வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday, 12 March 2018

கொட்டியாரத்தின் வரலாற்று தொன்மையில் பெருங்கற்கால பண்பாட்டின் சம்பூர் சுடு மண் சிற்பங்கள்

கொட்டியாரத்தின் வரலாற்று தொன்மையில் பெருங்கற்கால பண்பாட்டின் சம்பூர் சுடு மண் சிற்பங்கள்
பாலசுகுமார் ,முன்னாள் பீடாதிபதி,கலை கலாசார பீடம் ,கிழக்குப் பல்கலைக்கழகம்

கொட்டியாரத்தின் வரலாற்று தொன்மையில் பெருங்கற்கால பண்பாட்டின் சம்பூர் சுடு மண் சிற்பங்கள்
மனித நாகரிகத்தின் தொன்ம வரலாற்றை வரலாற்று காலம் என தொல்லியல் வரலாற்றாரச்சியாளர்கள் பகுத்துள்ளனர்.
1.பழங் கற்காலம்
2.புதிய கற்காலம்
3.இடைகற்காலம்
4.பெருங்கற்காலம்
என வரையறுக்கப் பட்டுள்ளது.
பழங் கற்கால பண்பாட்டில் கற்பாறைகளின் பயன் பாடும் கல்லாயுதங்களும் முக்கியப்பட இடை கற்காலம் புதிய கற் காலம் ஆகியவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளையும் வெளிப்படுத்துவனவாக பாறை ஓவியங்களும் வேட்டை கருவிகளும் உலகெங்கும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
பழங்கற்கால மக்களின் பொருட்கள்

புதிய கற்கால ஓவியங்கள் இத்தகய ஓவியங்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

புதிய கற்கால ஓவியங்கள்
பெருங்கற்கால மக்களின் வாழ்வியலில் புதை குழி கலாசரம் முக்கியப் படுகிறது இதனோடு இணைந்தே சிறிய சுடு மண் சிற்பங்கள் முக்கியப் படுகின்றன.இதனை, 1823ம் ஆண்டு அப்போதைய மலபார் பகுதிகளில் ( கேரள மாநிலம் ), ஆய்வு செய்த பேபிங்டன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் வெளி உலகுக்கு கொண்டு வந்தார். இவர், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகளை, பல்வேறு ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.

தமிழ் நாட்டு சுடு மண் சிற்பம்
இதன்பின்பு தான், இந்தியாவின் தென்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும், தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் பெருங்கற்காலம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்.பல கண்டு பிடிப்புகளையும் செய்தனர்.
தமிழகத்தில், ஈரோடு கொடுமணல், திருநெல்வேலி ஆதிச்சநல்லுார், நீலகிரி தெங்குமரஹாடா, மசினகுடி, கோத்தகிரி, ஏக்குனி, நீர்காய்ச்சிமந்து ஆகிய பகுதிகள், பல்வேறு வரலாற்று பதிவுகளை உள்ளடக்கியதாக உள்ளன.
நீலகிரியில், 1873ம் ஆண்டு அப்போதைய கமிஷனராக இருந்த பிரீக்ஸ் என்ற ஆங்கிலேயர், முதன்முதலாக, பெருங்கற்கால புதை குழிகளில் இருந்த சுடுமண் சிற்பங்கள் மற்றும் கலை பொருட்களை கண்டறிந்தார். அவரால் சேகரிக்கப்பட்ட, புராதாண கலைப்பொருட்கள், சென்னை அரசு அருங்காட்சியத்திலும், லண்டன், பெர்லின் போன்ற பிரபலமான அருங்காட்சியகங்களிலும், இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது

நீலகிரி சுடு மண் சிற்பங்கள்
பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இறந்து விட்டால், அவர்களின் சடலத்தை புதைக்கும்போது, அதனுடன், நம்முடன் வாழும் கால்நடைகள் உட்பட பல்வேறு பொருட்கள், சுடுமண் சிற்பங்களை, போட்டு புதைத்து மரியாதை செலுத்துவதை அக்கால மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால், பெரும்பாலான புதை குழிகளில் இத்தகைய சிற்பங்கள் காணப்படுகின்றன.
கடந்த,1983, 84, 88, 91 ஆகிய ஆண்டுகளில், அமெரிக்காவில் உள்ள, சிக்காகோ மெக்சிகன் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலன் சாகிரல் என்பவர், தமிழ் நாட்டுக்கு வந்து, பெருங்கற்கால புதை குழிகள் பற்றி ஆய்வு செய்து, பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவை மாணவர்களுக்கான பாடங்களாகவும் உள்ளன.மேலும், இந்த கலாச்சார பரிமாற்றங்கள் அக்காலத்தில், நீலகிரியில் உள்ள மாயார் பள்ளத்தாக்கு; கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதிகளில் இருந்து தான், இந்த கலாச்சாரம் இங்கு பரவியுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்தது.
இந்த ஆண்டில் நீலகிரி மலை பகுதியில் தொல்லியல் ஆர்வலர் ரவிச்சந்தரன் மற்றும் குழுவினரால், உடைந்த நிலையில் சிதறி கிடந்த சுடுமண் சிற்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அப்போது, அப்பகுதியில் உள்ள புதைக்குழி, கிணறு வடிவ கல்லறை போன்றவை 2000 ஆண்டுகளை கடந்தும், பாதுகாப்புடன் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணறு வடிவ கல்லறையில் கிடைக்கப்பெற்ற, பெருங்கற்கால மக்களின், சுடுமண் சிற்பங்களில், எருமை, யானை, ஆடு, சிறிய சட்டிகள் ஆகியவை இருந்ததை ஆறிய முடிகிறது
இலங்கையில் தமிழர்களின் பூர்விக வாழ்விடங்களில் இத்தகய சுடுமண் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன
1960களில் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் ஸ்ரீலங்கா தொல்லியல் ஆணையாளர் கலாநிதி எஸ்.யு. தெரனியகலை சுடுமண் சிற்பங்களை கண்டெடுத்தார். இவையுடன் ஒத்தவையாக ஆனைவிழுந்தான் சிற்பங்கள் இருக்கின்றன. மல்லாவி சிற்பங்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட உள்ளன.
உருத்திரபுர சிற்பங்கள் 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டவை என எஸ்.யு தெரனியகலை தெரிவித்திருந்தார். இவற்றைவிட கிளிநொச்சி உருத்திரபுரத்தில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியா நகர ஸ்ரீலங்கா தொல்பொருட்கலைச்சாலையில் உள்ளன
2004ம் ஆண்டில் மல்லாவியிலும் இத்தகய சிற்பங்களின் கண்டு பிடிப்பு நிகழ்ந்தது

மல்லாவி சிற்பங்கள்
.மல்லாவியின் வயற்பகுதி ஒன்றில் வரம்புப் பாதை துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் சுடுமண் சிற்பங்கள்,மக்களால் கண்டெடுக்கப்பட்டன. பாதை துப்பரவுப் பணியின்போது மண்வெட்டிகளால் பொருட்கள் உடைபட்டுமுள்ளன. ஆனாலும் பின்னர் அவை பாதுகாப்பான முறயில் கையாளப்பட்டன..


இந்த சுடுமண் சிற்பங்கள் பெண் உருவங்களாக உள்ளன. அங்கு 5 மனித உருவங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று தலைப்பகுதியாக மட்டும் கிடைத்தது. மற்றொன்று தலைமுதல் இடுப்புவரையான பகுதியுடன் கிடைத்திருக்கிறது, இன்னொன்று தலை முதல் அடி வரையும்,மற்றொன்று தலை முதல் மார்பு வரையும், வேறொன்று முண்டமாகவும் கிடைத்துள்ளன


இதனைப் போலவே 2011ம் ஆண்டில் சாஸ்திரி கூழாங்குளத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றிற்கு மண் இடுவதற்காக அருகிலுள்ள குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பரவும் போது அவற்றிலிருந்து சில மண் சிற்பங்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.

சாஸ்திரி கூழாங்குழ சுடு மண் சிற்பங்கள்
பின்னர் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் தலைமையிலான குழு வவுனியா சென்று குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் பொருமளுவு சிற்பங்களை ஆய்வுக்காக யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திற்கு கொண்டு சென்றனர்


இது குறித்து பேராசிரியர் புஸ்பரட்ணம் கருத்துப் பகர்கையில் இற்றைக்கு இரண்டாயிரத்து 200 வருடங்களுக்கு முற்பட்ட சிற்பங்களே அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப்போன்று அந்த சிற்ப அமைவுகளைப்போன்றே இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களும் உள்ளன என்று குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது
இந்த ஒரு பின்னணியிலேயே நாம் சம்பூரில் அண்மையில் கண்டெடுக்கப் பட்ட சுடு மண் சிற்பங்களையும் பார்க்க வேண்டும்.

சம்பூர் சுடு மண் சிற்பங்கள்
சம்பூரை உள்ளடக்கிய கொட்டியார பிரதேசம் தமிழ் மக்களின் பல்லாயிரம் வருச பழமை வரலாற்று சான்றுகளை கொண்டுள்ளது. வெருகல் பிரதேசத்து முதுமக்கள் தாழி,வெருகல் மலை பிராமி கல்வெட்டுகள் ,கட்டைபறிச்சான் கச்சகொடிமலை தமிழ் பிராமி கல்வெட்டு ,சேனையூர் பெண்டுகள் சேனை தொல் அடையாளங்கள் என நீண்டு செல்லும் தொல்லியல் சான்றுகளில் முக்கிய திருப்பு முனையாக சம்பூரில் கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்கள் உள்ளன


ஏனய இடங்களில் காணப் பட்டதை விட இதில் செய் நேர்த்தி காணப் படுவதோடு பல ஒற்றுமைகளையும் காணலாம்.
இவை பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய ஆதாரங்களே. தமிழர்களின் மிகத்தொன்மையான கலை வடிவங்கள் சுடுமண் ஆக்கங்களிலேயே உள்ளன. சிந்துவெளி முதல் தமிழகம் ஆதிச்ச நல்லூர் வரை அதன் நீட்சி வன்னியிலும் இன்று சம்பூர் வரை நீண்டுள்ளதை இது நிருபிக்கிறது.தமிழரின் தொன்மை கலை சான்றுகளாக சுடுமண் சிற்பங்களே உள்ளன .அதுவே நம் பூர்விக கலை.அதன் தொடர்ச்சியே கற் சிற்பங்கள் .


சம்பூர் சுடு மண் சிற்பங்களில் உள்ள பெணுருவங்கள்,யானையின் வடிவம் முக உருவங்கள் விளக்கின் தாழ்பாள் போன்றவை தமிழரின் தொன்ம சிற்பக் கலையின் சுவடுகளறதோடு ஒரு தாழியின் எஞ்சிய பகுதியும் இங்கு காணப் படுகிறது.கிட்டத்தட்ட 2500 வருசங்களுக்கு முந்தய ஒரு நாகரிகத்தின் எஞ்சிய பதிவுகளாகவே இவற்றை இனங்கான முடியும் .

நீலகிரியில் கண்டெடுக்கப் பட்ட சிற்பங்களுக்கும் சம்பூர் சிற்பங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை அதன் அமைப்பிலும் நேர்த்தியிலும் தெரிகிறது.
இதில் ஆர்வத்தோடு செயல் படும் மதுரன்.ரதன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி