வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

மோகனாங்கி தமிழில் வந்த முதல் வரலாற்று நாவல்

மோகனாங்கி
தமிழில் வந்த முதல் வரலாற்று நாவல்

மோகனாங்கி முதன் முதல் எனக்கு அறிமுகமானது 1975 நான் க.பொ.த.உயர் தரம் படிக்கும்போது என் தமிழ் ஆசான் வ.அ.அவர்களால் .தமிழ் இலக்கிய வரலாறு பாடப் பரப்பில் பேராசிரியர் செல்வநாயம் போகிற போக்கில் குறிப்பிட்டு செல்வார்.இதே காலப் பகுதியில் ''கிரவுஞ்சப் பறவைகள் '' எனும் வரளாற்றுப் புதினத்தை திரு.வ.அ.அவர்கள் வெளியிட்டார்.அது இலங்கையின் அனுராதபுர காலத்தை பிரதிபலித்த நாவல் அந்த வெளியீட்டு விழா மூதூரில் பெருவிழாவாக நடை பெற்றது,அதில் திருகோணமை கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர்.செ.குணரத்தினம் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார் நானும் ஒரு நூல் விமர்சகனாக கலந்து கொண்டேன் .வ.அ.வின் கூற்றுப்படி வரலாற்று நாவல் எப்படி எழுட்குவது என்பதற்கு டன்னுடைய கிரவுஞ்சப் பறவைகள் ஒரு உதாரணம் என்பார்.அந்த நிகழ்வில் பேசிய எஸ்.பொன்னுத்துரை மோகனாங்கி பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கற்கை கற்கிற காலத்தில் நாவல் இலக்கியம் தனிப் பாடமாக இருந்த போது பேராசிரியர் கைலாசபதி விரிவுரைகளின் போது மோகணாங்கி பற்றி பேசப் பட அது பற்றிய ஒரு பாடக் கட்டுரை நான் எழுதவேண்டி இருந்ததனால் மோகனாங்கியை தேடி அலைய வேண்டியிருந்தது.எரிக்கப் படாத யாழ் நூலகம் எனக்கு கை கொடுக்க நான் மோகனாங்கியயை கண்டடைந்தேன் .

வரலாற்று நாவல்கள் என நான் வாசித்த கல்கி ,சாண்டில்யன்,அகிலன் ,ஜெகசிற்பியன்,நா.பார்த்தசாரதி வகையறாக்களில் இருந்து மோகனாங்கி வித்தியாசமான முகம் காட்டியது.பேராசிரியர் கைலாசபதியும் என் மோகனாங்கி பற்றிய குறிப்புகளால் கவரப் பட்டார் என்றெ சொல்ல வேண்டும் என் கட்டுரைக்கு நல்ல புள்ளிகள் கிடைத்தன..அதோடு நான் மோகனாங்கியயை மறந்து போனேன்.
பின்னைய நாட்களில் என் வாசிப்பு அனுபவம் அகன்ற நாட்களில் மோகனாங்கியயை மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட போது தேடினேன் மோகனாங்கி என் கைகளுக்கு கிடைக்கவில்லை.ஆனால் அண்மையில் சத்தியதேவன் சற்குணம் அவர்களின் முக நூல் வழி செய்தி மோகனாங்கி மீண்டும் வருகிறாள் என்பது மனதுக்கு ஆவலையும் அதே வேளையில் ஒரு தமிழ் வாசகன் என்ற வகையில் சந்தோசத்தையும் தந்தது.
தமிழ் நாவல் பற்றி எழுதிய பலரும் மோகனாங்கியயை பெரிது படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்.ஆனாலும் அண்மையில் வந்த சில கட்டுரைகள் மோகனாங்கியின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியயையும் தெளிவு படுத்துவது இங்கு விதந்துரைக்கப் பட வேண்டியது.

தினகரன் வாரமஞ்சரியில் முருகேசு ரவீந்திரன் தன் கட்டுரையில் மோகனாங்கி பற்றி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
''தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்று நாவலாக ‘மோகனாங்கி’ கருதப்படுகின்றது. திருகோணமலையைச் சேர்ந்த நி. த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரே இந்த நாவலை எழுதினார். தமிழில் முதலாவது வரலாற்று நாவலை வெளிக்கொண்டுவந்த பெருமை ஈழத்து எழுத்தாளருக்குரியதாகும். 1895 ஆம் ஆண்டு மோகனாங்கி நாவல் வெளியாகியிருந்தது. இதன் மூலம் ஈழத்து இலக்கியத் துறையின் தொன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது. தமிழக எழுத்தாளர்கள் வரலாற்று நாவல்களை எழுதுவதற்கு முன்பே எம்மவரான தி. த. சரவணமுத்துப் பிள்ளை மோகனாங்கி என்ற வரலாற்று நாவலை எழுதிவிட்டார்.

மோகனாங்கி நாவல்தான் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாவல் என்பது வரலாற்று ஆய்வாளர்களதும் இலக்கிய திறனாய்வாளர்களது முடிவாகும். திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். இவர் மாநிலக் கல்லூரியில் இருந்த கீழைத்தேயச் சுவடிகள் நூல் நிலையத்தில் நூலகராக பணியாற்றினார். வேலை நேரந் தவிர்ந்த ஓய்வு நேரத்தில் தமிழக நாயக்க மன்னர்களின் வரலாற்றை பொழுது போக்காக படித்தார். பொழுதுபோக்கு பின்னர் ஆய்வாக விரிவடைந்தது.
தி. த. சரணவத்துப்பிள்ளை தனது ஆராய்ச்சியின் முடிவில் வரலாற்று நாவல் ஒன்றை எழுதினார். அதுதான் மோகனாங்கி நாவலாகும். வெறும் கற்பனை நாவலாக இல்லாமல் உண்மைச் சம்பவத்தை சித்திரிக்கும் நாவலாக இது அமைந்துள்ளது.

பதினேழாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் திருச்சியிலிருந்து ஆட்சிபுரிந்தவர் சொக்கநாத நாயக்கர். அப்போது தஞ்சையில் இருந்து ஆண்டவர் விஜயராகவ நாயக்கர். இவருடைய பெண் மோகனாங்கி மீது காதல் கொண்ட சொக்கநாதர், மாறு வேடத்தில் சென்று அவளைச் சந்தித்து உறவாடித் திரும்பி வந்து, முறைப்படி திருமணம் பேசத் தமது முக்கிய மந்திரி ஒருவரைத் தூது அனுப்புகிறார். ஆனால் விஜயராகவரின் இரண்டாவது மனைவியின் தம்பி அழகிரி என்பவன் மோகனாங்கியை மணக்க விரும்புகிறான். இவன் சமஸ்தானம் புரோகிதர் ஒருவரின் துணையோடு சூழ்ச்சிசெய்து தூதுசென்ற மந்திரியை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். இந்தச் சம்பவம் காரணமாக சொக்கநாதர் தஞ்சாவூர் மீது போர் தொடுக்கிறார். கடுமையாக நடந்த இந்தப் போரில் தஞ்சை வீரர்கள் தோல்வியடைய விஜயராகவ நாயக்கரே வாளேந்திவந்து எதிர்த்து, அவரும் மாள அவர் ஏற்கனவே செய்திருந்தபடி அரண்மனைக்கு வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது அந்தப்புரத்தில் உள்ளவர்களும் உயிர் துறக்கிறார்கள்.
போர் தொடுத்த சமயத்தில் மோகனாங்கி தன் தந்தையிடம் சென்று சமாதானம் செய்யுமாறு எவ்வளவோ மன்றாடிக் கேட்கிறாள். ஆனால் விஜயராகவர் பிடிவாதமாயிருக்கிறார். அச்சமயத்தில் மோகனாங்கி தனக்கு சொக்கநாதர் கொடுத்த ராஜமுத்திரை பதித்த மோதிரத்தைக் காட்டி, தான் சொக்கநாதருக்கு மனைவியாகிவிட்டதாக கூறி வெளியேறுகிறாள். அரண்மனை தீக்கிரையாகும் சமயத்தில் மோகனாங்கியும் தோழியும் மாத்திரம் தப்பிவிடுகிறார்கள். போரில் வெற்றிகொண்ட சொக்கநாதர் மோகனாங்கியுடன் திருச்சிக்கு வந்து கோலாகலமாகத் திருமணம் நடத்தி வாழ்கிறார்.

இந்த நாவலை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை தமது சரித்திர ஆய்வுகளில் கண்ட உண்மைச் சம்பவங்களுக்கு உருக்கொடுக்கும் வகையிலேயே எழுதியுள்ளார். கதையம்சங்களுக்கு முக்கியத்துவமும் கலைநயமும் கொண்டு இது எழுதப்பட்டுள்ளது. நட்சினை இந்திய சரித்திரம் எழுதிய பகடாது நரசிம்மலு நாயுடு என்பவர் தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளார். இது மோகனாங்கி நாவலுக்கு பெருமை சேர்க்கிறது. மோகனாங்கி என்ற பாத்திரந்தான் பின்னர் ராணி மங்கம்மாளாக உருப்பெற்றது. இந்த ஒரு பெயர்தான் நாவலில் கண்ட புனைபெயர். மற்றைய கதை மாந்தர் எல்லாரும் சரித்திரத்திலுள்ளவாறே உண்மைப் பெயரோடு உலாவுகிறார்கள்.

மோகனாங்கி என்ற வரலாற்று நாவல் பற்றியும் அதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் டில்லிப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ச. சீனிவாசன் ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம் என்ற தனது நூலிலே விரிவாக எழுதியுள்ளார்''
தம்பு சிவா அவர்கள் தினகரன் பத்திரிகையில் எழுதிய ''முதலாவது வரலாற்று நாவல் மோகனாங்கியே ''என்ற கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுவார்
'' போரில் வெற்றி கொண்ட சொக்கநாதர் மோகனாங்கியுடன் திருச்சிக்கு வந்து கோலாகலமாகத் திருமணம் நடத்தி வாழ்கிறார். இந்த நாவலை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை தமது சரித்திர ஆராய்ச்சியில் கண்ட உண்மைச் சம்பவங்களுக்குக் கலையம்சத்துக்கு மாத்திரம் தேவையான கற்பனை கூட்டி கதை புனைந்தார். ‘தட்சிண இந்திய சரித்திரம்’ எழுதிய பகடாலு நரசிம்மலு நாயுடு என்பவர் ‘தஞ்சை நாயக்கர் வரலாறு’ எழுதும் போது சரவணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ நாவலை தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டது இந்தச் சரித்திர நாவலுக்குப் பெருமை சேர்க்கிறது.

‘சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி என்ற நாவலிலிருந்து தஞ்சை நாயக்க மன்னனின் வரலாற்றையும், அந்த சமஸ்தானத்தில் நடந்த சூழ்ச்சிகள் முதலிய சம்பவங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வரலாற்று நாவல் என்ற வகையில் இலங்கையரான சரவணமுத்துப்பிள்ளை ஒரு தனிப்பட்ட ஒரு சிறந்த முன்னோடியாக விளங்குகிறார்’ என்று பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) பகர்ந்துள்ளார். சிட்டியின் தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலின் வாயிலாக மோகனாங்கி நாவலை ஒரு சிறந்த வரலாற்று நாவலாகக் கொள்ளலாம். எனவே, முதலாவது வரலாற்று நாவலாக மோகனாங்கி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.''
மோகனாங்கி பற்றி தமிழ் விக்கி பீடியா இப்படிச் சொல்கிறது
''மோகனாங்கி என்பது ஈழத்தவரால் எழுதப்பட்ட இரண்டாவது புதினமும், தமிழில் எழுதப்பட்ட முதலாவது வரலாற்றுப் புதினமும் ஆகும். 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளை இப் புதினத்தை எழுதினார். எழுதியவர் ஈழத்தவர் ஆயினும், இதன் கதைக் களமும், எழுது வெளியிட்ட இடமும் தமிழ்நாடே. இப் புதினத்தை எழுதும்போது சரவணமுத்துப்பிள்ளை சென்னை மாநிலக் கல்லூரியில், கீழைத்தேயச் சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இக் காலத்தில் இவர் மேற்கொண்டிருந்த வரலாற்று ஆராய்ச்சியே இவரை இந்த வரலாற்று நூல் எழுதத் தூண்டியதாகக் கருதப்படுகின்றது.

சென்னை இந்து யூனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியான இந்த நூல், தஞ்சையிலும், திருச்சியிலும் நாயக்க மன்னர்கள் ஆட்சிபுரிந்த காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டது. இவ்விரு பகுதிகளின் ஆட்சியாளரிடையே நிகழ்ந்து வந்த அரசியல் போட்டிகளைப் பின்னணியாகக் கொண்டு இப் புதினத்தின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.''
சத்தியதேவன் அவர்கள் ''மோகனாங்கி தமிழின் முதல் வரலாற்று நாவல்''கட்டுரையில் மோகனாங்கி நாவல் எப்படி தமிழ் இலக்கிய ஆய்வாளர் பலரால் கண்டு கொள்ளப் படாமல் விடப் பட்டது என்பதையும் சிட்டி சிவபாதசுந்தரம் போன்றோர் குறிப்பிட்டதையும் தவறான புரிதலுடன் பலர் அதனை ஒரு தழுவல் எனக் குறிப்பிட்டதையும் கமில்ஸ் வலபில் போன்றொர் தங்கள் ஆய்வில் தமிழின் முதல் சர்த்திர நாவல் என்பதை நிறுவியமையயயும் அடிக் குறிப்புகளுடனும் ஆதாரங்களுடனும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த கட்டுரை இப்படி முடிகிறது
''இந்திய அளவில் முதல் 30 சரித்திர நாவல்களுக்குள் உள்ளடங்கும்19 ‘மோகனாங்கி’ நிஜமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட Historical Novel ஆகும்.20 மதுரை நாயக்க மன்னர்களின வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதிய R.சத்தியநாதையரின் ‘மதுரை நாயக்கர் வரலாற்றில்’ குறிப்பிட்டபடி ‘சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் சிக்கல் நிறைந்ததும் சுவாரசியதுமானதுமாக இருக்கின்றது.21 சென்னை கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த தி.த.சரவணமுத்துப்பிள்ள கடுமையான தேடலையும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டே இந்நாவலை எழுதியிருக்கிறார் என்பதை பிற்கால ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
மோகனாங்கி பற்றிய தகவல்களை சரியாக முதலில் கவனப்படுத்தியவர் சில்லையூர் செல்வராசன்.22 தமிழ் வரலாற்று நாவல் உலகில் ‘மோகனாங்கி’யின் முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்தியதில் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் சேர்நது எழுதிய ‘தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி’ நூல் மிக முக்கியமானது.23
மோகனாங்கி கதை நடைபெறும் சொக்கநாத நாயக்கரின் சமகால மிஷனரிமார்களின் குறிப்புகளிலிருந்து மோகனாங்கி நாவலில் சொல்லப்பட்ட தகவல்களும் மிஷனரிமார்களின் குறிப்புகளும் ஒத்துப்போவதை குறிப்பிட்டு மோகனாங்கி வரலாற்று நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது என்பதை அண்மையில் ஆய்வாளர் சுகந்தி கிருஸ்னமாச்சாரி சுட்டிக்காட்டியுள்ளார்.23 ‘தட்சிண இந்திய சரித்திரம்’ எழுதிய ‘பகடாது நரசிம்மலு நாயுடு’ ‘தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக முருகேசு ரவீந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.24
ஆரம்பத்தில் தாம் எழுதிய ஆய்வுகளின் போதாமையை நிவர்த்தி செய்யுமுகமாக ‘The First Six Novels in Tamil’ என்று கட்டுரையை 1986 இல் எழுதிய
Kamil Zvelebil அதில் தொடக்க கால தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்த தமிழறிஞர்கள் விட்டுள்ள இடைவெளிகளும் விடுபடல்களும் தம் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும் தவறாகச் செல்வதற்கு வழிவகுத்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.25 இதன் தொடர்ச்சியாக 'தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியு
ள்ளார்’ என்று ‘மோகனாங்கி’யின் இடத்தையும் தனித்துவத்தையும் சரியாக இனங்கண்டு நிலைநிறுத்தியதில் Kamil Zvelebil இன் The First Six Novels in Tamil’ கட்டுரை முக்கியமானது.26 ஏறக்குறைய ஆயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்தபடி ஒவ்வோராண்டும் மீள்பதிப்பாகும் தமிழ் வரலாற்று நாவல்களுக்கான தொடக்க அடியை எடுத்துவைத்தனூடாக சரவணமுத்துப்பிள்ளை தமிழிலக்கிய உலகின் மடைமாற்றத்தில் தனித்த அடையாளமாகிறார்''

சத்தியதேவன் சற்குணம் அவர்களது பெரு முயற்சியால் நாளை 31.01.2018 மீல் பதிப்பாக வெளிவருகிறது மோகனாங்கி எனும் முதல் தமிழ் சரித்திர நாவல்.என் வாழ்த்துகளும் ஆதரவும் எப்போதும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி