற ஆக்கள் அவளிட்டத்தான் புது சட்டி பான வாங்குவர்.சாமி தூக்கும் வரைதான் அவள் கட இருக்கும் பிறகு கடைய கட்டி வச்சிற்று சாமி கும்பிட போயிருவாள்.

ஊரூக்கோர் உபகாரி அவள் பிள்ளப் பெறு பார்த்ததோடு தன் கடம முடிஞ்சுது என்று பாராமல் இருப்பவள் அல்ல அவள் அடிக்கடி போய் தானே அம்மியில் அரைச்சு மிளகு தண்ணி காச்சி கொடுப்பாள் அத்தோடு சுறாக் கருவாடட்டு கிச்சடி நல்லெண்ண போட்டு செய்வாள் அவள்ர கிச்சடி ஏழுருக்கு அங்கால மணக்கும் என்று சொல்வார்கள்

 அவள் அம்மியில் மிளகுதண்ணிக் குழம்புக்கு அம்மியில் கொச்சிக்காய் கொறுக்காய் மல்லி மிளகு சீரகம் மஞ்சள் மல்லி எல்லாவற்றையும் வைத்து அரைத்து ஒரி உருண்டை உருட்டி குரச்சியில் வைக்கும் போதே நமக்கு வாயூறும் எப்பவும் புள்ளப் பெத்தாக்களுக்கு பச்ச உடம்பு படிஞ்சு வரணும் என்று சொல்லி சொல்லி பால் சுறா மீன் அல்லது செத்தல் மீன் பால் சுரக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் முப்பத்தொன்று முடியும் வரை தொடரும் இந்த உணவு முறை புள்ளப் பெத்த ஆக்கள் மற்ற ஆக்கள் பாக்க சாப்பிடக் கூடாது என்ற பக்குவம் சொல்லி வைத்து கண் படாம இருக்கணும் என்ற நம்பிக்கையும் இதனோடு இணைந்த சொல்லாடல்தான்.

அவள் சமையல் சாதாரண நாட்களிலும் விசேடித்த சுவை கொண்டது கறி இல்லாவிட்டால் ஆத்துக்குள்ள கண்ணா காட்டுக்குள்ள புகுந்து இறால் கட்டி வந்து களனித் தண்ணியில பீக்க்கங் காயும் போட்டு ஒரு சொதி வைத்தால் மூன்று வட்டில் சோறு சாப்பிடலாம் அத்தனை சுவை அதுக்கு.

ஊரே அவளை கொண்டாடியது ஒரு காலம் காலம் செல்ல அவளின் தேவை குறைந்து மூதூரில் வைத்திய சாலையும் வந்து கட்டைபறிச்சான் துறைக்கு பாதையும் போட்ட பின்பு ஆசுப்பத்திரிக்கு ஆக்கள் போகத் தொடங்கினர் கொஞ்சம் நோ ஏற்பட்டாலேயே வண்டிலப் பூட்டிக் கொண்டு பெரும் பாலானோர் ஆசுப் பத்திரிய அணுகினர் நல்லம்மாவின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பித்தது ஆனாலும் ஆசுப்பத்திரிக்கு போனாலும் இவள் துணை தேவைப் பட்டது என்றாலும் பழய இடம் இவளுக்கு கிடைக்கவில்லை அது அவளுக்கு பெரும் கவலை கால மாற்றம் நம் பண்பாட்டின் வழி வந்த வைத்திய முறைகளை அழித்து போனதில் நல்லம்மா ஆத்தையும் அடிபட்டுப் போனாள்.

 அவள் முக்கியத்துவம் ஊரில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது குடும்பமுமில்ல குட்டியுமில்ல கவலைப் படாதவளாய் கிடைப்பதை வைத்து வாழ்க்கையயை ஓட்டினாள்.கொஞ்சம் சேமிப்பும் இருந்ததால் பெரிய கஸ்ரமில்லாமல் வாழ்க்கை ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும் .

தன் வீட்டுத் தெருவெங்கும் தேடினாள் யாரும் இல்லை பக்கத்து வீட்டு ஆக்கள கூப்பிட்டாள் ஒருவருமில்ல வழமையா இப்படியான நாட்களில் யார்ர வண்டில்லயாவது தொத்திருவாள்.ஆனா இண்டைக்கு கொஞ்சம் கண்ணயர்ந்திற்றாள் அதால ஊர விட்டு ஓடின ஆக்கள் அவசரத்திலையும் பயத்திலயும் மறந்து போய்ற்றாங்க .

வயதும் தளர்ச்சியும் அவள் மனதுக்கு ஏற்றாற் போல ஒத்துழைக்க மறுத்த நிலையில் நடக்க முடியாதவளாய் ஒரு இடத்தில் போக்கில் குந்தி மூச்சு வாங்க ப்யமும் பற்றிக் கொள்ள

ம்ம்ம்...போகிற வயதுதான் என சலித்துக் கொண்டு ஆமி நம்மள என்ன செய்யப் போறான் என்று நினைத்தவளாய் திரும்பி தன் வீட்டுக்கு போக நடந்தாள் ஆனாலும் மனம் பயத்தை உரத்துச் சொல்ல எண்ணத்த கை விட்டு பைய பைய ஆத்துக்கு அங்கால போனா போதும் ஆக்கள் பொண்டுகள் சேன ,பால முனப் பக்கம்தான் போயிருப்பாங்க என்று எண்ணியவளாய் புளியடித் துறையயை நோக்கி சென்றாள் கொஞ்சம் இருட்டுப் பட்டு போயிற்று எல்லார்ர வீட்டுக் கடப்புகளும் சிக்காரா கட்டப் பட்டிருக்க நாய்கள் மாத்திரம் ஆத்தைய பார்த்து குலைக்க கூட்டு ஓலமாய் நாய்களின் சத்தம் அவளுக்கு மேலும் மேலும் பயத்தை உறைக்க சொல்லியது.

நல்லம்மா ஆத்தை துறையடிக்கு கிட்ட போய்ற்றாள் வவ்வால் தூங்கி பக்கமிருந்து ஆமிக்காரன்கள் கூட்டமாய் வெடி வைத்துக் கொண்டு வருவதைக் கண்டாள் எத்தனையோ உயிர்களை தன் கையால் அழைந்து புதிய உயிர்களை இந்த உலகத்துக்கு அறிமுகப் படுத்தியவள் அல்லவா அவள் இப்போ தன் உயிருக்காக ஏங்கும் தருணமாய் அவள் கண் முன்னாலேயே குலைத்து போன நாய்கள் சுருண்டு வீழ்ந்தன பக்கத்தில் போன அவள் வளர்த்த செல்லப் பசுவும் கதறிக் கொண்டு சாய்ந்த அந்த நேரம் உயிர்ப் பயம் உந்தித் தள்ள போடியார் வீட்டு இரும்புக் கதவு கீழ் இடுக்கால் வளவுக்குள் புகுந்தாள் சுட்டுக் கொண்டே வந்த ஆமிக்காரன்களின் துப்பாக்கி ரவைகள் நல்லம்மா ஆத்தையின் உடலில் பாய என்ன காபாத்த யாருமில்லையா என்ற அலறலுடன்

நல்லம்மா ஆத்த பலருக்கு உயிர் கொடுத்து தன்னுயிரை தான் உலாவி கால் பதித்த மண்ணில் குருதி கொடுத்து மண்ணோடு வானம் பார்த்து சாய்ந்தாள், அவள் உயிர் கொடுத்த பல்லாயிரம் உயிர்கள் உறைந்து போய் நல்லம்மாவை அம்மா, அம்மா என்று கதறி நின்றார்கள்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி