வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday, 3 March 2018

2.சேனையூர்ப் பள்ளு



2.சேனையூர்ப் பள்ளு

காற்றெறிந்து மின்னல் வீசி மழை அடிக்குதே
சேனையூரின் கேணியெல்லாம் பொங்கி வழியுதே
நேற்றிருந்த கவைலையெல்லாம் ஓடி மறையுதே
நெல் வயல்கள் உழவுக்காக சேற்றை
இறைக்குதே

இளக்கந்தை கடல் முழக்கம் இங்கு
கேட்குதே
இன்னும் மழை இன்னும் மழை என்று
சொல்லுதே
மயிலி மலைக் குளத்தோரம் மயில்கள்
கூடுதே
மழையின் சாரல் கண்டு கண்டு ஆடி

மகிழுதே



ஆனைக்கல் வெளியெங்கும் கொக்கு
நீளுதே
குளத்து நீரில் மீன்கள் எல்லாம் துள்ளி
வருகுதே
அளை வெட்டி சேற்று நீர் வடிந்து
செல்லுதே
அழகூரும் நெல் வயல்கள் முகம்
காட்டுதே

ஊற்றடியில் வெள்ளம் பாய்ந்து ஓடி
வருகுதே
கரச்சையெங்கும் நண்டூர்ந்து நளினம்
காட்டுதே
சேனையூரின் துறையெல்லாம் சிரித்து
மகிழுதே
ஏனையோர்க்கும் நல்ல நல்ல சேதி
சொல்லுதே

நன்னித் துறை கடந்து நாங்கள் நடந்து
செல்கிறோம்
பூவரசக் குடா ஏறி வயல்கள்
காண்கிறோம்
சோலைப் பள்ளமதை சுற்றி
வருகிறோம்
சொந்த நிலம் கண்டு கண்டு மகிழ்ந்து வருகிறோம்

அலையடித்து மழை வெள்ளம் ஓடி
வருகுதே
ஆசை தீர நனைந்து மகிழ்ந்து ஆடி
மகிழ்கிறோம்
மழை வீரம் கண்டு நாங்கள் பார்த்து
செழிக்கிறோம்
சேனையூரை பாடிப் பாடி ஆடி
மகிழ்கிறோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி