வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 5 March 2018

சண்டியன் சின்னையர்



சண்டியன் சின்னையர்
(ஒரு கதை)

இளக்கந்தை செல்லும் வழியில் ஆனக்கல் வெளி ஏத்தத்தில் சின்னையரின் வண்டில் மாடு முக்கி முக்கி ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்தது .சின்னையருக்கு இரண்டு பட்டப் பெயர்கள் .வெடிக்கார சின்னையர் அடுத்தது சண்டியர் சின்னையர்.சின்னையரிடமிருந்து பிரிக்க முடியாத விடயங்கள் இரண்டு ஒன்று அவர் மனைவி கண்ணகையம்மா மற்றது அவரது கள்ளத் துவக்கு.அவர் பயணங்களில் துணையாய் வரும் சொந்தங்கள்.
 
வயதேறினாலும் முறுக்கு மாறாத குணமும் தைரியமும் அவருக்கு சொந்தம் காட்டுக்குள் புகுந்தால் ஒரு மானோ மரையோ கொண்டு வராமல் திரும்ப மாட்டார்.

இன்றும் அப்படித்தான் அவர் பயணம் பகல் நேரத்தில் ஊருக்குள் அட்டகாசம் பண்ணும் அவர் மாலையானதும் தன் வண்டில பூட்டி ஊற்றடி கரச்சை கடந்து ஆனகல் வழி ஏற்றத்தால் அவர்ர சேனக்காட்டுக்கு போய் வருவார் சேனக்காடு கற்சுனையயை தாண்டி இறக்கத்தில் இருந்தது எப்போதும் கற்சுனைக்கு தண்ணி குடிக்க வரும் காட்டு மிருகங்கள்தான் அவர்ர இலக்கு. பண்டி சுடுவதற்கு தோட்டாவ செலவளிக்க மாட்டார்.சேனக்காட்டுக்குள்ள நைலோன் கயிறில தடம் வச்சு பிடிச்சு போடுவார்.

புளுகு கத சொல்றதில கெட்டிக் காரன் பெரும் பாலும் வெடிக்குப் போய் மிருகங்கள வேட்டையாடின கதையாத்தான் இருக்கும்.கால்ல வெடிப்பட்ட மரைய திரத்திப் பிடிக்கக்ககுள்ளதான் தன்ர கால் முறிஞ்சதா சொல்வார் அரவாசி உண்மையும் அரவாசி புளுகாயும் அமையும்.

கதைகள இப்படித்தான் தொடங்குவார்

" ஒருமுற இப்படித்தான் கொம்பனாச்சிக் காட்டுக்க வெடிக்குப் போய் வாடி கட்டிற்று பெரிய மர ஒண்டிட காலடியப் பாத்து போய்ற்றிருக்கக்குள்ள பாத்தா முதுகில ஒரு ஆள் சுறண்டிற மாதிரி இருந்திச்சு திரும்பிப் பாத்தா ஒரு பெரிய சிறுத்தப் புலி நான் பயப்படல்ல பயப்பட்டாத்தான் நம்மள புலி கடிக்கும் எனக்கு காளியப்பு பூசாரியார் சொல்லித் தந்த புலி உறுக்கு மந்திரம் ஞாபகத்துக்கு வர அத எடுத்து விட்டன் புலி வந்த வழி தெரியாம ஓடிப் போய்ற்று"

இந்த மாதிரி நூற்றுக் கணக்கான கத அவரிடம் இருக்கும் சளைக்காம வேட்டைக்கு போன கத சொல்லுவார் .கரடி மூக்க கடிச்ச கத,பண்டி பாலப் பழம் புறக்கின கத,தன்ர பொஞ்சாதிக்கு குரங்கு பேன் பாத்த கத,உக்கிளான் வாலறுந்த கத,புலுட்டுமான் புடரியில அடிச்சிற்று ஓடினது என கதைகள் நம் சுவாரஸ்யத்த்தை தூண்டும் வகையில் அமையும்.

அன்றும் அவர் வண்டில் கல்லிறக்கத்தில் கடகடவென ஓடிக் கொண்டிருக்கும் "என்ர மாடுகள் இறக்கத்தில நல்லா ஓடும்" என்று மனைவியோடு பகிடி பண்ணிக் கொண்டிருந்தார்.

வழியில் போவோர் வருவோரிடம் நிப்பாட்டி நிதானித்து கத கேக்கும் பழக்கம் அவருக்கு "வழியில மான் மர காலடிகள பாத்திங்களா" என கேட்டு நாலு புளுகையும் அவிட்டு விட்டு செல்வார் .

சேனக்காட்டுக்கு போக இருட்டாகிடும்
 சின்னையர் சண்டியன் பட்டம் பெறுவதற்கு காரணங்களில் ஒன்று அவருக்கு தெரிந்த தமிழர் விளையாட்டு முறைகள் கை விளையாட்டு,சீனடி,சிலம்படி எல்லாம் அவருக்கு கை வந்த கலை.சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் கோயில் திருவிழா என்றால் அவர் சமுகம் எப்போதும் இருக்கும் அதிலும் அவர்கள் ஏழாம் திருவிழாவில் அவர் கை விளையாட்டுடன் தான் சாமி வாசல்ல இருந்து தூக்கப் படும் ஒவ்வொரு மூலையிலும் அவரது சீனடி சிலம்படி காட்சி மெய் சிலிர்க்க வைக்கும்.பந்தம் கொழுத்தி கம்பு சுழற்றும் போது அவர உடல் காற்றாய் பறக்கும் எட்டாம் திருவிழாவுக்கு கம்பு சுழற்றி தலையில் தேங்காய் உடைக்கும் சோமசுந்தரத்தாருக்கும் இவருக்கும் கடும் போட்டியாய் அமையும் திருவிழாக்கள்.

சின்னையர் ஊர் சண்டியர் மாத்திரமல்ல ஊரைத் தாண்டியும் பெயர் பெற்றவர் ஒரு முறை மூதூர் கிணற்றடிப் பாட்டி சண்டியர்கள அடிச்சி வளத்திற்று வந்தவராம் எண்ட பெயருண்டு.
 சின்னையர் வெடி கட்டுவதிலும் வல்லவர் அந்த நாளில் வெடி மருந்துக்கு பெரும் கட்டுப் பாடு இருந்ததில்லை வகை வகையாய் வெடிப் பொருட்கள் திருவிழா நாட்களில் கொண்டாட்டங்களில் கலியாண வீடுகளுக்கு சின்னையர் செய்யும் வெடிதான் .மூல வெடி ,கட்டுக் குண்டு,என பெரும் சத்தமாய் காது கிழிபடும் வெடி வகை அம்பத்தெட்டு கலவரத்தின் போது வெடிப் பொருட்களோடும் தன்ர துவக்கோட இடிமண் துறையில் காத்திருந்தவராம் சிங்கள ஆக்கள் வந்தா தாக்குவதற்கு.

சின்னயர் தன்ர மாட்ட அவிட்டு வீர மரத்தில கட்டிப் போட்டிற்று சேனக்காட்டு சர வேலியெல்லாம் சரியா இருக்கா எண்டு பாத்திற்று பகல் காவலுக்கு நீண்ட மகன் குணன

"தம்பி எங்கடா இருக்கா பண்டிக்கு வச்ச தடத்த பாத்தியா "

எண்டு கேக்க அவன்
"இல்ல அப்பு நான் வயலுக்க போறன் தண்ணிய கட்டிற்று அப்பிடியே வீட்டுக்கு போறன் " எண்டு சொல்லிற்று வெளிக்கிட்டான்.

துவக்க தோள்ல எடுத்து வச்சிற்று

"நான் குளக்கட்டுப் பக்கம் போய்ற்று வாறன் அப்படியே கொஞ்சம் கானாந்தியும் முறிச்சிற்று குளக் கரையில ஏதும் நிண்டா சுட்டெடுத்திற்று வாறன்"

கண்ணகையம்மா புத்தில நாட்டியிருந்த கொச்சியில கொஞ்சம் காயும் ஆஞ்சி வெங்காயமும் தோண்டி எடுத்திற்று சேனக் காட்டு மாலுக்குள்ள போக வாசல்ல காச்சுப் போய் இருந்த ஒரு பூசணிக்கா பிஞ்ச ஆஞ்சிற்று ஒரு மந்திக் குரங்கு பட்டுப் போய் இருந்த பால மரத்தில பாஞ்சி ஏறி சரவேலியால காட்டுக்குள்ள போய்ற்று.

மாலுக்குள்ள போய் பரண்ல இருந்த சாக்க எடுத்து கீழ விரிக்க வெடிச் சத்தம் கேட்க சரியா இருந்தது.சினையர் என்னத்தையோ சுட்டிற்றார் என மனசுக்குள்ள நினைச்சுக் கொண்டாள்.

கடப்பில யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எட்டிப் பாக்க "சின்னையன் இருக்கானா"
எண்டு கேட்டுக் கொண்டே வெடிக்கார நெடுவல் கனகசிங்கம் வந்திற்றிருந்தார்
"இவர் குளத்துப் பக்கம் போயிருக்கார் கறியேதும் பாக்க வெடிச்வ்சத்தம் கேட்டது இப்ப வந்திருவார் இருங்க " எண்டு சிறாம்பிய காட்ட அவர் மாலுக்கு பக்கத்தில பட்டுப் போன வேல மரத்தடியில நீண்ட கஞ்சா மரத்தில நாலு இலைய அடுப்பு நெருப்பில வாட்ட சின்னையர் கானாந்தி இலக்கறியும் துவக்கு முனையில கொழுவிய காட்டுக் கோழியுமா வந்தார்.
 கண்ணகையம்மா தடல் புடலா சமையல தொடங்கியிருந்தா காட்டுக் கோழி சட்டியில் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தது கானாந்தி கடையலும் ஆயத்தமாயிருந்தது.நெடுவல் கனகசிங்கம் "நான் வாறன் மச்சான் என்ற சேனைக்குள்ள பண்டி வந்து சோழனையெல்லாம் சாய்ச்சுப் போடும் "

என்று சொல்லிக் கொண்டு எழும்பினார்
சின்னையர்"எங்க போறா சாப்பிட்டிற்று போ கொஞ்சம் இரு வாறன் "
என சொல்லிக் கொண்டு மாலுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த புத்தையண்டி இருந்த முதிர மர போறைக்குள்ள ஒளிச்சி வைச்சிருந்த வடி சாராயப் போத்தலை எடுத்து வந்து

"மச்சான் நான் வடிச்சது கொஞ்சமா குடிச்சிற்று சாப்பிட்டிற்று போ"

காட்டுக் கோழி இறச்சிக் கறியும் கானாந்தி கீர கடையலும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு சுவையுடயவை.அதுவும் சேனைக் காட்டுச் சமையலில் அதன் ருசி ஆளை மயக்கும்.
நெடுவல் கனகசிங்கமும் சின்னையரும் சுவைத்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.இருவரும் தங்கள் வெடிக்கு போன வீரப் பிரதாபங்களை பேசிப் பேசி மகிழ்ந்தனர்

சின்னையர் எப்பவும் காலம்பறையில ஊருக்குள்ள போகக்குள்ள மானோ மரையோ அம்பிடாட்டி இரண்டு மூன்று புலுட்டு மானாவது சுட்டுக் கொண்டு போவார் அபூர்வமாகத்தான் அவர் இறச்சி இல்லாம போவார்.

எங்கையாவது வெடிச் சத்தம் காட்டுக்குள்ள கேட்டா உறுக்கு மந்திரம் சொல்லுவார் அந்த மந்திரத்தால் வெடிபட்ட மிருகத்த மந்திரத்தால் மறைச்சிப் போடலாம் என்று அவர்ர நம்பிக்கை.வெடிக்குப் போற ஆக்கள் சின்னயரிட்ட சொல்லிப் போட்டு போவார்கள்" மச்சான் நாங்க வெடிக்கு போறம் உறுக்கி போடாத "
அவரும் தலையாட்டுவார் ஆனா அவர் பழக்கம் மாறாது.

குடிச்சாலும் நிதானம் தப்பாத வெடிகாரன் பெரும் காட்டுக்கு பல நாள் தங்கி வேட்டைக்கு போய் சாக்கு மூட்டையில உப்புக் கண்ட இறைச்சியோட வருவார்.சேனைக்குள்ள இருந்து விடியச் சாமம்தான் வெடிக்கு கிளம்புவார் சின்னையர்.

அன்றும் அப்படித்தான் நல்லா சாப்பிட்டு குடிச்சு படுத்தவர ஒரு நாளும் கேக்காத் சத்தம் எழுப்பியது கண்ண துடச்சிற்று எழும்பியவர் கண்ணகையம்ம அயர்ந்த நித்திரையில் இருந்தத பத்து ரசித்து என்ற ஏத்துக்கும் பாட்டுக்கும் இவள் என்றதால ஈடு கொடுத்து இருக்கிறாள் என்று எண்ணியபடி தன் துவக்க எடுத்து நிறுத்தி மீண்டும் மனைவிய பார்த்தார்.அவள் மீது அளவிடா பிரியம் அவருக்கு வீடு புகுந்து கடத்தி வந்துதான் கண்ணகையம்மைய கலியாணம் முடிச்சவர் .மனைவிக்கு ஏதுமென்றால் தாங்க மாட்டார்
 பண்டிக்கு தடம் வச்சிருந்த சரவேலிப்பக்கம் இருந்துதான் சத்தம் வருது ஆனா இது பண்டியிர சத்தம் இல்லயே சிறுத்தக் குட்டி போல என மனதுக்குள்ள நினைத்தவராக துவக்க தோழ்ல வச்சிற்று எவரெடி டோச் லைட்ட அடிச்சிற்று சேனையில் செழித்து வளர்ந்திருத மரவள்ளி இலகளை விலக்கிக் கொண்டு போக கீழே இருந்த ஒருய் நாட்டுக் கட்ட தடுக்க விழாமல் சுதாகரித்துக் கொண்டு முன்னேறினார்.

ரோச்சடித்துப் தான் வைத்த தடத்தடிக்கு வந்த போது ஒரு வாலிபப் பருவ சிறுத்ததான் மாட்டுப் பட்டிருந்தது.அது கழுத்தை இறுக்காமல் சிறுத்தையின் காலை இறுக்கியிருந்தது நைலோன் கயிற்றை அதனால் கடிக்க முடியவில்லை இரண்டு பின்னங் கால்களும் மாட்டியிருந்தன அதனால் அதை வாயால் கடித்து அதனால் அறுக்க முடியவில்லை.முன் இரண்டு கால்கள் கொண்டு இவர் மீது சிறுதை பாய்ந்தது .

எப்படியாவது இந்த சிறுத்தைய நாம புடிச்சுப் போய் ஊருக்குள்ள புதினம் காட்டணும் .என நினைத்தவராக சிறுத்தையயை உயிரோடு கட்ட முயற்சி எடுத்தார் எப்போதும் சாகசம் புரிவதில் சந்தோசப் படுபவர் தன் வீரப் பிரதாபத்தை சொல்ல இந்த சம்பவம் ஒன்று போதும் என்ற நினைப்பில் எப்போதும் வெடிக்குப் போகும் போது தோழில் மாட்டியிருக்கும் தடித்த மொத்தமான ஆத்தி நார் கயிற்ற சிறுத்தையின் கழுத்துக்கு வீசி இறுக்கி பிறகு வாயக் கட்டி கால்கள கட்டி ஊருக்கு போவம் என்று .கயிற்றைஉ லெக்கு பாத்து எறிய அது அதன் வாய்க்குள்ள போய் கடித்து அறுத்து எறியவும் பின்னங்காலில் இருந்த தம் அறு பட்டு சிறுத்தை இவர் மேல் பாயவும் சர்யாய் இருந்த்தது .

இவர் மீது பாய்ந்த சிறுத்தை சின்னையரின் காலையே பதம் பார்த்தது.பயமறியா சின்னையர் சிறுத்தைய மடக்கிடலாம் என நம்பிக்கை கொண்டு இடுப்பில் சொருகியிருந்த கிறிஸ் கத்திய எடுத்து சிறுத்தையின் கழுத்துக்கு குறிவைத்து குத்த அது சறுகி முன்னங்கால் பக்கம் பாய சொருகிய கத்திய இழுத்து அதன் கழுத்துக்கு நேர குத்தப் போக சிறுத்தை இவர் நெஞ்சை பதம் பார்த்தது கண்ணக........ என்ற பெரும் சத்ததுடன் சிறுத்தையின் கழுத்தில் கிறிஸ் கத்தி பாய சிறுத்தையும் கீழே சரிந்த்தது சின்னயரும் இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்க அலறியடித்து மனைவி ஓடி வர சின்னையர் என்ற சண்டியரின் உயிர்த் துடிப்பு அடங்கி கொண்டிருந்தது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி